Tuesday, May 5, 2015

லஞ்ச வழக்கில் அதிகாரி 'சஸ்பெண்ட்'ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை,: தீயணைப்பு துறை அதிகாரியின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.கன்னியாகுமரி கோட்டத்தில், தீயணைப்பு துறையில், கோட்ட அதிகாரியாக, செல்வராஜா என்பவர் பணியாற்றி வந்தார். தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்காக, ஆரோக்கியராஜ் என்பவரிடம், 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, செல்வராஜா மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து, அவரை, 'சஸ்பெண்ட்' செய்து, 2013, மே மாதம், தமிழக அரசு உத்தரவிட்டது. 'சஸ்பெண்ட்' உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுவை பரிசீலிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் செல்வராஜா மனுத் தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தகுதி அடிப்படையில், சட்டப்படி பரிசீலிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டது. 'சஸ்பெண்ட்' உத்தரவை ரத்து செய்ய, அரசு மறுத்து விட்டதால், சென்னை உயர் நீதிமன்றத்தில், செல்வராஜா மீண்டும் மனுத் தாக்கல் செய்தார்.மனுவை, நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். அரசு தரப்பில், கூடுதல் பிளீடர் தனபாலன் ஆஜரானார். மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:
லஞ்சம் பெற்றதாக, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், செல்வராஜா மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புலன் விசாரணைக்குப் பின், நாகர்கோவில், தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில், தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்வதில்லை என, அரசு முடிவெடுத்துள்ளது. ஊழல் வழக்கில், தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய முடியாது என்ற அதிகாரிகளின் முடிவில் குறுக்கிட, உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024