Thursday, December 20, 2018

மாவட்ட செய்திகள்

“சிறையில் மிகவும் சிரமப்படுகிறேன்; கணவரை சந்திக்க விரும்புகிறேன்” ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜரான நிர்மலாதேவி திடீர் பேட்டி



“சிறையில் மிகவும் சிரமப்படுகிறேன், கணவரை சந்திக்க விரும்புகிறேன்“ என்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நேற்று ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி திடீர் பேட்டி அளித்தார்.

பதிவு: டிசம்பர் 20, 2018 05:15 AM

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக அதே கல்லூரியை சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் உள்ளார். இந்த வழக்கில் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை நீதிபதி லியாகத் அலி கடந்த 4-ந் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் 3 பேர் மீதும் 11-ந் தேதி முதல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி மதுரை ஐகோர்ட்டில் மாதர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த நிர்மலாதேவி வழக்கு குறித்த ஆவணங்கள், மதுரை ஐகோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிலையில் நிர்மலாதேவி வழக்கு நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக நிர்மலாதேவி உள்பட 3 பேரையும் பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து வந்து நீதிபதி லியாகத் அலி முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள்.

பின்னர் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஆவணங்கள் வந்து சேராததால் வழக்கு நேற்று தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோர்ட்டில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட நிர்மலாதேவி அங்கு நின்றிருந்த நிருபர்களுக்கு திடீரென பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, “சிறையில் நான் மிகவும் சிரமப்படுகிறேன். என் தரப்பு நியாயத்தை என்னுடைய கணவர், மாமனார், மாமியார், அண்ணன் ஆகியோரிடம் விளக்க விரும்புகிறேன். இதற்காக அவர்களை சந்திக்க விரும்புகிறேன்” என்று கூறினார். இதையடுத்து 3 பேரும் பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதற்கு முன்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வரப்படும் போது, பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் தங்கள் கருத்தை தெரிவித்தார்கள். ஆனால், நிர்மலாதேவியை போலீசார் வேகமாக அழைத்துச் சென்றுவிடுவார்கள். ஆனால், நேற்று அவர் திடீரென பத்திரிகையாளர்களிடம், சிறையில் சிரமப்படுவதாகவும், குடும்பத்தினரை சந்திக்க விரும்புவதாகவும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...