Wednesday, December 12, 2018

வெளியிடப்பட்ட நேரம்:16:41 (10/12/2018)

கடைசி தொடர்பு:16:41 (10/12/2018)

அம்பானி வீட்டுத் திருமணம்: மும்பை விமான நிலையம் புதிய சாதனை!



பா. முகிலன்


மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையத்திலிருந்து முக்கிய விருந்தினர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் எனப் பலரும் சிறப்பு விமானங்கள் மூலம் உதய்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.




மும்பை விமான நிலையம், அம்பானி இல்லத் திருமணத்தை முன்னிட்டு, ஒரே நாளில் 1,004 விமான சேவைகளைக் கையாண்டு புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்னர், இந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரே நாளில் 1,003 விமான சேவைகளை (புறப்பாடு மற்றும் வருகை) கையாண்டது சாதனையாக இருந்து வந்தது.



பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் மும்பையைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அஜே பிரமல் மகன் ஆனந்த் பிரமல் ஆகிய இருவருக்கும் டிசம்பர் 12-ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இதையொட்டி, 3 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒவ்வொரு அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் ரூபாய் திருமணப் பத்திரிகை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் ஆகியவற்றில் இந்தத் திருமணப் பத்திரிகைகளை வைத்து முகேஷ் அம்பானி சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், கடந்த வார இறுதியில் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் திருமணக் கொண்டாட்டங்கள் தொடங்கின. திருமணத்துக்கு முன்பாக 8 மற்றும் 9-ம் தேதிகளில் உதய்பூர் நகரில் பிரமாண்டவகையில், திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடைபெற்றன. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் சுதேசி பஜாரில் 108 பாரம்பர்ய இந்திய கைவினைப் பொருள்கள் அடங்கிய மிகப்பெரும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய அளவிலுள்ள சிறந்த கைவினைக் கலைஞர்களின் படைப்புகள் இடம் பெற்றிருந்தன. இதற்காக உதய்பூர் நகரில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களும் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. உறவினர்களும், நண்பர்களும் உதய்பூர் நகர் செல்வதற்காக சுமார் 50-க்கும் அதிகமான தனியார் விமானங்கள் மொத்தமாகக் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்தன.


இந்த விமானங்கள், வெள்ளிக்கிழமை முதலே இயக்கப்பட்டன. முக்கிய விருந்தினர்கள்,பாலிவுட் நட்சத்திரங்கள் எனப் பலரும், மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் உதய்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் மீண்டும் அழைத்து வரப்பட்டனர். இதனால், சனிக்கிழமையன்று அதாவது டிசம்பர் 8-ம் தேதியன்று மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையத்தில், விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை அதிகரித்தது.

அன்றைய தினம் மட்டும் 1,004 சேவைகளை மும்பை விமான நிலையம் கையாண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 903 விமான சேவைகள் வழக்கமாக இயக்கப்படும் சேவைகளாகவும், 59 விமான சேவைகள் வழக்கமான அட்டவணையில் இடம்பெறாத சேவைகளாகவும் இருந்தன. மேலும் 8 சார்ட்டர் விமானங்கள், 31 சரக்கு விமானங்கள் மற்றும் 3 ராணுவ விமானங்கள் ஆகியவையும் அன்றைய தினம் இயக்கப்பட்டதாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.



அம்பானி இல்லத் திருமணத்தில் பங்கேற்பதற்காக இந்தியாவிலிருந்து மட்டுமல்லாது, உலகமெங்கிலுமிருந்து, அமெரிக்காவின் ஹிலாரி கிளிண்டன் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் வருகை தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை சர்வதேச விமான நிலையம், இரண்டு ஓடுதளங்களைக் (runways) கொண்டுள்ளது. இதில், பிரதான ஓடுதளத்தில் மணிக்கு 48 சேவைகளையும் ( வருகை மற்றும் புறப்பாடு), இரண்டாவது ஓடுதளத்தில் மணிக்கு 35 சேவைகளையும் கையாள முடியும்.

மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த 2017-18-ம் நிதியாண்டில் மும்பை விமான நிலையம் 48.49 மில்லியன் பயணிகள் சேவைகளைக் கையாண்டுள்ளது. 2016-17-ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 7.4 சதவிகித வளர்ச்சி ஆகும்.

No comments:

Post a Comment

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':  Liver, kidney-related side effects to know etimes.in | Apr 16, 20...