Wednesday, December 12, 2018

`மக்கள் முடிவுக்குத் தலை வணங்குகிறேன்' - தேர்தல் முடிவு குறித்து பிரதமர் மோடி!
சி.வெற்றிவேல் Follow


"ஐந்து மாநில மக்களின் முடிவுக்குத் தலை வணங்குகிறோம். வெற்றி, தோல்வி ஆகியவை வாழ்க்கையின் அங்கங்கள்" என்று ஐந்து மாநில சட்ட மன்ற தேர்தல் முடிவு குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.



மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவில் பா.ஜ.க பெரும் பின்னடைவைச் சந்தித்து தோல்வியைத் தழுவியிருக்கிறது. மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்றிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க - காங்கிரஸ் இடையே இழுபறி நிலை நீடித்து வருகிறது. ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. தெலுங்கானாவில் ராஷ்டிரிய சமிதி கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. ராஜஸ்தானில் அமைச்சர்கள் பலர் தோல்வியைத் தழுவியிருப்பது பா.ஜ.க மேலிடத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.



மொத்தத்தில் பா.ஜ.கவுக்கு இந்தத் தேர்தல் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாகவே இந்தத் தேர்தல் பார்க்கப்பட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி, ரிசர்வ் வங்கியுடன் மோதல், எரிபொருள் விலையேற்றம் போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளால் தான் பா.ஜ.க தோல்வியடைந்திருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பேசியுள்ளார் பிரதமர் மோடி.



"ஐந்து மாநில சட்ட மன்ற தேர்தல்களில் மக்களின் முடிவுக்குத் தலை வணங்குகிறோம். சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி. இந்த மாநிலங்களிலும் மக்கள் நலனை மேம்படுத்தப் பா.ஜ.க கடுமையாக உழைத்தது. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக இரவு பகல் பாராமல் உழைத்த பா.ஜ.க உறுப்பினர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன்.



வெற்றியும், தோல்வியும் நம் வாழ்க்கையின் அங்கங்கள். இன்று வெளியாகியிருக்கும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மக்களுக்குச் சேவை செய்வதற்கும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல கடுமையாக உழைப்பதற்கும் உத்வேகம் தரும். தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ், மிசோ தேசிய முன்னணி, சந்திரசேகர ராவ் ஆகியோருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024