Thursday, December 20, 2018

செல்லிடப்பேசி பயன்பாடு குறைய வேண்டும்

By வை. இராமச்சந்திரன் | Published on : 20th December 2018 01:32 AM |


இன்றைய உலகில் தவிர்க்க முடியாத ஒன்று செல்லிடப்பேசி. ஒவ்வொருவர் கையிலும் ஆறாவது விரலாக ஒட்டிக்கொண்டிருக்கும் இதற்கு, ஆண்கள், பெண்கள் பேதமின்றி அனைவரையும் தலைகுனிய வைத்த பெருமை உண்டு.

செல்லிடப்பேசி பயன்பாட்டில் மூழ்கிவிடுவோர் ஏராளம். நம் நாட்டில், செல்லிடப்பேசி கோபுரங்கள் அதிகளவில் உள்ளதாலும், மக்களிடம் செல்லிடப்பேசிகள் பயன்பாடு மிகவும் அதிகமாக இருப்பதாலும், அதிக கதிரியக்க வெளிப்பாடு காரணமாக, சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவையினங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்த விழிப்புணர்வை அண்மையில் வெளியான 2.0 திரைப்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பர்.

படத்தைப் பார்க்கும் போது சொல்லப்படும் கருத்து நியாயம்தானே என கூறி, ஆரவாரத்துடன் கைதட்டிய அனைவராலும், செல்லிடப்பேசியைத் தவிர்க்க முடியுமா என்றால், முடியாது என்ற பதிலே வரும். செல்லிடப்பேசியை பயன்படுத்துவோர் ஒருவராலும் கூட அதை விட்டு வெளியே வர முடியாது என்பதுதான் உண்மை. 

நாம் பயன்படுத்தும் செல்லிடப்பேசிகளால் பறவைகளுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதருக்கும் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது என்பதையும் உணர வேண்டும்.

தரைவழி தொலைபேசியில், வீட்டில் இருக்கும் போது மட்டுமே தொடர்பு கொள்ளமுடியும். வெளியில் சென்றால் எந்தத் தகவல் தொடர்பும் இருக்காது. இதனால் ஏற்பட்ட விளைவுதான் செல்லிடப்பேசி உருவாக்கம். அதாவது, நாம் வீட்டை விட்டோ, அலுவலகம், கடைகளை விட்டோ வெளியே சென்றபின் மற்றவர்களோடு தொடர்பு கொள்வதற்காகத்தான்.

தரைவழி தொலைபேசி வீட்டில் இருக்கும் போதும், செல்லிடப்பேசி வெளியில் செல்லும் போதும் பயன்படுத்தும் வகையிலேயே இது உருவாக்கப்பட்டது.
ஆனால் நாளடைவில், செல்லிடப்பேசியை தயாரிக்கும் நிறுவனங்கள், சந்தையில் தங்கள் நிறுவன தயாரிப்பு அதிகளவில் விற்க வேண்டும் என்பதற்காக அறிதிறன் பேசியை (ஸ்மார்ட் போன்) அறிமுகம் செய்தன.
அறிதிறன் பேசி வந்த பிறகு, பேசுவதற்கு பயன்படுவதைக் காட்டிலும், விடியோ பார்த்தல், சாட்டிங், இணைய வசதி, கேம்ஸ்களை, முகநூல், கட்செவி அஞ்சல், சுட்டுரை, இன்ஸ்டாகிராம் என அதன் பயன்பாடு பலமடங்கு அதிகரித்தது. 

மழலைகள் கூட பெற்றோரிடம் செல்லிடப்பேசியை வாங்கி, அவர்களாகவே கேம்ஸ்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கிவிடுகின்றனர்.
விளைவு, ஒவ்வொரு செல்லிடப்பேசி நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்கு எளிதாகவும், வீட்டுக்குள் இருந்தாலும் கவரேஜ் எளிதில் கிடைக்கும் வகையிலும், இன்டர்நெட் தொடர்பு விரைவாக கிடைக்கும் வகையிலும், தங்கள் கோபுரங்களிலிருந்து ரேடியேஷனை கூட்டிவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுகிறது. 

ரேடியேஷனை அதிகரித்து வெளியிடுவது செல்லிடப்பேசி பயன்பாட்டாளர்களுக்கு மிகவும் பயனாகத் தோன்றினாலும், மறுபுறம் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதையும் மறுக்க முடியாது.
செல்லிடப்பேசிகளை அதிகம் பயன்படுத்தும் போது, அவற்றிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுப் பாதிப்பால் இதயம், கண், காது மற்றும் மூளை உள்ளிட்டவற்றுக்கு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மூளையில் புற்றுநோய் கட்டிகள் கூட உருவாகக்கூடும் என அவை தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையில் இதைத் தடுக்க வேண்டியது அவசியமாகிறது.

இன்றைக்கு செல்லிடப்பேசி அதிக பயன்பாட்டுக்குக் காரணம் அன்லிமிடெட் இலவச அழைப்புகள், இலவச குறுஞ்செய்திகள், இலவச நெட் பேக் வசதிகள் போன்றவைதான்.

இதனால் ஒரு மாதத்துக்கோ, 3 மாதத்துக்கோ ரீசார்ஜ் செய்துவிட்டு, நேரம் காலம் தெரியாமல் மணிக்கணக்கில் வெட்டிப்பேச்சு பேசுவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.  விடிய விடிய முகநூலிலும், கட்செவி
 அஞ்சலிலும், சுட்டுரையிலும் பொழுதைக் கழிப்பவர்கள் பெருகிவிட்டனர்.
தற்போது யூடியூபில், டப்மாஸ், டிக்டாக், சினிமா, பாடல்கள் பார்த்தலும் சேர்ந்து கொண்டது. இதனால் தூங்கும் போதும் கூட தலை அருகில் செல்லிடப்பேசியை வைத்துக்கொண்டுதான் தூங்குகின்றனர்.
இத்தகைய பயன்பாடுகள் அனைத்துமே நமது பொன்னான நேரத்தை வீணடிக்கிறது என்பது பெரும்பாலானோருக்குத் தெரியவில்லை. அதற்கு அடிமையாகிவிடுகின்றனர். செல்லிடப்பேசியின் அதிக பயன்பாட்டைத் தடுக்க ஒரே வழி கட்டண உயர்வு மட்டும்தான். ஓர் அழைப்பு என்பதை 3 நிமிஷமாக வைத்துக் கொள்ளலாம். 

ஒவ்வொரு முதல் அழைப்பையும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கலாம். இதனால் ஏழை, அடித்தட்டு மக்களுக்குப் பயனளிக்கும்.
அதே நேரம் ஒரே நம்பருக்கு ஒரு நாளைக்கு 3 முறை மட்டும் இந்த இலவச அழைப்பு வழங்கலாம். மற்றபடி ஒவ்வொரு அழைப்புக்கும் 3 நிமிஷத்துக்கு பின்னர் ஒவ்வொரு நிமிஷத்துக்கும் ரூ. 5 கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். அழைப்பை பெறுபவர்களுக்கும் இதே போன்று கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.

இதன் மூலம் உண்மையில் தேவையானவர்கள் மட்டும் தேவையான அளவுக்கு செல்லிடப்பேசிகள் பயன்படுத்துவதை உறுதி செய்யலாம். தேவையில்லாத இணைப்புகள் குறைந்துவிடும். அல்லது பேசும் நேரம் குறைந்து விடும்.

பேரிடர் காலங்களில் மட்டும் இவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கலாம்.
செல்லிடப்பேசி பயன்பாடு அத்தியாவசியம் எனக் கருதுபவர்கள், வீட்டில் இருக்கும் போது, தரைவழி தொலைபேசியில் பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். செல்லிடப்பேசியை ஹாண்ட்ஸ் பிரீ கருவி அல்லது குறைந்த ஒலியில் வைத்துப் பேசலாம்.

பேருந்து அல்லது ரயில் பயணங்களின் போது ஹெட் போன் அல்லது ப்ளூ டூத்தில் பேசலாம். தனியாக இருக்கும் சமயங்களில் ஸ்பீக்கர் போனிலும் பேசலாம். இதன் மூலம் கதிர்வீச்சுப் பாதிப்புகளிலிருந்து நம்மை ஓரளவுக்காவது பாதுகாத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...