Friday, October 5, 2018

வீட்டில் ஏ.சி விபத்தை தவிர்க்க சில வழிமுறைகள்

Published : 03 Oct 2018 08:12 IST

இ.ராமகிருஷ்ணன்சென்னை





கோயம்பேட்டில் வீட்டிலுள்ள ஏ.சி இயந்திரத்தில் காஸ் கசிவு ஏற்பட்டு கணவன், மனைவி, மகன் ஆகிய 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற விபத்துகள் நிகழா மல் இருக்க ஏசி இயந்திரத்தை முறையாக பராமரிக்க வேண் டும், தரமான உதிரிபாகங் களை வாங்கி பொருத்த வேண்டும் என இத்துறையின் வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

வீட்டில் ஏ.சி விபத்து ஏற்படாத வண்ணம் அதைப் பராமரிக்கும் முறை குறித்து மயிலாப்பூரைச் சேர்ந்த கண்ணன் என்ற ஏ.சி.மெக்கானிக் கூறியதாவது:

வீட்டில் பொருத்தப்பட்டுள்ள ஏ.சி இயல்பான நிலையில்தான் இருக்கிறதா எனப் பெரும்பாலும் யாரும் கவனிப்பதில்லை. பழுதா கிப் பயன்படுத்த முடியாமல் போனால் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். பழுதடையா மலே கூட ஏ.சி உயிர் இழப்பை ஏற்படுத்தும்.

ஏ.சி வாங்குபவர்கள், வீட்டில் அது பொருத்தப்படவிருக்கும் அறையின் அளவை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். 1.5 டன், 2 டன், 3 டன் என்ற விகிதத்தில் ஏ.சி. இயந்திரங்கள் உள்ளன. 150 சதுர அடி அறைகளுக்கு 1.5 டன் அளவுள்ள ஏ.சியே போதுமானது. பெரிய ஹால் என்றால் 3 டன் தேவைப்படும்.

உதிரிபாகங்களை குறைந்த விலையில் வாங்கக்கூடாது. நல்ல விலையில் தரமான உதிரி பாகங்களை வாங்க வேண்டும். ஏ.சி வாங்கியதும் அதற்கேற்ற தரமான ப்யூஸ் ஒயர், ‘டிரிப்பர்’ போன்றவற்றை பொருத்த வேண்டும். ஏ.சி. 1.5 டன் கொண்டதெனில், 20 ஆம்ப்ஸ் ஒயரினால் ஆன ப்யூஸை பொருத்த வேண்டும். இதேபோல் டிரிப்பரும் 20 ஆம்ப்ஸ் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மின் சப்ளையில் கோளாறு எற்பட்டாலும் டிரிப்பர் தானாக ஆஃப் ஆகி ஏ.சியைக் காப்பாற் றும். தரமான நிறுவனங்களின் ஸ்டெபிலைசர்களை வாங்க வேண்டும்.

ஏ.சி.யை எப்போதும் 23 டிகிரிக்கு கீழ் வைக்கக்கூடாது. அதற்கும் குறைவாகக் கொண்டு போகும்போது ஏ.சி அதிக பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும். அப்போது கம்ப்ரஸர், காயில், ஏ.சிக்கு செல்லும் ஒயர் என எல்லா பகுதியும் சூடாகிவிடும். இதனால் தீப்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. எக்காரணம் கொண்டும் 16 டிகிரிக்கு ஏ.சி-யை கொண்டு போகக்கூடாது.

வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி-க்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சர்வீஸ் செய்ய வேண்டும். ஸ்பிலிட் ஏ.சி. எனில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஃபில்டரை கழற்றி தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து மாட்ட வேண்டும். ஏ.சி. ஓடிக் கொண்டிருக்கும்போதே ரூம் ஸ்பிரே அடிப்பது தவறு. பெர்ஃப்யூம்கள் ஏ.சி.யின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கி, விரைவில் ஏ.சி இயந்திரத்தை பழுதாக்கி விடும். நல்ல குளுமை வேண்டும் என்பதற்காக ஏ.சி. ஓடிக்கொண்டிருக்கும்போதே மின் விசிறியை போடக்கூடாது. ஏசியை ஆஃப் செய்யும்போது ரிமோட்டில் மட்டும் ஆஃப் செய்ய கூடாது. சுவிட்சிலும் ஆஃப் செய்ய வேண்டும். சிறுவர்கள் கையில் ஏசிக்கான ரிமோட்டை கொடுக்க கூடாது. அவர்கள் அடிக்கடி அதை இயக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ ஆனந்த் பிரதாப் கூறும்போது, “வெளியில் இருக்கும்போது ஆக்ஸிஜன் அளவு அதிகமாக இருக்கும். அறைக்குள் செல்லும்போது ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும். அதனால், அறையின் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்துவிட்டு தூங்குவது நல்லது. ஏ.சி போட்டு தூங்கும்போது அதை இரவு முழுவதும் இயங்க வைக்காமல், 3 மணிநேரம் வரை ஏசியை ஆன் செய்து விடலாம். ஆட்டோமேடிக் சிஸ்டத்தை பயன்படுத்தலாம். ஏசியை சரியான கால அளவில் சர்வீஸ் செய்ய வேண்டும். இல்லையென்றால் வெளியில் இருக்கும் நச்சு வாயு ஏசியின் குளிர்ந்த காற்றுடன் கலந்து விடும். அந்த காற்றை சுவாசிக்கும்போது மயக்கம், தலை சுற்றல் ஏற்படும். சில நேரம் உயிர் இழப்பைக் கூட ஏற்படுத்தும்" என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.09.2024