Wednesday, December 12, 2018

நள்ளிரவில் வீட்டில் புகுந்த நாகப் பாம்பு; முதல்வர் நாராயணசாமிக்குச் சென்ற போன் கால்

ஜெ.முருகன்

அ.குரூஸ் தனம்


நள்ளிரவில் வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டது என்று போன் செய்த குடும்பத்துக்கு முதல்வர் நாராயணசாமி உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜா. நேற்று முன்தினம் இரவு பணி காரணமாக ராஜா வெளியூருக்குச் சென்றிருந்த நேரம் வீட்டில் அவரின் மனைவி விஜயா, மகன், மகள் ஆகியோர் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12.30 மணியளவில் வீட்டுக்குள் இருந்த பாத்திரங்கள் உருளும் சத்தம்கேட்டதால் பயந்துபோன விஜயா விளக்கைப் போட்டுப் பார்த்திருக்கிறார்.

அப்போது 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு படமெடுத்து சீறிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் அதிர்ந்துபோன அவர் தன் பிள்ளைகளை எழுப்பி விட்டார். அந்த நேரத்தில் அக்கம் பக்கத்து வீட்டினரையும் உதவிக்கு அழைக்க முடியாததால் அவசர போலீஸ் எண் 100-க்கு போன் செய்தார் விஜயா. ஆனால், அங்கு வனத்துறையின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து பேசச் சொல்லியிருக்கிறார்கள்.



ஆனால் பலமுறை போன் செய்தும் அங்கு யாரும் போனை எடுக்கவில்லை. அதனால், வேறு வழியின்றி அரசு டைரியில் இருந்த முதல்வர் நாராயணசாமியின் செல்போன் எண்ணுக்கு போன் செய்தார். அப்போது தூங்கிக்கொண்டிருந்த முதல்வர் நாராயணசாமி அவசர அழைப்பாக இருக்கும் என்று போனை எடுத்துப் பேசினார். எதிர்முனையில் பேசிய விஜயா போலீஸுக்கும் வனத்துறைக்கும் போன் செய்தும் பயனில்லை. அதனால் உங்களுக்குப் போன் செய்தேன் என்று சொன்னதோடு எங்களைக் காப்பாற்றுங்கள் என்றும் தெரிவித்தார்.



உடனே விஜயாவுக்கு ஆறுதல் தெரிவித்த அவர், விடுமுறையில் இருந்த கோபி, தாமரைச்செல்வன் இரண்டு ஊழியர்களை உடனே அனுப்பி பாம்பைப் பிடிக்கும்படி உத்தரவிட்டார். அதன் பிறகு விஜயா வீட்டிற்குச் சென்ற அவர்கள் அந்த விஷப் பாம்பை அங்கிருந்து பிடித்துச் சென்றனர். முதல்வர் நாராயணசாமியின் இந்த நடவடிக்கையை மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024