Monday, May 4, 2015

40 வயதிலும் வேலை தேடலாம்!..by ஆர். கார்த்திகேயன்

Return to frontpage




“இருபது வருஷமா வீட்டிலேயே இருந்ததால் எல்லாம் மழுங்கிப் போச்சு. இனிமேலெல்லாம் என்னால வேலைக்குப் போக முடியும்னு தெரியலை” என்றார் அந்தப் பெண்மணி. “முக்கியமா தன்னம்பிக்கை போச்சு.”

“வீடு, குடும்பம்னு இருந்துட்டேன். இப்ப எல்லாரும் பிஸியாகிட்டாங்க. நான் பெருசா தேவையில்லை. அதான் ஏதாவது வேலைக்குப் போலாம்னு தோணுது. பணம் கூட முக்கியமில்லை. மனசு நல்லா இருக்கணும்னா வேலை வேணும். ஆனா என்ன வேலை கிடைக்கும், நான் எப்படித் தயார் ஆவதுன்னு தெரியலை.”

இப்படித்தான் ஆலோசனைக்கு வந்தார். எனக்குத் தெரிந்து படித்த, திறமையான, வேலைக்குப் போகவல்ல பல்லாயிரக் கணக்கான பெண்களில் அவரும் ஒருவர்.

“உங்களுக்கு வேலைக்குப் போகணும்னு பெரிய எண்ணம் இல்லை, இத்தனை வருஷமா. தவிர, வீட்டில் உள்ள சுகங்களையும் சலுகைகளையும் நீங்கள் இழக்க விரும்பவில்லை. இப்பொழுதும் தனிமையைக் கொல்லத்தான் வேலையை நாடுகிறீர்கள். வேலையின் மீதுள்ள நாட்டத்தில் இல்லை” என்றேன்.

“உண்மைதான், மறுக்கவில்லை. வசதி, குடும்ப ஆதரவு, பிள்ளைகளை வளர்த்தலின் பெருமை எல்லாம் வேறெதையும் யோசிக்க விடவில்லை. இப்போது அவரும் பிஸி. பிள்ளைகளும் பிஸி. எனக்கு என் மீதே பரிதாபமாக இருக்கிறது. நானும் எல்லாரையும்போல வேலைக்குப் போயிருந்தால் லட்சக் கணக்கில் சம்பாதித்திருப்பேன். சரி, அதையெல்லாம் விடுங்கள். இப்போது நான் எங்கே இருந்து தொடங்குவது?” என்று கேட்டார்.

மாற்றம் நல்லது

அவருக்கு விரிவாகச் சொன்னேன், . அவர் போன்ற ஆயிரக்கணக்கானவர்களுக்குப் பயன்பட இன்னும் விரிவாக இதோ:

> முதலில் ஒன்று தெளிவாகத் தெரிய வேண்டும். வேலைக்குப் போவதும் போகாது இருப்பதும் உங்கள் தேர்வு. ஒன்றைவிட ஒன்று உயர்வு அல்ல. இரண்டிலும் சாதக பாதகம் உண்டு. ஆனால் அதை வைத்து உங்கள் சுய மதிப்பை நிர்ணயம் செய்யாதீர்கள். ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறும்போது நிறைய மன மாற்றங்களும் வாழ்வியல் மாற்றங்களும் தேவைப்படுகின்றன. அதனால் மாறத் தயாராகுங்கள். அதுதான் முதல் படி.

> உங்களைப் பற்றி சுய ஆய்வு செய்யுங்கள். உங்கள் கல்வி, அனுபவம், திறன்கள், விருப்பங்கள், அத்தியாவசியம் என அனைத்தையும் பட்டியலிடுங்கள். தேவைப்பட்டால் ஆலோசனையை நாடுங்கள். இங்கிருந்து வேலை தேடலைத் தொடங்குங்கள். மீண்டும் சொல்கிறேன். உங்களை மையப் புள்ளியாக வைத்துத் தேடலைத் தொடங்குங்கள். “இதுக்குதான் நல்ல ஸ்கோப். இதைத் தெரிந்தால்தான் வேலை கிடைக்கும்” என்று சொல்பவர்களின் வார்த்தையால் நம்பிக்கை இழக்காதீர்கள். உங்கள் திறனுக்கும் விருப்பத்துக்குமான வேலை நிச்சயம் எங்கோ உள்ளது, நம்புங்கள்.

> ஆரம்ப நிலை பணியாளர் தேர்வுக்குச் செல்லும் மன நிலையில் இருப்பது நல்லது. ஒரு காலத்தில் நீங்கள் படித்த படிப்பும், அனுபவமும் இப்போது எவ்வளவு பயன்படும் என்று தெரியாது. அதனால் காலிப் பலகையாக மனதை வைத்துக் கொள்வது நல்லது. உற்சாகத்திலும் சுறுசுறுப்பிலும் வேகத்திலும் நீங்கள் இருபது வயதுக்காரருடன் போட்டி போட நேரலாம். வயது காரணமாக அதிகாரம் காட்டாமல் பக்குவத்தையும் விவேகத்தையும் காட்டுங்கள். படிப்பைவிட மனோபாவம் முக்கியம்.

> எடுத்தவுடன் வெற்றியை எதிர்பார்க்காதீர்கள். வீட்டில் பல காலம் இருந்து அலுவல் பணி செய்யாதவர்களை வேலைக்கு எடுக்கும் துணிவு பலருக்கு இருக்காது. அதனால் முதலில் கல்வித் தகுதியை வளர்க்க ஒரு கோர்ஸ் சேரவோ, திறனை வளர்க்கப் பயிற்சிக்குச் செல்லவோ, அனுபவத்தின் பொருட்டு சம்பளம் இல்லாத பணி செய்யவோ தயங்காதீர்கள். உங்கள் வேலைக்கான ஆர்வத்தை நிரூபியுங்கள். இந்த முயற்சிகள் அதற்குப் பயன்படும்.

> வேலைக்குப் போக வேண்டும் என்று நினைத்ததுமே உங்கள் தேடலைத் தொடங்குங்கள். பையன் பரீட்சை முடியட்டும், அவர் டிரான்ஸ்ஃபர் பற்றித் தெரியட்டும், வீட்டு வேலை முடியட்டும் என்றெல்லாம் காத்திருக்காதீர்கள். எல்லாப் பணிகளையும் முடித்துவிட்டு வேலை தேட வேண்டும் என்றால் அது நடக்கவே நடக்காது. அலை ஓய்ந்த பின் குளிக்கக் காத்திருப்பதுபோல அது. “நீங்கள் வேலைக்குச் செல்ல நிஜமாகத் தயாராகவில்லை” என்றுதான் பொருள்.

> அதே போல வேலைக்கோ பயிற்சிக்கோ செல்ல ஆரம்பித்தவுடன் குடும்ப இயக்கத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கும். பணிப்பெண் சரியாக வேலை செய்ய மாட்டாள். மகள் நேரத்துக்குச் சாப்பிட மாட்டாள். மகன் அதிக நேரம் போனில் இருப்பது போலத் தோன்றும். செல்லப் பிராணியும் இளைக்கும். கணவன் கொஞ்சம் கடுப்பாகலாம். ‘இப்பல்லாம் எந்த விசேஷத்துக்கும் வர்றதே இல்லை’ என்று உறவுகள் நோகடித்துப் பார்க்கும். இவை எல்லாம் சில காலத்தில் தானாகச் சீராகும். நீங்கள் தேவையில்லாமல் குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம். வேலையில் கவனம் செலுத்துங்கள்.

> இன்றைய சந்தைக்குத் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள். ஆங்கில அறிவு பல வேலைகளுக்கு அவசியம். கணினியை இயக்கத் தெரிந்து கொள்ளுங்கள். வலைத்தளத்தில் படிக்க, வேலைசெய்யப் பழகுங்கள். வாகனம் ஓட்டத் தெரிந்துகொள்ளுதல் வேலை தேடலுக்கும்/ வேலைக்குச் செல்லவும் பயன்படும். பாஸ்போர்ட் எடுத்து வையுங்கள், எடுக்காதிருந்தால். உங்கள் துறை சார்ந்த படிப்பில் தற்போதைய பட்டயப் படிப்புகள், சான்றிதழ் கிடைக்கத் தகுந்த பயிற்சிகள் போன்றவற்றைத் தேடிச் செல்லுங்கள்.

> தொழில் சார்ந்த படிப்புகள் படித்துப் பல ஆண்டுகள் வீட்டில் தங்கியதால் தொடர்பு விட்டிருந்தால் அந்தத் துறை சார்ந்த முன்னணி வெற்றியாளர்களிடம் ஒரு சில ஆண்டுகள் ஊதியம் இல்லாமல் பணி புரியுங்கள். அந்த அனுபவம் உங்கள் வருங்காலத்தை உறுதிப்படுத்தும். சம்பளத்துக்காகத் தொடர்பில்லாத வேலைக்குப் போகாதீர்கள். காத்திருந்து உங்கள் துறைக்குச் செல்லுங்கள்.

> மிக மிக முக்கியமானது இது. தோல்வி, அவமானம், கேலி, வம்புப் பேச்சு, நிராகரிப்பு என எது வந்தாலும் அதைப் புறந்தள்ளி உங்கள் இலக்கில் செல்லுங்கள். பெண்களின் உழைப்பைத் திருடும் திருமணம், குடும்பம், சமூகம் என எல்லா நிறுவனங்களும் பெண்ணுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதில்லை. அதுதான் உண்மை. ஒரு ஆண் சுலபமாகப் பெறும் வெற்றியைப் பெண் போராடித்தான் பெற வேண்டியுள்ளது. நம் மதிப்பு தெரியாதவர்களைப் பழிவாங்கத் தேவையில்லை. அவர்கள் முன் ஜெயித்துக் காட்டுவது தான் ஒரே வழி

திறன் பற்றாக்குறை இந்தியாவின் மிகப் பெரிய மனிதவளப் பிரச்சினை. உற்பத்தித் துறையைவிட சேவைத் துறை மிக அதிக வேகத்தில் வளர்வது பெண்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்கும். இன்றைய தலைமுறை பெண்கள் அனைவரும் வேலைக்குச் செல்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சென்ற தலைமுறைப் பெண்கள் (மீண்டும்) வேலைக்குச் செல்வது.

காத்திருக்கும் வரை

நம் பெயர்

காற்றென்றே இருக்கட்டும்.

புறப்படும் போது

புயலென்று புரியவைப்போம்!

என்ற மு.மேத்தாவின் கவிதை, வீட்டில் முடங்கிக் கிடக்கும் பெண்களுக்குப் பொருந்துவதாக எனக்குப் படுகிறது.

No comments:

Post a Comment

Salary of staff public info, can be shared under RTI: HC

Salary of staff public info, can be shared under RTI: HC  03.01.2025 Bhopal/Jabalpur : The MP high court has held that salary of a public se...