Wednesday, December 19, 2018


காரணமே தெரியாமல் 11 கோடி ரூபாயை இழந்தேன்: விஜய் சேதுபதி பேட்டி

Published : 18 Dec 2018 17:59 IST






விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சீதக்காதி’. பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள இந்தப் படம், வருகிற 20-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. வயதான நாடக நடிகராக நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

இந்நிலையில், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்தார் விஜய் சேதுபதி. அதன் தமிழாக்கம் இது:

2018-ம் வருடத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்கள் நடிப்பு வாழ்க்கையில் மிகவும் உபயோகமான வருடமாக இருந்துள்ளது இல்லையா?

அது எனக்கு சில வருடங்கள் கழித்துதான் தெரியும். நான் 2015 மற்றும் 2012-ம் ஆண்டுகளை பிரியமுடன் நினைத்துப் பார்ப்பேன். எனது ஆரம்ப காலம். 2018-ம் ஆண்டு திருப்திகரமாகத்தான் இருந்தது. மணிரத்னம் படத்தில் நடித்தேன், ரஜினிகாந்துக்கு வில்லனாக ‘பேட்ட’ படத்தில் நடித்தேன், ‘96’ வெற்றியைப் பார்த்தேன், தெலுங்கு படத்திலும் நடித்தேன். இப்போது ‘சீதக்காதி’ வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

எல்லாம் நலமாக உள்ளதா?

மொத்தமாகச் சொல்லிவிட முடியாது. இந்த வருடம்தான் பண ரீதியாக மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தேன். காரணங்கள் என்னவென்றே சரியாகத் தெரியாமல் ரூ. 11 கோடி இழந்தேன்.

‘சீதக்காதி’ உங்களது 25-வது படம். உங்கள் நடிப்பு வாழ்க்கையில் இது எவ்வளவு முக்கியமான தருணமாக இருக்கிறது?

நமது தொழில், நமது பங்கு குறித்து அதிகமாக சந்தோஷப்பட்டால் நாம் மாறிவிடுவோம் என நான் நினைக்கிறேன். எனது அடுத்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்ற நிலையில் நான் இருப்பதே எனக்குப் பெரும் மகிழ்ச்சி. அதிலும் ‘சீதக்காதி’ போன்ற ஒரு படம் எனக்கு 25-வது படமக இருப்பதும் சந்தோஷம். ஆனால், நடிப்பு எளிதான வேலை அல்ல. அதை எளிமையாக மக்களுக்குக் கொண்டு செல்வதென்பது மிகப்பெரிய சவால்.

படத்தில் நீங்கள் வருவது வெறும் 40 நிமிடங்கள்தான். அது உங்களுக்குப் பரவாயில்லையா?

அந்த 40 நிமிடங்கள்தான் இந்தப் படம். அது ஆழமாக இருக்கும். அதன் தாக்கம்தான் மீதிப் படம். படத்தின் கரு கமர்சியலாக இருக்கும். ஆனால், வழக்கமாக சினிமாவில் பார்த்துப் பழக்கப்பட்டதைப் போல இருக்காது.


ப்ராஸ்தடிக் மேக்கப் போட்டு நடித்திருக்கிறீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?

ஆரம்பத்தில் மிகவும் போர் அடித்தது. அதன் பின் மேக்கப் கலைஞர்களுடன் நண்பனாகிவிட்டேன். அந்த மேக்கப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. முதல்முறையாக நான் என்னைக் கண்ணாடியில் பார்த்தபோது, என்னை நானே தொட்டுக் கொண்டேன். ஒரு வயதான நபரைத் தொடுவது போல உணர முடிந்தது.

நகைச்சுவையால்தான் தமிழ் நாடகங்கள் பிரபலமாகியுள்ளன. அங்கிருந்து நடிகர்கள் சின்னத்திரை அல்லது வெள்ளித்திரைக்கு செல்கின்றனர். மேடை நடிப்பு அனுபவம் எவ்வளவு தூரம் ஒரு நடிகருக்கு உபயோகமானதாக இருக்கும்?

ஒவ்வொரு கலை வடிவமும் ஒரு அனுபவம். நீங்கள் அதிலிருந்து என்ன கவனித்து, என்ன கற்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உபயோகம் எல்லாம். ஒத்திகைக்குப் போவது, மேக்கப் போட்டுக் கொள்வது என ஒரு மேடையில் கதாபாத்திரத்துக்காகத் தயாராகும் செயல்முறை என்பது மகிழ்ச்சியானது. ரசிகர்களிடல் இருந்து உடனடியாக எதிர்வினை வரும். ஒரு திரைப்பட நடிகராக நிறைய டேக் வாங்கி, அதில் ஒரு டேக்கில் நன்றாக நடித்திருந்தால் கூட அது காலம் கடந்து நிற்கும். ஆனால், மேடை நடிகர்கள் ஒவ்வொரு முறையும், எந்தவொரு தவறும் செய்யாமல், உற்சாகம் இழக்காமல் நடிக்க வேண்டும்.

விதவிதமான கதாபாத்திரங்களில் நடிப்பதுதான் உங்கள் தனித்தன்மை என்று மக்கள் நினைக்கிறார்கள். உங்கள் தேர்வு எவ்வளவு தூரம் திட்டமிட்டு நடக்கிறது?

நான் நடித்த எந்தப் படத்தையும் நான் எழுதவோ, இயக்கவோ இல்லை எனும்போது, நான் எப்படி அவை நன்றாக வந்ததற்கான பாராட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். எதுவும் திட்டமிடப்பட்டதல்ல. இந்த உலகம் நமக்கு தேர்வுகளைக் கொடுக்கிறது. நமது அனுபவத்தில் பெற்ற அறிவை வைத்து, அதிலிருந்து நாம் தேர்ந்தெடுக்கிறோம்.

ஒரு நடிகராக, எப்போதும் சினிமாவைப் பற்றிதான் நினைத்துக் கொண்டிருப்பீர்களா?

ஒருகட்டத்துக்குப் பிறகு எல்லோருமே அவர்கள் தொழிலோடு ஒன்றிவிடுவார்கள் என நான் நினைக்கிறேன். நடித்து முடித்த பிறகு மானிட்டர் பார்க்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. நான் எனது ஆடை வடிமைப்பாளரைப் பார்க்கச் சொல்லி, அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன். சில நேரங்களில், அது நன்றாக வந்திருக்கிறது என்று அவர் சொன்னாலும் கூட, அதில் நான் நன்றாக நடித்திருக்கிறேனா என்பதை இரவில் தூங்கும்போது நினைத்துப் பார்ப்பேன்.


‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்திருக்கிறீர்கள். அவருக்கு எதிராக நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

ரஜினி போன்ற பெரிய நடிகருக்கு எதிராக வில்லனாக நடிக்கும்போது, நாம் வேகமாக இருக்க வேண்டும். அவர் என்ன செய்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றார்போல நடிக்க வேண்டும். அவருடன் நடிப்பது என்பது நடிப்புக்கான வகுப்பில் கற்றது போல இருந்தது.

பாலிவுட்டில் அற்புதமாக நடித்து வரும் நவாஸுதீன் சித்திக்குடன் ‘பேட்ட’ படத்தில் நடித்த அனுபவம்?

அவர், தனது தொழிலை மதிக்கும் ஒரு உண்மையான மனிதர். எந்தப் படத்திலும் முழு மனதுடன் நடித்தால், அது ரசிகர்களின் மனதைத் தொடும் என்பதை அவர் ஆழமாக நம்புகிறார்.

திடீரென்று ஒருநாள் கண்விழித்துப் பார்க்கும்போது, நீங்கள் பழையபடி கூத்துப்பட்டறையில் கணக்காளராக இருந்தால், யாரும் உங்களை அடையளம் கண்டு கொள்ளவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

நான் நடிகனாவேனா என்பதே எனக்குத் தெரியாது. ஆனால், கண்டிப்பாக நினைத்தபடி இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டை வாங்கி, மனைவி மற்றும் குழந்தைகளோடு திருப்தியாக வாழ்ந்திருப்பேன்.

- ஸ்ரீனிவாச ராமனுஜம், தி இந்து ஆங்கிலம் | தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024