'பொங்கல் பரிசை எப்படி வழங்குவது!'
Added : டிச 24, 2018 23:27
ஜனவரி முதல், பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருவதால், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகிய பொங்கல் பரிசு பொருட்களை, 'பாக்கெட்' செய்வதில், அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழக அரசு, ரேஷன் கடைகளில், பொங்கலை முன்னிட்டு, தலா, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய, பரிசு தொகுப்பை, ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. அதில், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை, பிளாஸ்டிக் பாக்கெட்டில் வழங்கப்பட்டன.சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க, தமிழக அரசு, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த, 2019 ஜன., 1 முதல், தடை விதித்துள்ளது. இதனால், பொங்கல் பரிசு பொருட்களை பாக்கெட் செய்வதில், அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷன் கடைகளை நடத்தும், கூட்டுறவு சங்கங்கள், முந்திரி, திராட்சை, ஏலக்காயை, மொத்தமாக வாங்கி, அவற்றை சேமிப்பு கிடங்குகளில், அரசு அறிவித்த அளவில் எடையிட்டு, பிளாஸ்டிக் பைகளில், சிறிய பொட்டலமாக தயார் செய்தன. பின், கடைகளுக்கு அனுப்பி, கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டன. இதனால், எடை குறைவு பிரச்னை ஏற்படவில்லை.தற்போது, பிளாஸ்டிக் பைக்கு, அரசு விதித்த தடை, ஜன., முதல் அமலுக்கு வருவதால், முந்திரி, திராட்சை, ஏலக்காயை, எப்படி வழங்குவது என, தெரியவில்லை. கடைகளுக்கு மொத்தமாக அனுப்பி, எடையிட்டு வழங்குமாறு கூறினால், ஊழியர்கள் தவறு செய்ய வாய்ப்புள்ளது.முதல்வர் பழனிசாமி, பொங்கல் பரிசு அறிவிப்பை, சனிக்கிழமை வெளியிட்டார். அதற்கு, நிதி ஒதுக்கீடு, செயல்படுத்த வேண்டிய வழிமுறைகள் அடங்கிய அரசாணையை, அரசு இதுவரை வெளியிடவில்லை. அதை, விரைவாக வெளியிடுவதுடன், பாக்கெட் முறை குறித்தும், தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment