Saturday, December 22, 2018

சொமாட்டோ சம்பவமும் ஒரு உணவக அதிபரும்!

Published : 21 Dec 2018 09:24 IST

கோம்பை அன்வர்




சொமாட்டோ சம்பவம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தங்கள் செல்பேசி செயலி மூலம் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு உணவகத்திலிருந்து உணவை வாங்கிச் சென்று கொடுக்கும் நிறுவனம் இது. அப்படி வாடிக்கையாளருக்குக் கொடுக்கச் சென்ற உணவில் கொஞ்சத்தை அதைக் கொண்டுசென்ற ஊழியர் எடுத்துச் சாப்பிட்டார். இதை ஒருவர் படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பகிர, விளைவாக அந்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இது, ஒரு பிரபல சென்னை உணவகத்தில், 25 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு சம்பவத்துடன் ஒப்பீடு செய்யத் தூண்டுகிறது. 1990-களில் எழும்பூர் ஓட்டல் ஒன்றில் நடந்த ஒரு சம்பவம். சிக்கன் 65 விரும்பி ஆர்டர் செய்தவருக்கு சர்வர் கொண்டுவந்து வைத்த தட்டைக் கண்டதும் அதிர்ச்சி. வழக்கமாக ஆறு துண்டுகள் இருக்கும். அன்று ஒன்று குறைவாக இருந்தது.

அடிக்கடி வந்து விரும்பி உண்பவர்போலும். எண்ணிக்கை குறைவது சந்தேகத்தை எழுப்ப, கல்லாவுக்குச் செய்தி போகிறது. மேலாளருக்குச் செய்தி செல்ல, அதை எடுத்துச் சென்ற சர்வர் விசாரிக்கப்படுகிறார். ஒரு துண்டு எடுத்துச் சாப்பிட்டதாக ஊழியர் ஒப்புக்கொள்ள, அவரைப் பணியிலிருந்து நீக்கப் பரிந்துரைக்கிறார் மேலாளர். இரவு உணவக அதிபர் வருகிறார். தவறு செய்த ஊழியர் அவர் முன் நிறுத்தப்படுகிறார். பெரியவர் “உண்மைதானா?” என்று கேட்க, ஊழியர் “பசித்தது, எடுத்துச் சாப்பிட்டுவிட்டேன், தவறுதான்” என்று கண்ணில் நீர் வழிய ஒப்புக்கொள்கிறார். மேலும் சில கேள்விகள், ஊழியரின் வறுமை நிலை புரிகிறது. அவர் சம்பளத்தை மட்டுமே நம்பி ஊரில் குடும்பம் இருக்கிறது என்பதையும் உணர்கிறார் உணவக அதிபர்.

மேலாளரிடம் திரும்பி, “பசியோடு இவர் ஏன் வேலை செய்ய வேண்டும்? கஸ்டமர்களைக் கவனித்தால் மட்டும் போதாது, ஊழியர்கள் நேரத்துக்கு நன்கு சாப்பிட்டார்களா என்பதையும் மேனேஜர் பொறுப்பாகப் பார்க்க வேண்டும்” என்று அறிவுரை சொல்லிவிட்டு, அடுத்தொன்றைச் செய்கிறார். “இனி நேரத்துக்குச் சாப்பிட்டுவிட்டு வேலை செய்யுங்கள், இதுபோன்ற தவறு இனி நிகழக் கூடாது” என்று அறிவுறுத்திவிட்டு, அவருக்குச் சம்பளத்தையும் கொஞ்சம் உயர்த்துகிறார். வேலை போகப்போகிறது என்று பயந்திருந்த ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி. நிறுவனரின் மறைவுக்குப் பின்னரும் அந்த ஊழியர் ஓட்டலில் தொடர்ந்து பணியாற்றினார் என்கிறார்கள்.

கடும் போட்டியில் சந்தையைப் பிடிப்பதே முதன்மையாகவும், லாபம் மட்டுமே குறிக்கோளாகவும், நிரந்தர ஊழியர்களைத் தவிர்த்து காண்ட்ராக்ட் தொழிலாளர்களை அடிமைகளாகக் கருதும் எண்ணற்ற கார்ப்பரேட் நிறுவனங்களில், இன்று மனிதர்கள் வெறும் எண்ணிக்கையாக ஆகிவிட்ட நிலையில், மனிதாபிமானம் காணாமல்போகின்றது. இதில் மிகக் குறைந்த விலையில் அனைத்தையும் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களும் குற்றவாளிகளே!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024