ஐந்து மாநிலத் தேர்தல்கள்: ஒரு குறுக்குவெட்டுப் பார்வை!
Published : 10 Dec 2018 09:19 IST
‘அரையிறுதித் தேர்தல்’ என்று வர்ணிக்கப்பட்ட ஐந்து மாநில சட்ட மன்றத் தேர்தல்களின் முடிவுகள் நாளை வெளியாகின்றன. மிசோரம், சத்தீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்திருக்கும் தேர்தல்களின் முடிவுகள் 2019 மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலைச் சந்தித்த மாநிலங்களைப் பற்றிய ஒரு குறுக்குவெட்டுப் பார்வை இது:
மிசோரம்
இந்தியாவின் வட கிழக்கு மாநிலம். காங்கிரஸும் மிசோ தேசிய முன்னணியும் பிரதான சக்திகள். மாநிலக் கட்சிகள்: மிசோரம் மக்கள் மாநாட்டுக் கட்சி, சோரம் தேசியவாதக் கட்சி. பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் உண்டு. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்ட மன்றத்தில், காங்கிரஸ் 34, தேசிய ஜனநாயகக் கூட்டணி 5, மிசோரம் மக்கள் மாநாட்டுக் கட்சி 1 இடங்களைக் கடந்த சட்ட மன்றத்தில் கையில் வைத்திருந்தன.
மாநிலத்தின் பின்னணி : பரப்பளவு 21,081 ச.கி.மீ. மக்கள்தொகை 10.97 லட்சம். எட்டு மாவட்டங்கள். 91% வனப்பரப்பைக் கொண்ட மாநிலம். பரப்பளவில் 25-வது இடம். மக்கள்தொகையில் 28-வது இடம். கிழக்கு, தெற்கில் மியான்மரும், மேற்கில் வங்கதேசமும், வட மேற்கில் திரிபுராவும், வடக்கில் அசாமும், வட கிழக்கில் மணிப்பூரும் இதன் எல்லைகள். எழுத்தறிவு 91.5%. மாநில உற்பத்தி மதிப்பு ரூ.6,991 கோடி. ஆட்சி மொழிகள்: மிசோ, ஆங்கிலம், இந்தி. மியான்மர், இஸ்ரேலிலிருந்து வந்த பெனேய் மெனாஸே உள்ளிட்ட பழங்குடிகள் நிரம்பிய பாரம்பரியப் பிரதேசம். கிறிஸ்தவர்கள் 87%. தேரவாத பெளத்தர்கள் 8.5%. இந்துக்கள் 2.7%. பழங்குடிகளில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள்.
பொருளாதாரம்: 21 பெரிய மலைத்தொடர்கள் உள்ள மாநிலம். ஏராளமான பள்ளத்தாக்குகள். பெரிய ஆறுகள்: சிம்துய்புய், காலா டான். ஏராளமான ஓடைகளும் அருவிகளும் இரண்டு பெரிய நன்னீர் ஏரிகளும் உள்ளன. வேளாண்மை, தொழில்வளம் இரண்டிலும் பின்தங்கியது. நெல், வாழை, இஞ்சி, மஞ்சள், ஆரஞ்சு, செளசெள, மூங்கில் விளைகின்றன. நாட்டின் மூங்கில் சாகுபடியில் மிசோரத்தின் பங்கு 14%. ஆண்டுக்கு 5,200 டன் மீன் கிடைக்கிறது. தோட்டக்கலைப் பயிர்களுக்கும் காய்கறி சாகுபடிக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. பட்டு வளர்ப்பும் உண்டு. மின்சாரம், போக்குவரத்து கட்டமைப்பு, தகவல்தொடர்பு, மூலதனம் ஆகியவை இல்லாததால் தொழில் வளர்ச்சி இல்லை. காடுகளையும் புதர்களையும் எரித்து விவசாயம் செய்வதால் விவசாய உற்பத்தி, உற்பத்தித் திறன் இரண்டுமே குறைவு.
கிராமம் - நகரம்: தலைநகரம் அய்ஜோல். சம்பாய், கோலாசிப், சாய்துல் உள்ளிட்ட நகரங்கள் உண்டு. போக்குவரத்து வசதிக்கு உகந்த நிலப்பரப்பற்ற இயற்கைப் பிரதேசங்கள் அதிகம். எனினும், நகர்மயமாதலில் முன்னேற்றம் காட்டும் மாநிலம். 52% மக்கள் நகரங்களில் வசிக்கிறார்கள். தென்சால், ஙோப்பா, லுங்லேயி உள்ளிட்ட சிறு நகரங்களும் சுற்றுலாவுக்கு ஏற்றவை. இயற்கைப் பிரதேசங்கள் ஏராளம் என்றாலும் சுற்றுலாத் துறையைப் பொறுத்தவரை பெரிய முன்னேற்றம் இல்லை. முய்ஃபாங், ரெய்க் உள்ளிட்ட மலை வாழிடங்களும், பாலாக் தில், டாம் தில் போன்ற ஏரிகளும் இங்கே பிரசித்தம். மிசோ கவிஞர்கள் சதுக்கம், டம்பா புலிகள் காப்பகம், முர்லன் தேசியப் பூங்கா இங்கு உள்ளன.
பேசுபொருள்: தொடர்ந்து காங்கிரஸால் ஆளப்படும் மாநிலம். பின்தங்கிய நிலைக்கு அதுதான் காரணம் என்கின்றன எதிர்க்கட்சிகள். காங்கிரஸ் அல்லாத தேசியக் கட்சிகள் இங்கு வலுவாக இல்லை. காங்கிரஸிலிருந்து வெளியேறிய அதிருப்தியாளர்கள்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். காங்கிரஸ் இங்கு தடுப்பாட்டம் ஆடுகிறது. இதுவரை செய்த வளர்ச்சிப் பணிகளைப் பேசுகிறது.
சத்தீஸ்கர்
மத்திய பிரதேசத்திலிருந்து பிரிந்த மாநிலம் சத்தீஸ்கர். காங்கிரஸ், பாஜக பிரதானக் கட்சிகள். பாஜகவின் கோட்டைகளில் இம்மாநிலமும் ஒன்று. பாஜக முதல்வர் ரமண் சிங் தொடர்ந்து மூன்று முறை வென்று ஆட்சியில் இருக்கிறார். மொத்தம் உள்ள 90 இடங்களில், பாஜக 49 இடங்கள், காங்கிரஸ் 39 இடங்களைக் கடந்த சட்ட மன்றத்தில் கையில் வைத்திருந்தன.
மாநிலப் பின்னணி: பரப்பளவு 1,35,192 ச.கி.மீ. மக்கள்தொகை 2.56 கோடி. பரப்பளவில் நாட்டில் 10-வது இடம். மக்கள்தொகையில் 17-வது இடம். வட மேற்கில் மத்திய பிரதேசமும், மேற்கில் மஹாராஷ்டிரமும், தெற்கில் ஆந்திரமும், கிழக்கில் ஒடிஷாவும், வட கிழக்கில் ஜார்க்கண்டும் இதன் எல்லைகள். ஜிடிபி ரூ.3.26 லட்சம் கோடி. வளர்ச்சிவீதம் 6.7%. எழுத்தறிவு 70%. ஆட்சிமொழி இந்தி. 27 மாவட்டங்கள். சட்ட மன்றத் தொகுதிகள் 90. மக்களவைத் தொகுதிகள் 10. இந்துக்கள் 97%. மக்கள்தொகையில் 34% பழங்குடிகள்.
பொருளாதாரம்: கனிம வளங்கள் நிறைந்த சத்தீஸ்கரில் சுரங்கத் தொழில் பிரதானம். பெரு நிறுவனங்களின் வேட்டைக்காடு என்ற பெயரும் உண்டு. நாட்டின் உருக்கு உற்பத்தியில் 15% இங்குதான். ஆண்டுக்கு 54 லட்சம் டன் உருக்கும், 6 லட்சம் டன் அலுமினியமும் உற்பத்தியாகின்றன. நாட்டின் சிமென்ட் உற்பத்தியில் 20% பங்களிப்பு இம்மாநிலத்துடையது. நிலக்கரி வளம் கணக்கிலடங்காதது. இரும்பு, சுண்ணாம்புக்கல், டோலமைட், பாக்ஸைட், வைரம் என்றெல்லாம் இங்கிருந்து கனிமங்கள் உலகம் முழுக்க அனுப்பப்பட்டாலும் ஏழ்மை பீடித்திருக்கும் மாநிலம். 57.88 லட்சம் ஹெக்டேரில் ஒருபோக சாகுபடிதான். சுமார் 70,000 ஹெக்டேரில் மட்டும் இருபோக சாகுபடி. நெல், சோளம், பருப்பு வகைகள், சிறுதானியங்கள், நிலக்கடலை, சோயாபீன்ஸ், சூரியகாந்தி முக்கிய சாகுபடி. விவசாயத்தையே 80% மக்கள் சார்ந்திருக்கிறார்கள்.
கிராமம் - நகரம்: தலைநகரம் ராய்ப்பூர். பிலாய், கோர்பா, பிலாஸ்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் உண்டு. மகாநதியின் படுகைப் பிரதேசம். சோன் நதியின் உபநதியான ரிஹந்த், இந்திராவதி, ஜோக், அர்பா, ஷிவ்நாத் ஆகிய ஆறுகள் பாய்கின்றன. மத்தியப் பகுதியில் உள்ள ராய்ப்பூர் – பிலாய் – துர்க் நகரங்கள் தொழில்மயமாகியிருக்கின்றன என்றாலும், தென்பகுதியில் வறுமை நிலவுகிறது. 45% மேற்பட்ட நிலப்பரப்பு வனப்பகுதி. நகர்மயமாதல் விஷயத்தில் பின்தங்கிய மாநிலம். வறுமையும் வேலைவாய்ப்பின்மையும் வசதிக் குறைவும் சேர்ந்து மாவோயிஸ்ட்டுகளை செல்வாக்கு பெற வைத்திருக்கின்றன. மாநிலத்தின் பல வனப்பகுதிகள் அவர்களுடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றன.
பேசுபொருள்: காங்கிரஸிலிருந்து பிரிந்துசென்ற முன்னாள் முதல்வர் அஜீத் ஜோகியின் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது மூன்றாவது சக்தியாகிறது. ரமண் சிங் ஆட்சியில் தொடர்ந்து தொடரும் பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்புகள் பெருகவில்லை. மாநிலத்தில் ஜனநாயக சூழல் இல்லை. ஊழல் மலிந்த ஆட்சி ஆகியவற்றை காங்கிரஸ் பேசியது. பாஜகவோ மாநிலத்தில் ஆற்றியிருக்கும் பணிகளையும் மாவோயிஸ்ட்டுகள் ஒடுக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டிப் பேசியது. மூன்றாவது சக்தியாக உருவெடுத்திருக்கும் அஜீத் ஜோகி ஜெயிக்கிறாரோ இல்லையோ காங்கிரஸை காலிசெய்யும் வகையில் பேசினார்.
தெலங்கானா
இந்தியாவின் தென்னிந்திய மாநிலம். தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி(டிஆர்எஸ்), காங்கிரஸ் இரண்டும் பிரதானக் கட்சிகள். மொத்தம் உள்ள 119 தொதிகளில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி 90, காங்கிரஸ் 13, அனைத்திந்திய மஜ்லீஸ்-ஈ-இத்திஹாதுல் முஸ்லிமீன் 7, பாஜக 5, தெலுங்கு தேசம் 3, மார்க்சிஸ்ட் கட்சி 1 இடங்களைக் கடந்த சட்ட மன்றத்தில் கையில் வைத்திருந்தன.
மாநிலப் பின்னணி: பரப்பளவு 1,12,077 ச.கி.மீ. மக்கள்தொகை 3,51,93,978. வடக்கில் மஹாராஷ்டிரம், மேற்கில் கர்நாடகம், கிழக்கு மற்றும் தெற்கில் ஆந்திரம் இதன் எல்லைகள். பரப்பளவு - மக்கள்தொகை இரண்டிலும் 12-வது இடம். ஆட்சி மொழி: தெலுங்கு, உருது, ஆங்கிலம். மாவட்டங்கள் 31. ஜிடிபி ரூ.8.43 லட்சம் கோடி. சட்ட மன்றத் தொகுதிகள் 119, மக்களவைத் தொகுதிகள் 17. இந்துக்கள் 85.1%, முஸ்லிம்கள் 12.7%, கிறிஸ்தவர்கள் 1.3%.
பொருளாதாரம்: நெல், கரும்பு, பருத்தி, புகையிலை, வாழை, நிலக்கடலை, சூரியகாந்தி, எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், சிறு தானியங்கள் சாகுபடி அதிகம். கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, தோட்டக்கலை பிற தொழில்கள். தொழில் துறையிலும் முன்னேறிவரும் மாநிலம். மோட்டார் வாகனங்கள் - உதிரிபாகங்கள் தயாரிப்பாலைகள், ஜவுளி ஆலைகள், ஆயத்த ஆடைத் தயாரிப்பகங்கள், மருந்து-மாத்திரைத் தொழில், வெளிநாட்டவர்களுக்கும் மருத்துவ சேவை அளிக்கும் பெரிய மருத்துவமனைகள் ஆகியவை கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரிய அளவில் உத்வேகம் அடைந்துவருகின்றன. கோல்கொண்டாவில் நவரத்தினக் கற்கள் கிடைக்கும் கனிமச் சுரங்கங்கள் உண்டு. விவசாயம், தொழில்வளம் மிக்க மாநிலம். சேவைத் துறையில் தகவல்தொழில்நுட்பம் முன்னிலை வகிக்கிறது.
நகரம் – கிராமம்: தலைநகரம் ஹைதராபாத். வாரங்கல், நிஜாமாபாத், கம்மம், கரீம்நகர் பெரிய நகரங்கள். ஐந்து மாநகராட்சிகள், ஆறு நகராட்சிகள் இங்கு உள்ளன. கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்ரா நதிகள் பாய்கின்றன. நாகார்ஜுனசாகர் என்கிற மிகப் பெரிய நில அணை திட்டத்தால் பாசன நீர் கிடைக்கிறது. பீமா, திண்டி, கின்னரசானி, மாஞ்சரா, மானேர், பிராணஹிதா, பெத்தவாகு, தலிபேரு என்ற சிறிய ஆறுகளும் உண்டு. கணிசமான நிலங்கள் வானம் பார்த்த பூமி. சார்மினார், கோல்கொண்டா கோட்டை, குதுப் ஷாஹி கல்லறை, போங்கிர் கோட்டை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் உண்டு. திரைப்படத் தயாரிப்புத் தொழிலுக்குப் புகழ்பெற்ற ராமோஜி ராவ் திரைப்பட நகரம் ஹைதராபாதில் உள்ளது.
பேசுபொருள்: தெலங்கானா போராட்டத்தில் முன்னின்றதாலேயே தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்குத் தனி செல்வாக்கு. வளர்ச்சித் திட்டங்களை சாதனைகளாகப் பேசுகிறது. பரம வைரியான தெலுங்கு தேசத்துடன் கூட்டணி சேர்ந்திருக்கிறது காங்கிரஸ். பாஜகவுக்கும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கும் மறைமுகக் கூட்டு என்று அது பேசுகிறது. பாஜகவும் தனித்துக் களமிறங்குகிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போட்டியிடவில்லை.
ராஜஸ்தான்
இந்தியாவின் வட மேற்கில் பாகிஸ்தானை ஒட்டிய எல்லைப்புற மாநிலம். பாஜக, காங்கிரஸ் இரண்டும் பிரதானக் கட்சிகள். மற்ற கட்சிகளுக்கு இங்கு செல்வாக்கு கிடையாது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறுவது கேரளத்தைப் போல இங்கும் வழக்கம். மொத்தம் உள்ள 200 தொகுதிகளில், பாஜக 163, காங்கிரஸ் 21 இடங்களைக் கடந்த சட்ட மன்றத்தில் கையில் வைத்திருந்தன.
மாநிலப் பின்னணி: பரப்பளவு 3,42,239 ச.கி.மீ. நாட்டின் பரப்பளவில் 10.4%. பரப்பளவில் நாட்டின் முதல் மாநிலம். மக்கள்தொகை 6.86 கோடி. மக்கள்தொகையில் ஏழாவது மாநிலம். வட மேற்கில் பாகிஸ்தானின் பஞ்சாபும், மேற்கில் சிந்துவும் இதன் எல்லைகள். கல்வியறிவு 67.06%. ஆட்சிமொழி: இந்தி, ஆங்கிலம். ஜிடிபி ரூ.8.40 லட்சம் கோடி. மாவட்டங்கள் 33. சட்ட மன்றத் தொகுதிகள் 200. மக்களவைத் தொகுதிகள் 25. இந்துக்கள் 88.49%. முஸ்லிம்கள் 9%. கிறிஸ்தவர்கள் 0.14%.
பொருளாதாரம்: கனிம அகழ்வு, கச்சா எண்ணெய் தயாரிப்பு, கால்நடை வளர்ப்பு, வேளாண்மை முக்கியத் தொழில்கள். அன்றாடம் 3 லட்சம் பீப்பாய் கச்சா பெட்ரோலிய எண்ணெய் எடுக்கப்படுகிறது. சலவைக்கல் என்று அழைக்கப்படும் பளிங்குக் கல் வெட்டியெடுப்பு முக்கியக் கனிமத் தொழில். உப்பு, செம்பு, துத்தநாகம் வெட்டியெடுக்கப்படுகின்றன. நாட்டின் உரோம உற்பத்தியில் 40% முதல் 50% வரை ராஜஸ்தானுடையது. பாலியெஸ்டர் இழை தயாரிப்பில் நாட்டின் இரண்டாவது மாநிலம். மேற்கு பணஸ், லூனி, கக்கர் உள்ளிட்ட ஆறுகள் உண்டு.
கிராமம் – நகரம்: தலைநகரம் ஜெய்ப்பூர். பெரிய நகரங்கள் ஜோத்பூர், கோட்டா, பிகானீர், உதய்ப்பூர், அஜ்மீர். ஆரவல்லி மலைகள் அழகு செய்யும் மாநிலம் இது. சாம்பர், குச்சமான், தித்துவானா, பச்பத்ரா, ஃபலோதி ஆகிய உப்புநீர் ஏரிகள் உள்ளன. ராஜஸ்தானின் நிலைமையைக் கருதி பஞ்சாப், ஹரியாணா மாநிலங்கள் உபரிநீரைக் குடிப்பதற்கும் விவசாயத்துக்கும் தருகின்றன. சட்லெஜ், பியாஸ், ராவி ஆறுகளின் உபரிநீர் நிலத்திலிருந்து உயர்த்திக் கட்டப்பட்ட கான்கிரீட் கால்வாய்கள் மூலம் எடுத்துவரப்படுகிறது. இது விவசாயத்துக்கும் கால்நடை வளர்ப்புக்கும் பெரிதும் உதவுகிறது. ராஜஸ்தானில் வெள்ளாடு, செம்மறி ஆடு, பசு, எருது, ஒட்டகம் வளர்ப்பு அதிகம்.
பேசுபொருள்: முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் மீதான அதிருப்தி மக்களிடம் மட்டுமல்லாது கட்சிக்குள்ளும் எதிரொலித்தது. வேலைவாய்ப்பின்மையை காங்கிரஸ் பிரச்சினையாகப் பேசியது. காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார், கோஷ்டிப் பூசல் ஆகியவற்றை பாஜக பேசியது.
மத்திய பிரதேசம்
இந்தியாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள மாநிலம். பாஜக, காங்கிரஸ் இரண்டும் பிரதானக் கட்சிகள். பாஜகவின் கோட்டை. 15 ஆண்டுகளாக அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுஹான். மொத்தம் உள்ள 231 தொதிகளில், பாஜக 166, காங்கிரஸ் 57, பகுஜன் சமாஜ் 4 இடங்களைக் கடந்த சட்ட மன்றத்தில் கையில் வைத்திருந்தன.
மாநிலத்தின் பின்னணி: பரப்பளவு 3,08,252 ச.கி.மீ. பரப்பளவில் இரண்டாவது மாநிலம். மக்கள்தொகை 7.27 கோடி. மக்கள்தொகையில் ஐந்தாவது இடம். சட்ட மன்றத் தொகுதிகள் 230. மக்களவைத் தொகுதிகள் 29. ஜிடிபி ரூ.2.86 லட்சம் கோடி. வளர்ச்சியடைந்துவரும் மாநிலம். வட மேற்கில் ராஜஸ்தான், வடக்கில் உத்தர பிரதேசம், கிழக்கில் சத்தீஸ்கர், தெற்கில் மஹாராஷ்டிரம், மேற்கில் குஜராத் இதன் எல்லைகள். மொத்தம் 52 மாவட்டங்கள். ஆட்சிமொழி இந்தி. கல்வியறிவு 72.6%. இந்துக்கள் 91%. முஸ்லிம்கள் 6.6%. பழங்குடிகள் 21%.
பொருளாதாரம்: நிலக்கரி, சுண்ணாம்புக்கல், எண்ணெய் வித்துக்கள், இரும்புத் தாது, தாமிரம், மாங்கனீஸ், வைரம் என்று இயற்கை வளங்கள் ஏராளம். ஜவுளித் துறை, சிமென்ட், உருக்கு, உணவுப் பதப்படுத்துதல், ஆட்டோமொபைல் உள்ளிட்ட தொழில் துறைகள் வளர்ச்சி கண்டிருக்கின்றன. வேளாண்மை சார்ந்த மாநிலம். நர்மதை, தபதி நதிகள் பாயும் பிரதேசம். பஞ்சார், தவா, மச்னா, ஷக்கர், டென்வா, சோன்பத்ரா ஆகிய சிறு ஆறுகளும் பாய்கின்றன. கோதுமை, சோயாபீன்ஸ், உளுந்து, கரும்பு, நெல், சோளம், பருத்தி, கடுகு அதிகம் விளையும் மாநிலம். நிலப்பரப்பில் 30% காடுகள். நாட்டின் 12% காடுகள் இங்கு உள்ளன. வேளாண் துறையைப் பெரிய அளவில் வளர்த்தெடுத்திருக்கிறார் சவுஹான். அதேசமயம், விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காததும் பெரிய பிரச்சினையாகியிருக்கிறது.
கிராமம் - நகரம்: தலைநகரம் போபால். வேகமாக நகர்மயமாகிவரும் மாநிலங்களில் ஒன்று. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நகரங்கள் இந்தூர், போபால், ஜபல்பூர், குவாலியர். 14 மாநகராட்சிகள். 96 நகராட்சிகள். நகரப் பஞ்சாயத்துகள் 249. யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களான கஜுராஹோ சிற்பங்கள், சாஞ்சி ஸ்தூபி, பீம்பேட்கா பாறை வாழிடங்கள் இங்கு உண்டு. மனிதவளத்தில் மிகவும் பின்தங்கிய மாநிலம். வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்று. ஊட்டச்சத்து குறைவால் வளர்ச்சி குன்றிய மாநிலம். பெண்களிடையே ரத்தசோகை அதிகம். பெண் சிசுக் கருக்கலைப்பும் அதிகம்.
பேசுபொருள்: வியாபம் ஊழல், விவசாயிகள் மீதான துப்பாக்கிச்சூடு, 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரே கட்சியின் ஆட்சி, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றைப் பேசியது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸுக்குள் முதல்வர் வேட்பாளர் யார் என்று பாஜக கேட்டது. இங்கும் காங்கிரஸின் கோஷ்டிப் பூசலை பாஜக விமர்சனமாக்கியது. பகுஜன் சமாஜ், சமாஜவாதி ஆகிய கட்சிகள் ஒருசில பகுதிகளில் மட்டும் செல்வாக்குடன் உள்ளன.
No comments:
Post a Comment