Monday, December 10, 2018

பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்ட வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

By மதுராந்தகம், | Published on : 10th December 2018 12:26 AM 




வேடந்தாங்கல் ஏரியில் போதிய தண்ணீர் இல்லாதபோதிலும், அதிக அளவில் பறவைகள் இம்முறை வராத நிலையிலும், சரணாலயத்தை வனத்துறையினர் திறந்துள்ளனர். எனினும், வழக்கத்தை விட பறவைகள் குறைவாக உள்ளதால் சரணாலயம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாப் பகுதியாகவும், பறவைகள் சரணாலயமாகவும் வேடந்தாங்கல் திகழ்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கண்டுக்களிக்கும் இடமாக இச்சரணாலயம் உள்ளது. ஏரிகள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய ஏரி வேடந்தாங்கலாகும். இங்கு பறவைகள் சரணாலயம் கடந்த 1858-இல் தொடங்கப்பட்டது. சுமார் 75 ஏக்கர் பரப்பளவு கொண்ட வேடந்தாங்கல் ஏரியின் நடுவே 50-க்கும் மேற்பட்ட கருவேல மரங்கள், கடம்ப மரங்கள், செடி, கொடிகள் ஆகியவை உள்ளன. அந்த மரங்களின் மேல் கூடு கட்டி, இனப்பெருக்கம் செய்வதற்காக உலகத்தின் பல்வேறு பகுதிகளிருந்தும் பறவைகள் வருகின்றன.

இனப்பெருக்கத்துக்கு சாதகமான பருவநிலை, நீர், உணவு, பாதுகாப்பான சூழ்நிலை போன்ற கரரணங்களால் பறவைகள் இப்பகுதியைத் தேடி வருகின்றன. வேடந்தாங்கல் ஏரியைச் சுற்றி மதுராந்தகம் ஏரி, வேடவாக்கம் ஏரி, கருங்குழி ஏரி உள்ளிட்டவை அரணாக அமைந்துள்ளன.
ரஷியாவின் சைபீரியா, இலங்கை, மத்திய ஆசியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், மங்கோலியா, வங்கதேசம் போன்ற வெளிநாட்டுப் பகுதிகளில் இருந்தும், நம் நாட்டின் வட மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மைல்களை தாண்டி ஏராளமான பறவைகள் இங்கு வந்து தங்கிச் செல்கின்றன. சிறிய நீர்க்காகம், கரண்டி வாயன், நத்தைக்குத்தி நாரை, வெள்ளை அரிவாள்மூக்கன், வெள்ளைக் கொக்கு, உண்ணி கொக்கு உள்ளிட்ட இனங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் சரணாலயத்துக்கு வருவது வழக்கம்.

வேடந்தாங்கல் ஏரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இருப்பதால், விளைநிலங்களில் பயிரிடப்படும் நெல், பருப்பு வகைகளையும் நீர்நிலைகளில் வாழும் மீன், புழு பூச்சிகள் போன்றவற்றையும் சரணாலயத்தில் முகாமிடும் பறவைகள் உட்கொள்ளும். இதனால் பறவைகளுக்கு உணவுப் பஞ்சம் இருப்பதில்லை. ஏரி நீரில் விழும் இப்பறவைகளின் எச்சம் மிகச்சிறந்த உரமாக விளங்குவதால் வேடந்தாங்கல் பாசன விவசாயிகள் நல்ல விளைச்சலைப் பெறுகின்றனர். இங்கு அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை பறவைகளின் சீசன் காலமாகும்.
இந்நிலையில், வேடந்தாங்கல் ஏரியில் போதிய தண்ணீர் இல்லாதபோதிலும், அதிக அளவில் பறவைகள் இம்முறை வராத நிலையிலும், சரணாலயத்தை வனத்துறையினர் கடந்த 6ஆம் தேதி திறந்தனர்.

இது தொடர்பாக பறவைகள் சரணாலய வனச்சரகர் சுப்பையா தினமணி செய்தியாளரிடம் கூறியது:

தற்சமயம் இந்தப் பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் வேடந்தாங்கல் ஏரிக்கு நீர்வரத்து இல்லை. அதேசமயம் பல்லாயிரக்கணக்கான பறவைகளும் வந்திருக்க வேண்டிய இந்த நேரத்தில் குறைந்த அளவிலேயே பறவைகள் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி பறவைகள் சரணாலயம் திறக்கப்பட்டது.
அதேபோல் தற்போதும் பறவைகள் வந்திருக்கும் என்று கருதி, தற்போது இங்கு வரக் கூடிய பார்வையாளர்கள் ஏமாந்து போகக் கூடாது என்பதால் சரணாலயம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் ஆயிரத்துக்கும் குறைவான பறவைகள்தான் வந்துள்ளன என்றார் அவர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024