Monday, December 10, 2018



புயல்,பாதிப்பு,அடுத்த மிரட்டல்,பெய்ட்டி

DINAMALAR 10.12.2018

வங்க கடலில், புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. 'பெய்ட்டி' என, பெயரிடப்பட உள்ள இந்த புயல், வரும், 13ம் தேதி, தமிழக கடற்பகுதியை நெருங்கி, சென்னை - கல்பாக்கம் இடையே, கரையை கடக்க வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 'கஜா' புயலின் பாதிப்பும், சோகமும் தீராத நிலையில், அடுத்த புயல் தமிழகத்தை மிரட்டத் துவங்கியுள்ளது.

தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை துவங்கியது முதல், திடீர் கன மழையும், புயலும் அடுத்தடுத்து மிரட்டி வருகின்றன. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, 'கஜா' புயலாக மாறி, நவம்பர், 16ல், நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கரையை கடந்தது. இதனால், டெல்டா மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

மின் வினியோகம்:

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், நிவாரண பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ஆனாலும், பல கிராமங்களுக்கு, இன்னும் மின் வினியோகம் துவங்கவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட சோகத்தில் இருந்து மீள முடியாமல், மக்கள் தவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், தமிழகத்தை மீண்டும் ஒரு புயல் மிரட்டி வருகிறது.
கஜா புயலுக்கு பின், நவம்பர் இறுதியில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமும், டிச., 4ல், காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாகி, மழையை கொட்டின. டிச., 6 முதல், மழை குறைந்து, வறண்ட வானிலை நிலவுகிறது. பகலில் வெயிலும், மாலை முதல் முற்பகல் வரை பனியும் நிலவுகிறது.
இந்நிலையில், கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு தென் கிழக்கே, நில நடுக்கோட்டு பகுதிக்கு வடக்கில், வங்க கடலின் தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது, நாளை முதல், காற்றழுத்த

தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த மண்டலம், அந்தமானுக்கு அருகில் வரும் போது, புயல் சின்னமாக மாறும். பின், புயலாக உருவெடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலுக்கு, தாய்லாந்து நாடு வழங்கியுள்ள, 'பெய்ட்டி' என்ற, பெயர் சூட்டப்பட உள்ளது.
இப்புயல், வட மேற்கு திசையில் நகர்ந்து, வரும், 13ம் தேதி நள்ளிரவு முதல், தமிழக கடற்பகுதியை நெருங்கும். டிச., 15 முதல், 16ம் தேதிக்குள், நெல்லுார் - நாகை இடையில் கரையை கடக்கலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றைய நிலவரப்படி, இந்த புயல், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு

இடையே, கல்பாக்கம் அருகே, கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

மாறலாம்:

புயல் உருவான பின், காற்றின் வேகம், திசை மாறுபாடு, நிலப்பகுதியில் உள்ள வெப்பநிலை ஆகியவற்றை பொறுத்து, கரையை கடக்கும் இடமும், நாளும் மாறலாம் என்றும், வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். அதேநேரத்தில், புதிய புயலால், கடலுார், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிக தாக்கம் ஏற்படலாம். ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கு தடை:

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஏற்பட்டுள்ளதால், சூறாவளி காற்றுடன் அலைகள் கொந்தளிப்பாக இருக்கும். எனவே, தென் கிழக்கு, தென் மேற்கு மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளுக்கு, 12ம் தேதி வரை, மீனவர்கள் செல்ல வேண்டாம் என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Call to save asst. professor from alleged victimisation in Periyar University

Call to save asst. professor from alleged victimisation in Periyar University Periyar University has placed an agenda to remove the assistan...