Tuesday, May 5, 2015

பிளஸ் 2: எப்படிப்பட்ட தேர்வு முடிவுக்கும் கவலை வேண்டாம்!

Return to frontpage
எஸ்.எஸ்.லெனின்

பள்ளி மாணவர்களைத் தேர்வுக்கு தயார் செய்வது ஒரு கலை என்றால், தேர்வு முடிவுகளை எதிர்கொள்ள ஆயத்தம் செய்வதும் ஒரு கலைதான். முன்னதற்கு வருடம் முழுக்க உழைப்பைக் கொட்டும் மாணவரின் குடும்பத்தினர், பின்னதை அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால், அதற்குக் கொடுக்கும் விலை சில நேரம் மோசமான விளைவைத் தந்துவிடலாம்.

காரணம் தேர்வு முடிவுகளில் தோல்வியை உணர்வது ஆளாளுக்கு மாறும். ’ஜஸ்ட் பாஸ்’ என்பது சில மாணவர்களுக்கு உற்சாக வெற்றியாகவும், உச்ச மதிப்பெண்ணில் ஒன்றிரண்டு குறைந்துபோவது பலருக்கு துவளச்செய்யும் தோல்வியாகவும் உணரப்படுவது இந்த வகையில்தான்.

சொச்ச மதிப்பெண் இழப்பால் குறிப்பிட்ட உயர்கல்வி படிப்புக்கான வாய்ப்பை இழக்கும் நெருக்கடி, இன்றைய மாணவர்களை அதிகளவில் அச்சுறுத்துகிறது. அந்த வகையில் தேர்வுத் தோல்விக்காக முந்தைய தலைமுறையினர் மேற்கொண்ட தவறான முடிவை, எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை எனத் தற்போது எடுக்கும் உணர்வுபூர்வமானவர்கள் அதிகரித்துவிட்டார்கள். தேர்வு முடிவை எதிர்கொள்வது, உயர்கல்வி தொடர்பான முடிவை எடுப்பது போன்ற நெருக்கடி மிகுந்த ‘தங்கத் தருணங்களை’க் கையாளும் மன நல மேலாண்மை குறித்து ஆலோசனை வழங்குகிறார் திருச்சி மன நல ஆலோசகர் டயஸ்:

முடிவுகளை நொந்து பயனில்லை

தேர்வு முடிவுகள் பெரும்பாலும் அறுதியிடப்பட்டவை. வருடம் முழுக்க மாணவர் உழைத்ததற்கான பலாபலன்தான் தேர்வு முடிவு. தேர்வு முடிவு இன்னதென்று மாணவர் மட்டுமல்ல, அவருடைய குடும்பத்தினரும் முன்கூட்டியே அனுமானிக்க இயலும். அப்படியிருக்கும்போது தேர்வு முடிவு வெளியானதும் பெரிதாகப் பதற்றப்படுவதால், ஆகப்போவது ஒன்றுமில்லை.

ஒரு வேளை பாதகமான தேர்வு முடிவாக இருப்பினும், அந்த முடிவுகள் மாணவரை முடக்கிவிடாமல் தற்காப்பதும், அதிலிருந்து மீள்வதற்கு உதவுவதும் ஆரோக்கியமான போக்கு. வாழ்வின் அடுத்தகட்டத்துக்கான, ஒரு இனிய தொடக்கத்துக்கான வாய்ப்பை, தேர்வு முடிவு அப்போதைக்கு நழுவச் செய்திருக்கலாம்; ஆனால், எந்த வகையிலும் அதுவே வாழ்க்கையின் முடிவாக மாற வாய்ப்பு தரக் கூடாது.

99 சதவீதம் தோல்வியாளர்களே!

தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டதும் தன்னை முழு வெற்றியாளராக மெச்சிக்கொள்பவர்கள் மிகக் குறைவு. முதன்மை வெற்றியாளர்களை அணுகிக் கேட்டால், தாங்கள் எதிர்பார்த்ததிலிருந்து ஒரு சில மதிப்பெண்களை இழந்திருப்பதை ஒப்புக்கொள்வார்கள். அதாவது தேர்வு முடிவுகளில் 99 விழுக்காட்டினர் தனிப்பட்ட வகையில் தோல்வியாளர்களே!

வெளிப்பார்வைக்கு வெற்றி பெற்றிருந்தும் விரும்பிய தொழிற்கல்வி அல்லது பாடப்பிரிவு கைநழுவும் கவலையில் மன அழுத்தம் உள்ளிட்ட மன நலப் பிரச்சினைகளோ, விளிம்பு நிலை உந்துதல்களோ அந்த நேரம் மாணவர்களை அலைக் கழிக்கலாம். ஆகவே, நன்றாகப் படிக்கும் மாணவரின் குடும்பத்தினரும் இது தொடர்பாக உரிய ஆயத்தங்களை மேற்கொள்வது அத்தியாவசியம்.

குடும்பத்தினர் அரவணைப்பு

வெற்றியோ தோல்வியோ அந்தத் தருணத்தில் குடும்பத்தினரின் அரவணைப்பைத்தான் மாணவர்கள் அதிகம் எதிர்பார்ப்பார்கள். அதைச் சரியாக வழங்க குடும்பத்தினர் கூடிப் பேசி, தங்களுக்குள் முதலில் தெளிவைப் பெற வேண்டும். எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்வது அல்லது அவற்றை அதிகம் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பது மாணவருக்கு இயல்பான சூழலை உருவாக்கும்.

தேர்வு எழுதும்வரை தங்கள் எதிர்பார்ப்புகளை மாணவர்கள் உணரச்செய்வது, ஒரு வகையில் நியாயமானது. ஆனால், அதையே தேர்வு முடிவுவரை பிடித்து இழுத்துக்கொண்டிருப்பது, மாணவர்களைக் கடும் மன நெருக்கடிக்குத் தள்ளும். மாறாக மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை; அதில் சறுக்கியவர்கள்கூடப் பல சாதனைகளை செய்திருக்கிறார்கள் என்பதை மாணவர்கள் உணரச் செய்யலாம்.

மீண்டு வர அவகாசம்

தேர்வு முடிவில் ஒரு வேளை எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல் போனால், உடனடியாகப் பெற்றோர் தங்கள் குமுறலை வெளிப்படுத்த வேண்டாம். அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை. எதிர்பார்ப்புகளும், அது பொய்க்கும்போது உருவாகும் ஏமாற்றமும் எந்த வகையிலும் புறக்கணிக்கக்கூடியதல்ல.

அதேநேரம், அப்போதைக்கு அதைத் தள்ளிவைத்து, தேர்வு முடிவு ஆரவாரம் அடங்கிய பிறகு, அதைப் பற்றி ஆரோக்கியமாகப் பகிர்வது எதிர்காலத்தில் எச்சரிக்கையாக இருக்க உதவும். இழப்பு மற்றும் வருத்தத்தில் கரைந்து போனதில் இருந்து மீண்டு வரும் மாணவர்கள், தோல்வி அல்லது சறுக்கல் குறித்து விவாதிக்கவும் ஆலோசனை பெறவும் அவர்களாகவே முன்வருவார்கள்.

எதிர்மறையாளர்களை விலக்குங்கள்

தேர்வு முடிவு நேரத்தில் அனைவரது வீடுகளிலும் இந்த அபத்தம் அதிகம் நடக்கும். ஆளாளுக்கு விசாரிக்கிறேன் பேர்வழி என்று அபத்த வாதங்களையும் அறிவுரைகளையும் அள்ளி வழங்குவார்கள். சில குதர்க்கவாதிகள் குத்திக்காட்டுவதும் உண்டு. முக்கியமாக, பள்ளியில் உடன் படிக்கும் அல்லது அருகில் குடியிருக்கும் சக மாணவர்கள், உங்கள் நண்பர்களின் வீடுகளில் உள்ள மாணவர்களை ஒப்பிட்டு உங்கள் பிள்ளைகளைக் கடிந்து கொள்ளாதீர்கள்.

அது அந்த நேரத்தில் அவர்களை உடையச் செய்யும். எதிர்மறையாளர்கள் முதலில் இந்த அஸ்திரத்தை எடுத்து வீசுவார்கள். அப்படியானவர்களை ஒரு சில நாட்களாவது அண்ட விடாமல் பார்த்துக்கொள்வதுடன், அவர்களுடைய தொலைபேசி விசாரிப்புகளையும் குடும்பத்தினரே எதிர்கொள்வது நல்லது. தேர்வு முடிவு பிள்ளைகளை அதிகம் பாதித்திருந்தால், இடத்தை மாற்றுவதுகூட நல்லது.

தேர்வு முடிவில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் இல்லாது போனால் மறு கூட்டல், திருத்தல் முறையிடல் மூலமாகச் சரி செய்ய வாய்ப்புண்டு. அல்லது அதற்கு உரிய ஆயத்தங்களை மேற்கொள்வதன் மூலம், விரக்தி விலகி அப்போதைய நம்பிக்கை கீற்றுக்கு வாய்ப்பளிக்கலாம். அதே நேரம் மிகையான அல்லது பாவனையான ஆறுதல்களைப் பிள்ளைகள் உணர்ந்தால், மேலும் உடைந்து போக அதுவே காரணமாகிவிடும்.

உள்ளக் கிடக்கையை உணருங்கள்

தேர்வு முடிவுக்கு முன்னும் பின்னும் உள்ள நாட்களில் மாணவர்கள் அதிகம் தனித்திருக்கும் வாய்ப்புகளைத் தவிர்க்க வேண்டும். அவர்களுடைய நலம் நாடும் முதிர்ச்சியானவர்கள் அருகிலிருப்பது அவசியம். நாம் பேசுவதைவிட, அவர்கள் பேச வாய்ப்பளிக்க வேண்டும். உள்ளக் கிடக்கை அவர்களை அறியாது வெளிப்படும்போது, அதற்கேற்றவாறு எதிர்வினையாற்றுவது குடும்பத்தினருக்கு எளிதாக இருக்கும்.

பெண் குழந்தைகளை அழ அனுமதிக்கும் நம் சமுதாய அமைப்பு, ஆண்களுக்கு அந்த வாய்ப்புகளை வழங்குவதில்லை. இதனால், பையன்கள் மிகுந்த மன அழுத்தத்தை உணருவார்கள். மனம் விட்டுப் பேச வைப்பது அவர்கள் மனசை லேசாக்கும்.

இந்த நேரத்தில் அவர்கள் உதிர்க்கும் வார்த்தைகள், உணர்த்தும் குறிப்புகள் அவர்களின் மனப்போக்கைக் கண்ணாடியாகக் காட்டும். குடும்பத்தினர் அவற்றை உற்றுக் கவனித்து, தேவையான அனுசரணையை வழங்குவது அவசியம். ஏனென்றால், எந்தவொரு தவறான முடிவும், அதற்கான எச்சரிக்கைக் குறிப்புகளைச் சுற்றி இருப்பவர்களுக்கு முன்னதாகவே வழங்கும்.

மற்ற பாதிப்புகள்

தேர்வில் தோல்வி அல்லது சறுக்கல் என்பது பல மன நலப் பாதிப்புகளை மாணவர்களிடையே விதைக்கப் பார்க்கும். அவற்றைக் கவனிக்காது விட்டால் பழக்க வழக்கங்கள் மற்றும் சுபாவத்தில் சில மாறுதல்களை உருவாக்கி மீள வாய்ப்பில்லாத புதைகுழிக்குள் இழுத்துவிடும். முக்கியமாக, தன்னம்பிக்கையை இழப்பார்கள். தாழ்வு மனப்பான்மை கவ்வப் பார்க்கும்.

உயர்கல்வியில் சேர்ந்த பின்னர் படிப்பில் முன்புபோல் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள். மாணவரின் நட்பு வட்டம் மாறுவதுடன், அது தவறான புதிய பழக்கங்களுக்கு வித்திடவும் கூடும். ஒரு சிலர் போதை மற்றும் அதற்கு நிகரானவற்றைப் பரிசோதிப்பார்கள். மன ஆறுதலுக்கு வாய்ப்பளிக்கும் நண்பர் குழாமை அதிகம் ஆதரிப்பார்கள். அவர்கள் தரும் அழுத்தத்துக்கு ஏற்ப மாறுவார்கள். இதே ஆறுதலுக்காக சிலர் எதிர்பாலினக் கவர்ச்சியில் இடறுவார்கள்.

இவற்றையெல்லாம் குடும்பத்தினர் அறிந்து வைத்திருப்பதும் அவற்றுக்கான வாய்ப்பில்லாத வகையில் இதமான அரவணைப்பைத் தருவதும், அவர்களைப் பழையபடி மீட்கும். இதற்கு, நேர்மறையான உத்திகள் மட்டுமே பலனளிக்கும். மாணவர்களின் மற்ற திறமைகள், முந்தைய வெற்றிகள் ஆகியவற்றை நினைவுபடுத்துவதுடன், பிரகாசமான எதிர்காலத்துக்கு மிச்சமிருக்கும் உருப்படியான உயர்கல்வி வாய்ப்புகளை உணரச் செய்யலாம்.

அவசியமென்றால் மனநல ஆலோசகர் உதவியையும் நாடலாம். அதில் எந்தத் தயக்கமும் தேவையில்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024