காலியாகிறது தினகரன் கூடாரம் dinamalar 13.12.2018
கரூர் : அ.ம.மு.க., விலிருந்து, கட்சி நிர்வாகிகள் பலர் கட்சி தாவி வருவதால், தினகரன் கூடாரம் காலியாக துவங்கியுள்ளது.
சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்.எல்.ஏ.,க்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தும் நியாயம் கிடைக்கவில்லை. தகுதி நீக்கம் சரியே என தீர்ப்பு வந்ததால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வர் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு பின், தினகரனின், அ.ம.மு.க., ஆட்டம் கண்டு இருந்தது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்களில் சிலர், தி.மு.க., பக்கம் தாவ இருப்பதாக செய்திகள் வெளியாகின. இடைத்தேர்தலை தள்ளிப்போட, ஆளுங்கட்சி தீவிரமாக உள்ளது. இதற்காக, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் சிலரை இழுக்கும் முயற்சியில் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், செந்தில்பாலாஜி, அ.ம.மு.க.,விலிருந்து விலகி, தி.மு.க.,வில் சேரவுள்ளதாக கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்படுகிறது.
இதை, அ.ம.மு.க., சார்பில் கொள்கை பரப்பு செயலர், தங்கதமிழ்ச்செல்வன் மறுத்த போதிலும், செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து எவ்வித மறுப்பும் வரவில்லை.
கரூரில் தன் ஆதரவாளர்களுடன் சந்தித்து பேசிய செந்தில் பாலாஜி, தி.மு.க.,வில் இணைவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறார் என கூறப்ப்டுகிறது. இது உண்மையா என்பது, வரும், 16ல் தெரிந்துவிடும். இதற்கிடையில், தி.மு.க.,வில் சேர விரும்பாத அ.ம.மு.க., நிர்வாகிகள் ஆளுங்கட்சியில் மீண்டும் தங்களை இணைத்து கொள்ள களம் இறங்கிவிட்டனர்.
இதில், முதலாவதாக செந்தில்பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூர் மாவட்டத்தை சேர்ந்த, அ.ம.மு.க., பாசறை செயலர் ராமச்சந்திரன், அரவக்குறிச்சி ஒன்றியச் செயலர் மணிகண்டன், பேரூர் செயலர் செந்தில்குமார் உள்பட, 50க்கும் மேற்பட்டோர், அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில், நேற்று, அ.தி.மு.க.,வில் சேர்ந்தனர்.
அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: தி.மு.க.,வுக்கு செல்பவர்கள் கடைசி பெட்டியில் தான் ஏற வேண்டும். அந்த கட்சியில் இருந்து வந்தவர்தான், செந்தில் பாலாஜி. அவர் மீண்டும் அங்கே செல்வதாக தகவல் வருகிறது. ஓராண்டுக்கு முன்பே, நான் சொன்னது போல், தினகரனையும், பதவி நீக்கம் செய்யப்பட்ட, 17 எம்.எல்.ஏ.,க்களையும் நடுத்தெருவில் நிறுத்திவிட்டார் செந்தில் பாலாஜி. ஆந்திராவில் அமைச்சர் பதவி கொடுத்தால் கூட, அவர் அங்கே சென்று விடுவார்.
இன்னும், ஒரு சில நாட்களில், அ.ம.மு.க.,வில் உள்ளவர்கள் அனைவரும் தினகரன் கூடாரத்தை காலி செய்து, அ.தி.மு.க.,வில் சேர்ந்து விடுவர். அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படும். சிறிது காலம் மாற்று இயக்கத்தில் இருந்தீர்கள். இனி, தாய் கழகமான, அ.தி.மு.க.,வுக்கு அனைவரும் திரும்பி வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கரூர் மாவட்டத்தை தொடர்ந்து, பிற மாவட்டங்களிலும், அ.ம.மு.க.,வை கைகழுவ தொண்டர்கள், நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதனால், தினகரன் கூடாரம் கதிகலங்கிப் போய் உள்ளது.
அ.தி.மு.க.,வில் ஐக்கியம்:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு செயலரான, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், முதல்வர் பழனிசாமியை, நேற்று அவரது வீட்டில் சந்தித்து, அ.தி.மு.க.,வில் இணைந்தார். அப்போது, ராமநாதபுரம், எம்.பி., அன்வர்ராஜா, மாவட்ட செயலர் முனியசாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment