Monday, December 10, 2018

அவர்களும் மனிதர்களே
By வாதூலன் | Published on : 10th December 2018 03:00 AM

கட்டுரையின் தலைப்புக்குச் சற்று யோசித்த பின்தான் கேள்விக்குறி போட வேண்டியிருந்தது. காரணம், சில வாரங்களுக்கு முன் பிரபல ஆங்கில ஏட்டில் இசைக் கலைஞர் ஒருவர் எழுதிய கட்டுரைதான். சில நாள்களுக்கு முன்வரை பரபரப்பாகப் பேசப்பட்ட "மீ டூ' குறித்து அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்ட கருத்துகள், "மீ டூ'வில் தொடர்புள்ள இசைக் கலைஞர்களுக்கு ஆதரவு கொடுப்பது போல அமைந்திருந்தது. "குரு என்றால் ஏன் ஒழுக்கத்தின் மறுஉருவம் என்று நினைக்கிறீர்கள்? அவர்களைக் குட்டி தெய்வமாகக் கருதுவது தவறு' என்றெல்லாம் நீளமாக வாதாடியிருந்தார். கட்டுரையின் இறுதியில், தனது வாதத்திலிருந்து சற்று பின்வாங்கி "முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர்கள் செயலை நான் நியாயப்படுத்தவில்லை' என்று முடித்திருந்தார்.

பொதுவாக நாடக, திரை உலகப் பிரபலங்களைப் பற்றித்தான் அந்த நாளில் "ரகசியமான' வதந்திகள் வரும். ஏனெனில் நெருக்கமாக நடிப்பது, ஆசையுடன் பழகுவது போன்ற காட்சிகள் அவற்றில் வர சாத்தியக்கூறு அதிகம். நாட்டியத்திலும், சில சிருங்கார அங்க அசைவுகள் வரும். (ஓர் ஏட்டில், நடனம் ஆடுபவர்கள் படுகிற இன்னல்களைப் பற்றி பெரிய கட்டுரையே வெளியாகியது.) இத்தகைய கலைஞர்களைப் பற்றி பாலியல் சம்பந்தமான செய்திகள் வந்தால் அக்கருத்துகளுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிப்பதில்லை.

கவிஞர்களுள் தடுமாறும் போதையில் கவிபாடும் மேதையைப் பற்றிப் பலரும் அறிவார்கள். வேறு ஒரு எழுத்தாளர் எழுதிய, போதைப் பொருளைப் பரிந்துரைப்பது போன்ற கட்டுரை ஒன்று வாரப் பத்திரிகையில் வெளிவந்ததும் சிறு சலசலப்பு ஏற்பட்டது. இசை உலகில் மேதை என்று மிக புகழ் பெற்ற வித்துவானின் குறைகள் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்.
நம் முன் நிற்கும் கேள்வி இதுதான்: கலைஞர்களின் தனிப்பட்ட ஒழுக்கத்துக்கும் திறமைக்கும் முடிச்சு போடலாமா? காலஞ்சென்ற பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் ஓர் இரங்கற் கூட்டத்தில் இவ்விதம் பேசியுள்ளார்: "சிறிய கள் பெரினே எமக்கு ஈயும் மன்னே' என்று பாடியவர் சங்க கால மூதாட்டி என்பதை மறந்து விட்டீர்களா? கவி பாடும் ஆற்றலுள்ளவர்களுக்கு சிறு சிறு குறைகளிருக்கலாம். அவ்வாறு இருந்தால், அவையெல்லாம் கவிஞனின் உடம்பு மாயும் போது, உடன் மறைந்துவிடும். ஆனால் அவன் படைப்பு தமிழ் உள்ளவரை நின்று நிலவும்' என்றார். மேலும் அவர் "அந்தக்குறை பற்றிக் கவலைப்பட வேண்டியவர்கள் அவர்கள் குடும்பத்தினர்தானே' என்றும் பேசியிருக்கிறார். மேலே சொன்ன நிகழ்வு அறுபதுகளில் நடந்ததென்று ஊகிக்க முடிகிறது.

ஐம்பது வருடங்களுக்கு முன் அவர் சொன்ன கருத்துக்கள், இன்றுள்ள சூழலுக்கும் பொருந்துமா என்பது ஐயம்தான். இப்போது முகநூல், கட்செவி அஞ்சல் ("வாட்ஸ்அப்') போன்றவற்றில் வருகிற குறுஞ்செய்திகள் விரைவாகப் பரவி விடுகின்றன. அதுவும் பிரபலமானவரைப் பற்றிய செய்திகள் என்றால் கேட்கவே வேண்டாம். ஊடகங்கள் தகவலை மிகைப் படுத்துக்கின்றன. ஓரிரு நாள் கழித்து பாதிக்கப்பட்டவர் மறுப்பு தெரிவித்தாலும் மக்கள் மனதில் அது பதிவதில்லை. முதலில் வந்த செய்திதான் நிற்கிறது.

வேறொரு அம்சத்தையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லலாம். மது அருந்துவது, போதைப் பொருளுக்கு அடிமையாவது போன்றதல்ல பாலியல் குற்றங்கள். பாலியல் தவறுகளால், ஓர் அப்பாவிப் பெண்ணின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடுகிறது. "இதுவரை மௌனம் சாதித்துவிட்டு இப்போது ஏன் முறையிடுகிறார்கள்?' என்ற கேள்வி எழாமலில்லை. பல வருடங்களாக அடைக்கப்பட்டிருக்கும் மன உளைச்சல்களுக்கு வடிகால் கிடைத்தது போலவே இதனைப் பெண்கள் உணர்கிறார்கள்.

வங்கிக் கிளையொன்றில் என்னுடன் வேலை செய்த ஒரு பெண் ஊழியரிடம், வங்கி மேலாளர் கொஞ்சம் நெருக்கமாகப் பழகினார். அரசல் புரசலாக வதந்திகள் பிறந்தன. எல்லாரும் ஊகித்தபடியே மேலாளர் அவரை இரண்டாம் மனைவியாக ஏற்றுக் கொண்டார். (அவர் அப்போது இரண்டு குழந்தைகளுக்கு தந்தை.) தலைமை அலுவலகத்துக்கு புகார் போனதும், பெண்ணை ராஜிநாமா செய்யச் சொல்லிவிட்டார்கள்.

இது நடந்தது 1965. ஆனால் 1990-க்குப் பின்னர், தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கும் நான் ஆய்வாளாராகப் போன சமயம் பல முறைகேடான உறவுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். சிலர் எல்லைமீறி, வங்கியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பது போலிருந்தால், அவரை வடக்கே இருக்கும் இடங்களுக்கு மாற்றி விடுவார்கள்.

இப்போது, கணினி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் நிலைமை அலசப்பட்டு வருகிறது. இரவு நேரப் பணி அவர்களுக்கு ஒரு பாதகமான அம்சம். ஒரு சில வருடம் முன், பெங்களூரில் சில குற்றங்கள் நடந்திருக்கின்றன. நிறுவனத்தின் பெயர் கெடாதிருக்க நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றன.

ஆரம்பத்தில் சொல்லப்பட்ட பகுதிக்கே வருவோம். குரு என்ற ஸ்தானம் மிக உயர்ந்தது. சங்கீதம், நாட்டியம் இரண்டில் மட்டுமே இந்த உயர்நிலை உள்ளது. பெற்றோருக்கு அடுத்தபடியாக குருதான் என்று பல நீதி நூல்கள், சமயங்கள் போதிக்கின்றன. அத்தகைய நிலையிலிருந்து கொண்டு, தனக்கு இழுக்கு நேரும்படி, மாணவிகளிடம் தீய நோக்கத்துடன் பழுகுவது கீழ்த்தரமான செயல். குற்றங்களை முறையாக விசாரணை செய்ய, ஒரு குழு நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

பொதுவாகப் பெண்களிடம் "இன்ஸ்டிங்ட்' என்ற உள்ளுணர்வு அதிகம் என்று கூறுகிறார்கள். சொல்லித்தரும்போது பாடகரின் பார்வையிலோ, செயலிலோ சற்று வேறு விதமான போக்கு தென்பட்டிருந்தால் உடனே விலகியிருக்கலாமே? இப்போதுதான் இல்லத்திலிருந்தபடியே கற்க "ஸ்கைப்' வசதி உள்ளதே? எனினும் இந்த "மீ டூ' பூதம் கிளம்பியது ஒரு வகையில் நல்லதுதான். சபலபுத்தி உள்ள ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இந்த "மீ டூ' அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024