Saturday, December 22, 2018

நடைபயிற்சி சென்ற பெண்களிடம் செயின் பறித்த 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை: பண்ருட்டி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published : 21 Dec 2018 08:39 IST

விருத்தாசலம்



செயின் பறிப்பு - சித்தரிப்பு படம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் என்எல்சி ஊழியர்கள் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த பெண்கள், மாலை நேரத்தில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 2007 முதல் 2010 வரை வெவ்வேறு தினங்களில் நெய்வேலி வட்டம் 12 மற்றும் 20 பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பெண்களிடம் பைக்கில் வந்த மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தனலட்சுமி, ஜானகி, மணிபாலா, சித்ரா உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பெண்கள், நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இப்புகாரின் அடிப்படையில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக நெய்வேலி மாற்றுகுடியிருப்பைச் சேர்ந்த செந்தில்குமார் (33), வட்டம் 4-ஐ சேர்ந்த வசந்தராஜா (35) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நெய்வேலி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பண்ருட்டி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பண்ருட்டி குற்றவியல் நீதிமன்ற நடுவர் கணேஷ் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி ஒவ்வொரு வழக்கிலும் தலா 2 ஆண்டுகள் வீதம் 10 வழக்குகளிலும் இருவருக்கும் தலா 20 ஆண்டு சிறை தண்டனையும், ஒவ்வொரு வழக்கில் தலா ரூ.1,500 வீதம் 10 வழக்குகளுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அரசு தரப்பு வழக்க றிஞராக தேவசுந்தரி ஆஜரானார். தீர்ப்பைத் தொடர்ந்து செயின் பறிப்பு கொள்ளையர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024