71ஆண்டுக்கு பின் பஸ்:கொண்டாடிய மக்கள்
Updated : டிச 20, 2018 01:34 | Added : டிச 19, 2018 22:38
சிவகங்கை, :சிவகங்கை அருகே சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் கழித்து வலையராதினிப்பட்டி கிராமத்திற்கு முதன்முறையாக பஸ் விடப்பட்டதால், கிராம மக்கள் விழாவாக கொண்டாடினர்.
வலையராதினிப்பட்டியில் 400 குடும்பங்கள் வசிக்கின்றன. பஸ் வசதி இல்லாததால் 60 மாணவர்கள் தினமும் 4 கி.மீ., காட்டுப் பகுதியில் நடந்து கீழப்பூங்குடி பள்ளிக்கு சென்று, வந்தனர். அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
விரக்தி அடைந்த கிராம மக்கள் டிச., 15 ல் அருகே இருக்கும் வெள்ளமலையில் குடியேறினர். அதிகாரிகள் சமரசத்தால் போராட்டத்தை கைவிட்டனர். அக்கிராமத்திற்கு நேற்று காலை அரசு பஸ் இயக்கப்பட்டது. தாசில்தார் ராஜா துவக்கி வைத்தார்.சுதந்திரமடைந்து 71 ஆண்டு கழித்து முதன்முறையாக பஸ் இயக்கப்பட்டதால், கிராமமக்கள் விழாவாக கொண்டாடினர்.
பெண்கள் குலவையிட்டும், கைதட்டியும், ஆண்கள் மாலையிட்டு, பட்டாசு வெடித்தும் வரவேற்றனர். 'பள்ளி மாணவர்கள் வசதிக்காக காலை, மாலை பஸ் இயக்கப்படும்,' என அதிகாரிகள் தெரிவித்தனர். கிராமமக்கள் கூறுகையில், 'பஸ் வசதி கேட்டு 30 ஆண்டுகளாக போராடி வந்தோம். தற்போது தான் விடிவு கிடைத்தது,' என்றனர்.
No comments:
Post a Comment