Monday, May 11, 2015

வித்தியாசமான எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம்!

எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பலவிதம். எம்.ஜி.ஆர். இறந்து இவ்வளவு வருடங்கள் ஆனாலும் இப்போதும் அவர் படம் ரிலீஸ் ஆனால் கூட்டம் கூடுகிறது. இந்தப் பாசக்கார ரசிகர்களில் மதுரை ரசிகர்கள் ‘அடடே’ ரகம். மதுரை யானைக்கல் பாலத்தின் கீழ் மன்றம் வைத்திருக்கும் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் எம்.ஜி.ஆர். நடித்த அத்தனை படங்களின் போஸ்டர்களையும் பாலத்தின் அடியில் வரிசையாக ஒட்டி, அதை காவல் காப்பதையே கடமையாக வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு எப்படி போஸ்டர் கிடைக்கிறது?
யானைக்கல் பாலத்துக்குக் கீழே சைக்கிள் ரிப்பேர் கடை வைத்திருக்கும் எம்.ஜி.ஆர். ரசிகரான 7௦ வயது ஜின்னாவிடம் பேசினேன். ‘‘இந்தப் பாலத்துக்குக் கீழேதான் அந்தக் காலத்துலேர்ந்து எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் இருக்கு. கூலித்தொழிலாளிங்க இங்கே எப்பவும் கூடுவாங்க. அவங்க எல்லோருக்கும் எம்.ஜி.ஆருன்னா உசுரு. நான் ஆரம்பத்துல கம்யூனிஸ்ட். ஆனா, அவங்களைப் பார்த்து, எம்.ஜி.ஆர். ரசிகனா ஆயிட்டேன். அவர் படங்களைப் பார்ப்போம். எங்களை இங்கே உள்ள அ.தி.மு.க கட்சிக்காரங்க யாருக்கும் தெரியாது, ஏன்னா, நாங்க யார்கிட்டேயும் போய் நின்னது கிடையாது. அவர் நடிச்ச படங்கள் மதுரையிலோ, சுத்தியுள்ள ஊர்களிலோ வந்துட்டா, அந்த தியேட்டர்காரங்க கிட்டே கேட்டு  போஸ்டரை வாங்கி இங்கே ஒட்டிடுவோம். எப்பவுமே போஸ்டர் புதுசா இருக்கும்.  போஸ்டர் பழசாகிடுச்சுனா, உடனே எங்கிருந்தாவது அடுத்த போஸ்டரை வாங்கி வந்து ஓட்டிடுவோம். இந்த போஸ்டர் வாங்குறதுக்காகவே பல ஊர்களுக்குப் போய் வருவாங்க’’ என்றார்.
சின்னையா என்ற ரசிகர், ‘‘நான் டிரை சைக்கிள் ஓட்டிப் பிழைக்கிறேன். எம்.ஜி.ஆர்னா சின்ன வயசுலேர்ந்து பிரியம். இன்னைக்கு அவரைத் தெரியாதவனெல்லாம் அரசியல்ல பெரிய ஆளா இருக்கான். ஆனா, நாங்க அவரை மட்டும்தான் மதிப்போம். அதுக்காகத்தான் அவர் நடிச்ச அத்தனை படங்களுடைய போஸ்டர்களைப் புதுசா ஒட்டி அவரை வணங்குறோம். உணமையான எம்.ஜி.ஆர் பக்தனுக்கு அ.தி.மு.க-வில் மரியாதை இல்லை. பல வருஷமா இந்த இடத்தை எம்.ஜி.ஆர். மன்றமா வெச்சு அவருக்கு விழா எடுத்து வர்றோம். இன்னைக்கு மதுரையில் அ.தி.மு.க-வில் பதவியில் இருக்கிற ஓர் ஆளுகூட இங்கே வந்ததில்லை. ஆனா, நாங்க இந்த இடத்தை புனிதமா காத்து வர்றோம். வாத்தியாரோட சில பட போஸ்டர்கள் கிடைக்க மாட்டேங்குது, அதான் கஷ்டமா இருக்கு’’ என்றார்.
வண்டியில் சாப்பாட்டுக்கடை வைத்திருக்கும் மைமூன் ‘‘நாங்க பர்மாவிலேர்ந்து வந்தவங்க. இந்த யானைக்கல்லுல எம்.ஜி.ஆர் ரசிகருங்க அதிகம். இங்கே உள்ளவங்க எம்.ஜி.ஆர். போஸ்டரைக் கொண்டு வந்து ஒட்டிக் கும்பிட்டு போவாங்க. வருஷந்தோறும் விழா எடுப்போம். நாங்க இருக்கிற வரைக்கும் இங்கே எம்.ஜி.ஆர். போஸ்டர் ஓட்டுவோம். அவரைக் கொண்டாடுவோம்’’ என்றார்.
 ஆச்சர்யமான ரசிகர்கள்தான்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024