Tuesday, May 5, 2015

கைவிட்ட உறவுகள்... கைகொடுத்த விகடன்...களத்தில் இறங்கிய டாக்டர்!

ன்றைக்கு மதியம் சேலம் அரசு மருத்துவமனையின் பக்கம் சென்றிருந்தோம்.

மருத்துவமனையின் உள்ளே இருந்த (நுழைவாயிலுக்கு அருகிலேயே)... சாக்கடைத் தொட்டிக்குள்  அசைவற்ற நிலையில் படுத்திருந்தார் ஒரு மூதாட்டி. அவர் முகத்தில் மிகப்பெரிய கட்டி ஒன்று இருந்தது. அவரது முகத்தையே மறைத்திருந்தது அந்த கட்டி. ஒட்டிய உடலில் வெறும் எலும்பு மட்டுமே தெரிகிறது. அந்த மூதாட்டியின் உடலில் இருந்து மூச்சுக்காற்று மட்டுமே வெளிவருகிறது. மற்றபடி எந்தவிதமான அசைவுகளும் இல்லை. செருப்பு இல்லாமல் தரையில் காலைக்கூட வைக்க முடியாத அளவுக்கு வெயில் அடித்துக்கொண்டிருக்க, கட்டியால் பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டியின் முகம் வெயிலால் கொதித்துக் கிடந்த சிமெண்ட் கட்டையில் படிந்திருந்தது. மருத்துவமனையில் கேட்பாரற்று கிடந்தார் ஆதரவற்ற மூதாட்டி.
 
நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், ஆயிரக்கணக்கான நோயாளிகள், பார்வையாளர்கள் என அந்த நுழைவாயிலின் வழியாக  மருத்துவமனையின் உள்ளே செல்லும் அத்தனை மனிதர்களும்(!) அந்த மூதாட்டியை பார்த்துவிட்டுத்தான் போயாக வேண்டும். சிலர் பார்த்தும் பார்க்காதது போல தலையை திருப்பிக் கொண்டு சென்றார்கள். இன்னும் சிலரோ..  'ஐயோ பாவம்..!' என்று வாயிலேயே வைத்தியம் பார்த்துவிட்டு சென்றார்கள். ஆனால், அவரை நிழலில் தூக்கி போடக் கூட ஆள் இல்லை. இந்த அவலத்தை நாம் கண்டது ஓர் உயிர் காக்கும் மருத்துவமனையில் என்பதுதான் வேதனை.

உடனடியாக மருத்துவமனையின் ஆர்.எம்.ஓ. டாக்டர் செல்வகளஞ்சியத்தை தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னோம்.  "வெளியில் இருக்கும் 108 ஆம்புலன்சிடம் சொல்லி, அவரை உள்ளே அழைத்துவரச் சொல்லுங்கள் உடனடியாக சிகிச்சை கொடுப்போம்!" என்றார். சும்மாவே நின்ற ஆம்புலன்ஸ்காரர்கள், மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே உள்ள வெறும் 10 அடி தூரத்துக்கு வருவதற்கு,  "நீங்க 108க்கு கால் பண்ணுங்க. அவுங்க சொன்னாதான் நாங்க வர முடியும்!" னு பதில் தந்தார்கள். 
 

 
ஆனால், அடுத்த ஐந்து  நிமிடத்திற்குள்ளாக வெளியில் ஓடிவந்தார் டாக்டர் செல்வகளஞ்சியம். ஆம்புலன்சை அழைத்தார். "எங்கே இருக்கிறார் அந்த மூதாட்டி?" என்று நம்மை அழைத்துக்கொண்டு அந்த இடத்திற்கு ஓடி வந்தார். மூதாட்டியின் உடம்பு அழுக்கு நிறைந்திருந்தது. ஆடையில்லாமல் கிடந்தது. ஆனால், சற்றும் யோசிக்கவில்லை அவர். ஒரு உதவியாளரை கூப்பிட்டு அவரே அந்த மூதாட்டியை மேலே தூக்கி வைத்தார். ஸ்ட்ரெக்ச்சர் கொண்டுவரப்பட்டு மூதாட்டியை உள்ளே அழைத்துச் சென்று அனுமதித்து சிகிச்சையளித்தார் டாக்டர் செல்வகளஞ்சியம்.

சில மணி நேரம் கழித்து டாக்டர் செல்வகளஞ்சியத்திடம் பேசினோம்.
"இப்போதுதான் அந்த மூதாட்டியை குளிக்க வைத்தோம். அவருக்கு கன்னத்தில் இருக்கும் எச்சில் சுரப்பியில் கட்டி இருக்கிறது. தவிர காதும் கேட்கவில்லை. அவருடைய உறவினர்கள் யாரோதான் இங்கு கொண்டுவந்து விட்டுவிட்டு போயிருக்கிறார்கள். அவரை பெட்டில் சேர்த்து சிகிச்சையளித்து வருகிறோம். ஆனால் கட்டியை அகற்றுவது கடினம். அது கேன்சர் கட்டியாக கூட இருக்கலாம். ஆனால் எங்களால் முடிந்தவரை முயற்சி பண்ணுகிறோம்" என்றார். 

ஏழைகளுக்கு டாக்டர்தானே கடவுள்...!


- எம்.புண்ணியமூர்த்தி

படங்கள்: 
எம்.விஜயகுமார்

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024