Saturday, December 22, 2018

ஏழு ரூபாய் சம்பாதித்த போது கிடைத்த மகிழ்ச்சி ஏழு கோடி வருமானத்தில் இல்லை: இளையராஜா

Published : 21 Dec 2018 17:38 IST

சேலம்



இளையராஜா: கோப்புப்படம்

எப்பொழுது கேட்டாலும் புத்தம்புது பூ போல இருப்பதே பாடல்; அதுவே பாடலுக்கான தகுதியாகும் என, சேலத்தில் 75-வது பிறந்த நாள் விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பேசினார்.

சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இளையராஜா கல்லூரி மாணவ, மாணவியரிடம் பேசியதாவது:

"இசையை உருவாக்க முடியாது; இசை என்பது உருவானது. பறவை, அருவிபோல தானாக வருகிறது. நான் எதையும் உருவாக்கவில்லை. ஸ்விட்ச்போட்ட மாதிரி மெட்டு என்னிடம் கொட்டுகிறது. காலம் முழுவதும் எப்பொழுது கேட்டாலும் எந்த பாடல் அன்றலர்ந்த புத்தம் புது மலர்போல, நீங்கள் கேட்கும் பாடலை கேட்டு மகிழ்கிறீர்ளோ அது தான் பாடலுக்கான தகுதி. மாணவ, மாணவியர்கள் கல்லூரிக்கு வருகிறீர்கள், படிக்கிறீர்கள், சென்றுவிடுகிறீர்கள். ஆனால், நீங்கள் புது நீரோட்டம் போல எங்கும் பாய்ந்து, பசுமையாக இருக்க வேண்டும். நீங்கள் செய்யும் பணி நெஞ்சில் நிற்கும் ஈரம் போல, எப்பொழுதும் பசுமையாக இருக்க வேண்டும்.

எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை, ஆனால், ஜோசியர் எனக்கு 8-ம் வகுப்பு மேல் படிப்பு வராது என கூறிவிட்டார். சேரன் செங்குட்டுவன் மூத்தவன் இருக்கும் இளையவரான இளங்கோவடிகளே பட்டத்தரசராவார் என ஜோசியர் கூறினார். ஜோசியரின் கூற்றை பொய்யாக்க இளங்கோவடிகள் துறவு பூண்டதைபோல, நானும் ஜோசியத்தை பொய்யாக்குகிறேன் என்றேன்.

ஆனால், எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்பு சேர கல்வி கட்டணம் ரூ.25 எனது அம்மாவிடம் இல்லை. வேலைக்கு சென்று பணம் சம்பாதித்து படிக்க, எனது அம்மா இசைவு தந்தார். வைகை அணை கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. அதில் பைப் மூலம் தண்ணீரை பாய்க்கும் வேலையில் உற்சாத்துடன் சேர்ந்தேன். தண்ணீரோடு சேர்ந்த எனது பாடல் சத்தத்துடன் வைகை அணையின் கட்டுமான பணி நடைபெற்றது.

அவ்வப்போது கட்டுமான பணியை மேற்பார்வையிட பொறியாளர் எஸ்.கே.நாயர் வருவார். அப்போதெல்லாம் கட்டுமான பணியிடத்தில் எழும் பெரும் சத்தத்தை பொருட்படுத்தாமல், யாரையும் கவனிக்காமல் தண்ணீரை பாய்த்தபடி எனது பாடல் வரி ஒலித்துக் கொண்டிருக்கும். மேற்பொறியாளர் என்னை பார்த்து என்ன படித்திருக்கிறாய் என்றார். எட்டாம் வகுப்பு என்றேன். அவர் அலுவலக சிப்பாந்தியாக பணியில் சேர்த்த அழைத்து கொண்டு சென்றுவிட்டார். அங்கு பாட முடியாத என்ற ஒரே வருத்தம் மட்டுமே மிஞ்சியிருந்தது.

வேலைக்கு சேர்ந்து நான் சம்பாதித்த முதல் மாத சம்பளம் ஏழு ரூபாய் புத்தம் புதிய நோட்டை கையில் வாங்கியதும் ஏற்பட்ட மனகிளர்ச்சியுடனான உள்ளார்ந்த மகிழ்ச்சியில் வானளாவி பறந்த மனது, ஏழு கோடி ரூபாய் சம்பாதித்தபோது அந்த சந்தோஷ அனுபவம் கிடைக்கவில்லை. எனவே, சந்தோஷம் என்பது பணத்தில் இல்லை, அவரவரின் மனதில் தான் உள்ளது"

இவ்வாறு இளையராஜா பேசினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024