Monday, December 10, 2018

இல்லாத பதிவாளர் பெயரில் அறிவிக்கை

Added : டிச 09, 2018 23:06

சென்னை: அண்ணா பல்கலை பதிவாளர் பதவி காலியாக உள்ள நிலையில் பதிவாளர் பெயரில் வெளியிட்டுள்ள அறிவிக்கை, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பு இன்ஜி., கல்லுாரிகளுக்கு டிச., 3ல் நடந்த கணித தேர்வில் வினாத்தாள் 'லீக்' ஆனதால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்டுள்ளது. அதேபோல 'எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன்ஸ்' துறையில் 'ஆப்டோ எலக்ட்ரானிக் டிவைசஸ்' என்ற பாடத்துக்கு தேர்வு நடந்தது. அதில் 2017 நவம்பரில் வந்த பழைய வினாத்தாள் வழங்கப்பட்டதால் மறுதேர்வு நடத்தப்பட்டுள்ளது.

பல்கலையின் நேரடி கல்லுாரிகளுக்கான தேர்வு துறையில் என்.ஆர்.ஐ., விடைத்தாள் திருத்தத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சீனிவாசலு நீக்கப்பட்டு சஞ்சீவி நியமிக்கப்பட்டுள்ளார்.அண்ணா பல்கலையின் பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவி காலியாக உள்ளது. திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு துறை இயக்குனர் குமார், பதிவாளராக கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். பேராசிரியர், வெங்கடேசன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவியை கூடுதலாக கவனிக்கிறார்.இந்நிலையில் தொலைநிலை கல்விக்கு நேற்று மாணவர் சேர்க்கை அறிவிப்பு, பதிவாளர் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.ஆனால், பதிவாளரே இல்லாமல் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டது போல், அறிவித்தது எப்படி என உயர்கல்வி அதிகாரிகளும், பேராசிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 பதிவாளர் இல்லாத நிலையில், பதிவாளர் பொறுப்பு என குறிப்பிட்டிருக்க வேண்டும் அல்லது தொலைநிலை கல்வி இயக்குனர் வழியாக மாணவர் சேர்க்கையை அறிவிக்கலாம்.மாறாக, சட்ட சிக்கலை ஏற்படுத்தும் வகையில் பதிவாளர் இருப்பது போல அறிவிக்கை செய்தது, பல்கலையின் நிர்வாகத்துக்கு சட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும் என சில பேராசிரியர்கள் கூறினர். ஏற்கனவே பல்கலை தேர்வுத்துறையில் பல்வேறு குளறுபடி நிலவும் நிலையில் பதிவாளர் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்னை, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024