அனுபவம் புதுமை 21: தேவை,சாப்பாடு மீதும் ஒரு கண்!
Published : 07 Sep 2018 10:35 IST
கா. கார்த்திகேயன்
இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலோனர் எந்தெந்த விஷயங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதில் தெளிவே இல்லாமல் இருக்கிறார்கள். ஓர் உடையைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால்கூட மணிக்கணக்காக நேரத்தைச் செலவழிக்கத் தயாராக இருக்கிறார்கள்.
புது பைக்கை வாங்க வேண்டுமென்றால்கூட, டிசைன், மாடல், அதிலுள்ள வசதிகள் என ஒவ்வொன்றையும் ஆராய்ந்து வாங்குகிறார்கள். மொபைல்போன் வாங்கக்கூட இணையத்தில் நீண்ட நேரம் உலவுகிறார்கள். ஆனால், உணவு விஷயத்தில் மட்டும் அசட்டையாக இருக்கிறார்கள்.
காலை உணவுவை சர்வ சாதாரணமாகத் தவிர்க்கிறார்கள். அப்படியே சாப்பிட்டாலும் அவசரகதியில் சாப்பிட்டுவிட்டு ஓடுகிறார்கள். உணவைக்கூட ஆற அமர்ந்து சாப்பிட அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. உணவு வேளையில்கூட உடலுக்குத் தேவையான சமச்சீர் உணவைத் தவிர்த்துவிட்டு சிப்ஸ், பீட்சா, பர்கர் போன்ற உணவு வகைகளை உண்ணவே பலரும் முன்னுரிமை கொடுப்பதை அதிகம் பார்க்க முடிகிறது.
பெரும்பாலான இளைஞர்கள் ருசிக்கு மயங்கி, சத்தான ஆகாரங்களை ஒதுக்கித் தள்ளிவிடுகிறார்கள். இந்த உடலே இன்ஜின் போன்றதுதான். அந்த இன்ஜின் சிறப்பாகச் செயல்பட சத்தான உணவு உடலுக்குத் தேவை என்பதை இந்தக் கால இளைஞர்கள் மறந்துவிடுகிறார்கள். விளைவு, உடல் பருமன் பிரச்சினை, அல்சர், ஒவ்வாமை எனச் சின்ன வயதிலேயே பாதிக்கப்பட்டுவிடுகிறார்கள்.
உணவு மீதான மனோபாவத்தை அவசியம் மாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் இந்தக் கால இளைஞர்கள் இருக்கிறார்கள். மாறிவிட்ட இளைஞர்களின் உணவுக் கலாச்சாரத்தைக் கவலையுடன் பார்க்கும் பெற்றோர்கள் வீட்டுக்குவீடு இருக்கவே செய்கிறார்கள். அதுபோன்றவர்களின் அறிவுரையைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், உணவு மீதான அக்கறையின்மையை நாகரிகத்தின் வெளிப்பாடாகக் கருதுகிறார்கள். அப்படிப்பட்ட இளைஞர்களைப் பரவலாகப் பார்க்க முடிகிறது.
இதுதொடர்பான விஷயங்களை அணுகுகிறபோதெல்லாம் என் நினைவுக்கு என் மாணவி ரக் ஷனா நினைவுக்கு வருவார். வீட்டில் வசதிக்குக் குறைச்சலில்லை. நன்றாகப் படிப்பவரும்கூட. ஆனால், அடிக்கடி உடல்நலக் குறைவு என்று விடுப்பு எடுத்துக்கொள்வார். ஒரு முறை வகுப்பில் மயங்கி விழுந்துவிட்டபோது பரபரவென முதல் உதவிகளைச் செய்தோம். கண்விழித்த பிறகு, “என்ன ஆச்சு” என்று பதற்றத்துடன் கேட்டால், “காலையில சாப்பிடலை சார்” சாதாரணமாகச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.
கல்லூரிக்குக் கொண்டுவரும் உணவைக்கூடச் சாப்பிடாமல் திரும்பவும் வீட்டுக்கே கொண்டுசெல்வதைப் பெருமையாக நினைப்பவர் இவர். பார்ப்பதற்கு எப்போதுமே களைப்பாக இருப்பதுபோலவே தெரிவார் ரக்ஷனா. அவரைப் பார்க்கும்போதெல்லாம், “உணவின் மீதான அக்கறையின்மை உடம்புக்குப் பெரிய பிரச்சினையைத் தந்துவிடும், நேரத்துக்கு சாப்பிடு” என்று சொல்வதை வாடிக்கையாகவே வைத்திருந்தேன். ஆனால், இந்த அறிவுரைகள் எல்லாம் காற்றில்தான் கலந்ததே தவிர, அவர் காதில் ஏறவே இல்லை.
இறுதியாண்டின் முடிவில் வளாகத் தேர்வில் நல்ல வேலை கிடைத்ததை மகிழ்ச்சியுடன் என்னிடம் தெரிவித்து வாழ்த்து பெற்றுச் சென்றார். அப்போதும் அவருடைய தோழிகள் அவரைக் கலாய்த்துக்கொண்டிருந்தார்கள். “சார், வேலைக்குச் சேர்ந்த உடனே இவளுக்கு அங்கீகாரம் கிடைச்சிடும். சாப்பிட்டாமல் கூட எப்பவும் வேலை பார்க்கிறதால புரோமோஷன், இன்கிரிமென்ட் எல்லாம் சீக்கிரம் எதிர்பார்க்கலாம்” என்ற நையாண்டிக்குப் பதில் ஏதும் சொல்லாமல் சிரித்தபடியே விடைபெற்றார்.
இதன் பிறகு ரக்ஷனாவை ஆறு மாதம் கழித்து ஒரு மருத்துவமனையில், உடல் மெலிந்து, முகம் பொலிவிழந்த நிலையில்தான் பார்த்தேன். பார்க்கும்போதே நோயில் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. மருத்துவரைப் பார்த்துவிட்டு என்னைக் கவனிக்காமல் புறப்பட்டுக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் விசாரிப்பது அவருக்குத் தொந்தரவாக இருக்கும் எனக் கருதி அவரிடம் பேசுவதைத் தவிர்த்துவிட்டேன்.
என் நண்பரான மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் வருத்தப்பட்டு சொன்ன விஷயம் இளைஞர்களின் உணவுப் பழக்கத்தைப் பற்றித்தான். “இப்பதான் ஒரு பொண்ணு சிகிச்சைக்கு வந்தாங்க. சரியான நேரத்துக்குச் சாப்பிடாமல் அல்சர் பிரச்சினை வந்திருக்கு. அடிக்கடி மயக்கம் வேற. இதனால் அலுவலகத்துக்கு அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை. சொன்ன நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் போயிருக்கு.
கோபப்பட்ட நிர்வாகம், 'முதல்ல ஹெல்த்த பார்த்துக்குங்க, வேலையை ராஜினாமா பண்ணிடுங்க’ன்னு சொல்லி அனுப்பிவிட்டது. மூணு மாசம் முழுமையா ஓய்வு எடுத்த பிறகு வேற வேலைக்கு முயற்சி பண்ணுங்கன்னு அந்தப் பெண்ணிடமும் அவருடைய அம்மாவிடமும் சொல்லியிருக்கேன்” என்று சொன்னார்.
திறமை, படிப்பு எல்லாம் இருந்தும் ரக்ஷனாவின் வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக இருந்தது அவருடைய உணவு மீதான புரிதலின்மைதான். நமக்குப் பயனளிக்கிற பல உணவு வகை நாவுக்குப் பிடிப்பதாக இல்லை. அதேநேரம் சுவையாக இருக்கிற சில உணவு வகை நம் ஆரோக்கியத்துக்கு ஏற்புடையதாக இல்லை.
இந்த வேறுபாட்டைப் புரிந்துகொண்டு நம்மைச் சரிசெய்து கொள்வது அவசியம். செவிக்கும் வயிற்றுக்கும் சரியான உணவே வாழ்க்கையில் நாம் பெறத் துடிக்கும் நிரந்தர வெற்றிக்கு அஸ்திவாரம். உணவைப் பற்றிய உணர்வில் சரியான திசையில் இளைஞர்கள் பயணிப்பதே இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய தேவை.
(அனுபவம் பேசும்)
கட்டுரையாளர்: மேலாண்மை பேராசிரியர்
தொடர்புக்கு:karthikk_77@yahoo.com
ஓவியம்: பாலசுப்பிரமணியன்
No comments:
Post a Comment