Monday, December 24, 2018

என்றும் வாழும், 'எங்கள் வீட்டு பிள்ளை'

Added : டிச 24, 2018 00:05





'இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்' என, சினிமாவில் பாடியது மட்டுமின்றி, வாழ்ந்தும் காட்டியவர், எம்.ஜி.ஆர்., மட்டுமே. இறக்கும் வரை மாநில முதல்வராக இருந்தார்.மறைந்தும் மக்களின் மனங்களில், 'முதல்வராக' இன்றும் வாழ்கிறார். அவரது நினைவு நாள் இன்று. அவருடன், 40 ஆண்டுகளாக நெருக்கமாக இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, நான் பெற்ற பாக்கியம். அவரை பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். அவரை பற்றி, எத்தனையோ விஷயங்களை தெரிவித்திருந்தாலும், இதுவரை வெளியில் சொல்லாதவையே, பின் வரும் நிகழ்வுகள்.எம்.ஜி.ஆரின்., அறிவுரைஎம்.ஜி.ஆரை மிகவும் நேசிப்பவர், படத் தயாரிப்பாளர், பி.எல்.மோகன்ராம். அது போலவே, என்னிடம் மிகுந்த அன்புடன் பழகி வந்தவர். இவர், பழம்பெரும் நடிகை, எம்.ஆர்.சந்தானலட்சுமியின் மருமகன். எம்.ஜி.ஆரை வைத்து, ஆசைமுகம் படத்தை தயாரித்தவர்.அடுத்தும், எம்.ஜி. ஆரை வைத்து, படம் தயாரிக்க நினைத்து, இன்பநிலா எனும் பெயரையும் வைத்தார். அந்த சமயத்தில், எம்.ஜி.ஆருக்கு குண்ட டிபட்டதால், அவரால் நடிக்க முடியாமல் போனது. பின், எம்.ஜி.ஆர்., அவரிடம் கதையம்சத்தை மாற்றி, ஜெய்சங்கரை வைத்து எடுத்து கொள்ளும்படி கூறிவிட்டார்.படத்திற்கு, ராஜா வீட்டுப் பிள்ளை என, பெயர் சூட்டப்பட்டது. அதில், வில்லன் நம்பியாரின் கூட்டாளியாக, மலையப்பன் எனும் வேடத்தை எனக்கு தருவதாகவும், அதில், ஜெய்சங்கருக்கும், எனக்கும் சண்டை காட்சி வைத்துள்ளதாகவும், முன்னரே கூறியிருந்தார், மோகன்ராம்.ஆனால், மருத்துவமனையில், எம்.ஜி.ஆருக்கு அருகிலேயே இருந்து, பணிவிடைகள் செய்து வந்ததால், அந்த வேடத்திற்கு வேறு ஒருவரை போட்டுக் கொள்ளும்படி கூறிவிட்டேன். இருப்பினும், நானே அவ்வேடத்தில் நடிக்க வேண்டும் என, விரும்பிய மோகன்ராம், மருத்துவமனைக்கு, எம்.ஜி.ஆரை காண வந்தபோது, நான் ஒப்புக்கொள்ளாத விஷயத்தை, எம்.ஜி.ஆரிடம் கூறி விட்டார்.'உடனே என்னை அழைத்த, எம்.ஜி.ஆர்., 'ஏன் மறுக்கிறாய்... நல்ல வாய்ப்புகள் வரும் போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உடனே ஒப்புக்கொண்டு நடி' என்றார். என்னதான் தன்னுடன் இருந்தாலும், தன் படங்களில் நடித்து வந்தாலும், வெளியிலிருந்து வரும் வாய்ப்புகளை யும் பயன்படுத்தி, அவர்கள் முன்னேற வேண்டும் என்பதே, எம்.ஜி.ஆரின் உயர்ந்த எண்ணம்.உழைப்பை உணர்ந்தவர்எம்.ஜி.ஆருடன் நான் நடித்து, வெளியான முதல் திரைப்படம், நாடோடி மன்னன் என்றாலும், அதற்கு முன்னரே, 1956ல், எம்.ஜி.ஆர்., நடிப்பில் வெளிவராத, அதிரூப அமராவதி எனும் படத்தின் சண்டை காட்சி ஒன்றில் நடித்துள்ளேன்.வாஹினி ஸ்டுடியோவில், எம்.ஜி.ஆருடனான சண்டை காட்சி படமாக்கப்பட்டது. சண்டை பயிற்சி இயக்குனராக, புதிய வரவாக, பலராம் நியமிக்கப்பட்டிருந்தார். ஒரு மாதம் ஆகியும் எங்களுக்கு பணம் கிடைக்கவில்லை.இது குறித்து கேட்டபோது, 'படம் தொடருமா என தெரியவில்லை; நீங்கள் படத்தின் கம்பெனிக்கு சென்று கேட்டுப் பாருங்கள்' என பலராம் கூற, நாங்கள் மூவரும், தியாகராயநகர் ராஜாபாதர் தெருவில் இருந்த, பட தயாரிப்பு அலுவலகத்திற்கு சென்ற போது, படம் நின்று போனது தெரிந்தது.மறுநாள், எம்.ஜி.ஆரிடம் நாங்கள் அதைக் கூற, 'சரி, உங்களுக்கு எவ்வளவு பேசப்பட்டது' எனக் கேட்க, ஆளுக்கு, 150 ரூபாய் என்றோம். உடனே, எம்.ஜி.ஆர்., தன் சட்டை பையிலிருந்து, 450 ரூபாய் எடுத்து, எங்களிடம் கொடுத்து, 'யாரிடமும் சொல்ல வேண்டாம்' எனக் கூறி, அனுப்பி வைத்தார்.அப்போது, எம்.ஜி.ஆர்., வளர்ந்து வரும் நடிகர் தான். எங்களுக்கு அவர் பணம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. இருப்பினும், எங்கள் தொழிலின் உழைப்பை உணர்ந்து, அவரது சொந்த பணத்தை கொடுத்ததை என்றும் மறக்க இயலாது.

எம்.ஜி.ஆரின் தமாஷ்எம்.ஜி.ஆரை பொறுத்தவரை, யாரிடத்தும், ஏற்றத்தாழ்வு பார்த்து பழகியதில்லை. ஏழை, பணக்காரன், உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்ற இடைவெளியை விரும்பாதவர். உதாரணத்திற்கு, மாடப்புறா படப்பிடிப்பிற்காக, கொடைக்கானல் செல்லும் வழியில், கொடைரோடில் ஒரு பகுதியில் மெதுவாக சென்ற அவரது காரையும், அவரையும் அடையாளம் கண்ட ஒரு பிச்சைக்காரர், 'எஜமான் எஜமான்' என கூப்பிட்டார்.உடனே, டிரைவர், ராமசாமியிடம் காரை நிறுத்தச் சொன்ன, எம்.ஜி.ஆர்., இறங்கி, அந்த பிச்சைக்காரரை அருகே அழைத்தார். ஓடோடி வந்த அவரிடம், மிகவும் கனிவுடன், 'இனி யாரையும் எஜமான் என அழைக்காதே; எல்லோரும் ஒரு வகையில் எஜமானர்கள் தான்' எனக் கூறி, 10 ரூபாயை கொடுத்தார். 1962ம் ஆண்டில், 10 ரூபாய் மதிப்பு அதிகம்.மெத்த மகிழ்வுடன் பெற்றுக் கொண்ட அந்த பிச்சைக்காரரிடம், 'உன் பெயர் என்ன?' எனக் கேட்டார். 'பெரியசாமி' என்றார் அவர். அதற்கு எம்.ஜி.ஆர்., 'ஏம்பா நீயே பெரியசாமியாக இருந்து கொண்டு, மற்றவர்களை எஜமான் என அழைக்கலாமா?' என, தமாஷாக கூறினார்.பிச்சைக்காரர் தானே என, ஏளனமாக கருதாமல், அவரும் ஒரு மனிதன் தானே என்ற உயர்ந்த சிந்தனை தான், அங்கு எம்.ஜி.ஆருக்கு தோன்றியது என்பதை, நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். அவர் தான் எம்.ஜி.ஆர்.!-கே.பி.ராமகிருஷ்ணன்,எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராக இருந்தவர்99406 59300.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024