Sunday, May 10, 2015

ஜெ.வழக்கில் தீர்ப்புக்கு பிறகு என்ன நடக்கும்? - ஆச்சார்யா பரபரப்பு பேட்டி!

பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் திங்கட்கிழமை வழங்கப்பட உள்ள நிலையில், தீர்ப்புக்கு பிறகு என்ன நடக்கும் என்பது குறித்த கேள்விக்கு கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள பி.வி. ஆச்சார்யா, பெங்களூருவில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பதிலளித்துள்ளார். 

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசுத் தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்குரைஞர் பவானி சிங்கின் நியமனம் செல்லாது என உத்தரவிடக் கோரி, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பவானி சிங்கின் நியமனம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து,  அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞராக பி.வி.ஆச்சார்யா நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின்படி,  18 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வமான வாதத்தை நீதிமன்றத்தில் ஆச்சார்யா தாக்கல் செய்தார்.

அதில் "ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் மீதும், அவர்கள் அங்கம் வகிக்கும் 35 நிறுவனங்கள் பேரிலும் சட்ட விரோதமாகச் சொத்துகள் குவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஏற்கெனவே சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இதன்மூலம், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டு, சொத்துகள் குவித்துள்ளது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, ஊழல் தடுப்புச் சட்டம் 120 பி-இன் கீழ் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்குத் தண்டனை வழங்கியது. அதை உயர் நீதிமன்றமும் உறுதிசெய்ய வேண்டும். 

மேலும் இந்த மேல்முறையீட்டு மனுவே சட்டப்பூர்வமானது அல்ல. இந்த வழக்கை நடத்தியது கர்நாடக அரசு. அவர்கள்தான் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞரை நியமித்து வாதங்களை வைத்தார்கள். வழக்கின் தீர்ப்பு வந்து, மேல்முறையீட்டுக்கு இந்த வழக்கு போனது என்றால், எதிர் மனுதாரராகக் கர்நாடக அரசைச் சேர்த்திருக்க வேண்டும், அவர்களது பதிலை வாங்கி இருக்க வேண்டும். அப்படி கர்நாடக அரசுக்குத் தெரியாமல் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து விசாரணையை முடித்திருக்கிறார்கள். எனவே இந்த மேல்முறையீட்டு மனுவே செல்லாது' என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் இன்றைய பேட்டியில் தமது இந்த எழுத்துப்பூர்வ வாதத்தை மீண்டும் குறிப்பிட்டார். 

அதனைத் தொடர்ந்து, திங்கட்கிழமை தீர்ப்பு எப்படி இருக்கும் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, தம்மால் அதுமாதிரி யூகமாக எதையும் கூற முடியாது அது தொடர்பாக பதிலளிக்க மறுத்து விட்டார். 

"அதே சமயம் தீர்ப்பு தேதியன்று ஜெயலலிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக தேவையில்லை. ஒருவேளை தீர்ப்பில் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தாலும், அதற்கான உத்தரவு விசாரணை நீதிமன்றத்திற்கு செல்லும். பின்னர் விசாரணை நீதிமன்றம்தான் ஜெயலலிதா உள்ளிட்டோரை தனது கஸ்டடியில் எடுத்துக்கொள்ளும். அதே சமயம், தீர்ப்பு பாதகமாக வந்தாலும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்து நிவாரணம் தேடிக்கொள்வதற்கான வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு உள்ளது"  என்று ஆச்சார்யா தனது பேட்டியில் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024