Monday, December 24, 2018


ஏழு ஆண்டுகளுக்கு மேல், 'அரியர்' வைத்தால் பட்டம், 'பணால்'

Updated : டிச 24, 2018 00:58 | Added : டிச 23, 2018 23:23




சென்னை: 'ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, 'அரியர்' வைத்துள்ள மாணவர்களுக்கு, இனிமேல் தேர்வுகள் கிடையாது' என, அண்ணா பல்கலை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.நாட்டில் உள்ள அனைத்து பல்கலை மற்றும் கல்லுாரி மாணவர்களும், தங்களின் படிப்பு காலத்தில், தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு, அடுத்த மூன்று ஆண்டுகள் வரை, 'அரியர்' தேர்வு எழுதலாம். அதில், தேர்ச்சி பெறுவோருக்கு, பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படும்.ஆனால், அண்ணா பல்கலை மாணவர்களுக்கு, இதற்கு மாறாக, இன்ஜி., படிப்பு காலமான நான்கு ஆண்டுகள் போக, மேலும், மூன்று ஆண்டுகளில் மட்டுமின்றி, அதன்பிறகும், 'அரியர்' தேர்வுகள் நடத்தப்பட்டன.இதனால், ஒவ்வொரு தேர்விலும், பல ஆண்டுகளுக்கு முந்தைய பாட திட்டப்படி, பல்வேறு பாடங்களுக்கு, 1,000க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் தயாரிக்க வேண்டியிருந்தது;

பல்கலைக்கு பணிச்சுமையும் அதிகரித்தது.இதற்கிடையில், மற்ற பல்கலைகளை போல, அண்ணா பல்கலையும், அரியர் தேர்வுகள் விஷயத்தில், விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., தரப்பில் வலியுறுத்தப்பட்டது.இதுகுறித்து, அண்ணா பல்கலையின் சிண்டிகேட் கூடி விவாதித்தது. அதில், 'இன்ஜி., மாணவர்கள், ஏழு ஆண்டுகளுக்கு மேல், அரியர் தேர்வு எழுத அனுமதி இல்லை' என, முடிவானது.இது குறித்து, மாணவர்களுக்கு உரிய அறிவிப்பு செய்யப்பட்டு, இரண்டு தேர்வுகளில் அரியர்களை முடிக்க சலுகை அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு, பிப்., மற்றும் ஆகஸ்ட் பருவ தேர்வுகளில், அரியர் பாடங்களுக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று விடும்படி அறிவுறுத்தப்பட்டது. இந்த வாய்ப்பை பெரும்பாலான மாணவர்கள் பயன்படுத்தவில்லை.எனவே, வரும் பருவ தேர்வுகளிலும், மாணவர்கள், அரியர் தேர்வுகளை எழுத அனுமதிக்க வேண்டும் எனக்கோரி, அண்ணா பல்கலைக்கு கடிதங்கள் வந்துள்ளன.இது குறித்து, அண்ணா பல்கலையின் பொறுப்பு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:பல்கலை ஏற்கனவே அறிவித்தபடி, அரியர் தேர்வுக்கான சலுகை காலம் முடிந்து விட்டது. எனவே, ஏழு ஆண்டுகளுக்கு மேலாக, அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு, இனி தேர்வு நடத்தப்படாது. இது குறித்து, பல்கலைக்கு, மாணவர்கள் எந்த கடிதமும் அனுப்ப வேண்டாம்; அதற்கு, பதில் அளிக்க வாய்ப்பில்லை.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பால், எப்படியும் பட்டம் பெற்று விடலாம் என்ற கனவில் இருந்த, ஆயிரக்கணக்கான இன்ஜி., மாணவர்களுக்கு பட்டம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024