கண்ணின் மணியே... கண்ணின் மணியே! - இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
Updated : அக் 11, 2018 01:14 | Added : அக் 10, 2018 22:26
'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்'
என்ற பாரதியார் வரிகளுக்கு ஏற்ப பெண்கள் பல்வேறு துறைகளில் சிகரங்களை தொடுகின்றனர். சில கிரிமினல்களால், பெண் குழந்தைகள் வன்கொடுமை செய்யப்படுகின்றனர். பெண் குழந்தைகளை சிசுவிலேயே அழிக்கும் செயலும்வேதனை தருகிறது.
பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுத்தல், உரிமைகளை காத்தல் மற்றும், சாதனைகளை அங்கீகரிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக்., 11ல், சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 'அறிவார்ந்த பெண் படைகளுடன்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் மூலம், இந்த சமூகம் முன்னேறும். இன்றும் சில நாடுகளில் பெண்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும்.
பாலின விகிதம் :
இந்தியாவில் 2011 சென்சஸ் படி, 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் உள்ளனர். ஆனால் 1 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 914 என மிக குறைவாக உள்ளது. இது 2001ல் 927 ஆக இருந்தது. அதே போல தமிழகத்தில் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 995 பெண்களாக உள்ளது. 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாலின விகிதம் 946 ஆக உள்ளது. இதிலிருந்து பெண் குழந்தைகள் காக்கப்பட வேண்டிய அவசியம் புரிகிறது. 'மருமகள் தேவைப்படும் போது, மகள் வேண்டாமா?' என்பதை சிந்திக்க வேண்டும்.
வானிலை மாறுகிறது:
பெண் சிசுக்கொலைகளுக்கு, 'வரதட்சணையே' முக்கிய காரணம். திருமணத்துக்கு பணம் சேர்க்க வேண்டும் என்பதால் பெண் குழந்தைகளை சுமையாக கருதினர். தற்போது இதில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்துள்ளது. வரதட்சணை கேட்காமல் திருமணம் செய்யும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இது பரவலாக வேண்டும். அப்போது பெண் குழந்தை சுமையல்ல, வரம் என்பது அனைவருக்கும் புரியும்.
என்ன செய்யலாம்:
* பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தருதல்.
* பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல்.
* பெண் குழந்தைகள் மீதான உடல், மனம் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை முற்றிலும் தடுத்தல்.
* படிப்பை முடிக்கும் மாணவிகளுக்கு, சுயதொழில் அல்லது வேலைவாய்ப்பு பயிற்சி அளித்தல்.
* பாலின சமத்துவத்தை வலியுறுத்துவது, குழந்தை திருமணத்தை அறவே ஒழிப்பது குடும்பங்களில் மகன்களுக்கு சமமாக மகள்களையும் நடத்த வேண்டும்.
No comments:
Post a Comment