Saturday, December 1, 2018

 துணைவேந்தர்கள் நியமனத்திற்கு தடை 

Added : நவ 30, 2018 23:19

ஐந்து பல்கலைகளின் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், புதிய நியமனங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, அரசு பல்கலைகளின் நிர்வாகத்தை, துணை வேந்தர்கள் கவனிக்கின்றனர். இதில், பல்கலை நிர்வாகம், பாடத் திட்டம், வளர்ச்சி திட்டங்கள் குறித்து, பல்கலைகளின் சிண்டிகேட் மற்றும் அகாடமி கவுன்சில் கூடி முடிவு எடுக்கும்.சிண்டிகேட் முடிவின்படி, பேராசிரியர் மற்றும் ஊழியர்கள் பணி நியமனங்கள், தேர்வுகளில் சீர்திருத்தம், பாடத் திட்டம் மாற்றம் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை, துணைவேந்தர் மேற்கொள்வார்.

ஆனால், ஒவ்வொரு துணைவேந்தரும், தங்களின் பதவி காலம் முடிவதற்கு, மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து, எந்த வித பணி நியமனங்களையும் மேற்கொள்ளக் கூடாது என்ற, விதி பின்பற்றப்படுகிறது.இதன்படி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார், திருவள்ளுவர் பல்கலை, தெரசா பல்கலை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை ஆகிய, ஐந்து பல்கலைகளில் துணைவேந்தர்களின் பதவி காலம், மார்ச்சுக்குள் முடிகிறது.எனவே, பதவி காலம் முடியும் நிலையில், அவசர கதியில் நியமனங்கள் செய்து விடக் கூடாது என்பதால், நியமனங்கள் எதுவும் செய்ய வேண்டாம் என, உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. - நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024