காலா காந்தியை மறந்துவிட்டோமா?
Published : 02 Oct 2018 18:07 IST
பால்நிலவன்
இன்று காமராஜர் நினைவு தினம். முன்பெல்லாம் காந்தி என்று சொன்னவுடன் கூடவே காமராஜரும் நம் நினைவுக்கு வந்துவிடுவார். ஆனால் இன்று இந்தியா போகிற போக்கில் காந்தியை நினைப்பதே பெரும்பாடாகிவிட்டது.
ஒருவேளை காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா பெரும் உற்சாகத்தோடு பல்வேறு சிறப்பம்சங்களோடு நாடு தழுவிய அளவில் கொண்டாடப்பட்டிருக்கக் கூடும்.
தனது சுகதுக்கங்களையெல்லாம் மறந்து நாட்டுக்காகவே வாழ்ந்து நாட்டுக்காகவே உயிர் துறந்தவர் காந்தி. அத்தகைய தேசப்பிதாவையே இன்றைக்கு பெயரளவுக்குத்தான் நினைவுகூர வேண்டிய நிலை. அப்படியிருக்க காமராஜரை எப்படி நினைவுவைத்திருப்பது என்று ஒரு கேள்வி எழுகிறது. இதில் கொடுமை என்னவென்றால் குறைந்தபட்சம் நாட்டுக்காக உழைத்த தலைவர்களின் பிறப்பு இறப்பு தினங்களில் அவர்களை நினைப்பதுகூட பெரும் சுமையாக கருதும் நிலை இன்று.
“காமராசர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி”– என்று சொன்னவர் எம்.ஜி.ஆர். அத்தகைய எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கோலாகலமாக முடிவடைந்து சில தினங்களே ஆகியுள்ளன. காமராஜரை இன்று எத்தனை அரசியல் தலைவர்கள் ஞாபகம் வைத்திருக்கிறார்கள்.
நினைவுகூர்தல் என்பது ஏதோ மூத்தோர்களுக்கு சடங்கு செய்வது என்பதுபோலல்ல. அவர்களை நினைவுகூர்வதன்மூலம் இன்றைய நமது பாதையைச் சரிபார்ப்பது அல்லது சரிசெய்துகொள்வது.
1975-ல் அக்டோபர் மாதத்தில் இதே தினத்தில் காமராஜர் மறைந்தார். அவரது மறைவுக்கு நாடே கண்ணீர் சிந்தியது. ஏனெனில் அப்போது அடுத்தடுத்து நடந்துகொண்டிருந்த அரசியல் சம்பவங்களும் அதைத் தொடர்ந்து வந்த அவரது மரணமும் மக்களின் இதயத்தை உலுக்கியெடுத்தது.
அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலைப் பிரகனடத்தை கடுமையாக எதிர்த்த முக்கிய தலைவர்களில் ஒருவர் காமராஜர். இந்தி எதிர்ப்புப்போராட்டத்தின்போதே இந்திரா காந்தியோடு முரண்படவேண்டி வந்தது காமராஜருக்கு. தனது தேர்தல் முடிவு செல்லாது என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட உடனே நாடு முழுவதும் நெருக்கடிநிலையைப் பிரகனடத்தை அறிவித்த இந்திரா காந்தியின் செயலில் சிறிதும் உடன்பாடில்லாமல் போனது அவருக்கு.
ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யம் உடைந்து துண்டுதுண்டாக போனதுபோல் ஆனது. காங்கிரஸ் பேரியக்கத்தின் பாதையும் சிதைந்தது. சிண்டிகேட் இன்டிகேட் என இரண்டாகப் பிரிந்ததும்.... அதன்பிறகு அது இன்னும் பல்வேறு துண்டுகளாகப் பிரிந்துபோனது வேறு விஷயம். இதில் யாருக்கு இழப்பு ஏற்பட்டதோ இல்லையோ, யாரைத் தோற்கடிக்கிறோம் என்று தெரியாமலேயே தமிழகம் ஒரு மாபெரும் முதல்வரை, மாபெரும் தலைவரை இழந்தது.
தேசத்தின் எதிர்காலம் குறித்து பெரும் கவலைக்கு ஆளான காமராஜர் அக்டோபர் 2-ம் தேதியான காந்தி பிறந்த நாளில் மறைந்தார். அவரது மரணத்தின்போது ராணுவ மரியாதைக்கு ஏற்பாடு செய்தார் முதல்வர் கருணாநிதி. பிரதமர் இந்திரா காந்தியும் காமராஜரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டார்.
காமராஜரின் மரணத்திற்காக நாடே கண்ணீர்விட்டு அழுதது. அதற்குக் காரணம் ஒரு நல்ல தலைவரைத் தோற்கடித்துவிட்டோமே என்ற மக்களின் குற்ற உணர்வும் அதில் கலந்திருந்தது.
இந்திரா காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததே காமராஜர் என்பது மட்டுமல்ல... காலா காந்தி என வட இந்திய மக்களால் உள்ளன்போடு அழைக்கப்பட்டவர் காமராஜர். காலா என்றால் கருப்பு. அத்தகைய கருப்பு காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேசிய அளவில் பணியாற்றிய காலத்தில் நேருவுக்குப் பிறகு தனக்கு கிடைத்த பிரதமர் பதவியை வேண்டாம் என்று மறுத்தார். நேருவின் மகள் இந்திராவே அதற்கு பொருத்தமானவர் என்று முன்மொழிந்தார்.
கருப்பு காந்தியான காமராஜர், மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் இறந்தார். பல வருடங்களாக அக்.2க்கு இருவரது புகைப்படங்களையும் வைத்து கடைவீதிகளில், பொது இடங்களில், கல்வி நிலையங்களில், உள்ளாட்சி அலுவலகங்களில் வழிபட்ட காலங்களும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கிவிட்டன.
இந்திரா காந்தியின் வீழ்ச்சியும் வெற்றியும்
நெருக்கடி நிலைக்குப் பிறகு மக்கள் இந்திரா காந்தியை மக்கள் அரியணையிலிருந்து வீழ்த்தியதும், மொரார்ஜி தேசாயை நாட்டின் பிரதமராக்கியதும்... அதன்பிறகு தனது தவற்றை உணர்ந்துவிட்டதாகவும் நெருக்கடி நிலை கொண்டு வந்தது தவறுதான் என மக்களிடம் இந்திரா காந்தி மன்னிப்புகேட்ட பிறகு மீண்டும் அவரிடம் ஆட்சியை மக்கள் ஒப்படைத்ததும் வரலாறு.
ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்கள், விவசாய உற்பத்திக்குத் தேவையான ஏராளமான நீர்த்தேக்க அணைகள், பிரம்மாண்டமான மின்சக்தி திட்டங்கள் என இன்றுவரை தமிழகம் ஒளிர காரணமாக இருந்த காமராஜர் இறந்தபோது அவர் விட்டுச்சென்றது 4 கதர் வேட்டி, சட்டை, ரூ.350 மட்டுமில்லை... தன்னலம் கருதாமல் நாட்டுக்கு உழைக்கும் நல்லெண்ணங்களையும்தான்.
அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சொல்ல எஞ்சி நிற்கப்போவது நிச்சயம் இன்றுள்ள மோசமான அரசியல்வாதிகளோ, வேடிக்கையான இவர்களின் பேச்சுகளோ அல்ல. நாட்டுக்காக உயிர் நீத்த காந்தி, காமராஜர் போன்ற உன்னத மனிதர்களின் உயர்ந்த செயல்களையும் அவர்களைப் பற்றிய நினைவுகளும்தான்.
No comments:
Post a Comment