கிராக்கி இருக்கும் நேரத்தில், 'தத்கல்' சிறப்பு ரயிலை இயக்க, ரயில்வே வாரியம் அனுமதி அளித்து உள்ளது. தற்போது, தேவையான வழித்தடங்களில், சிறப்பு ரயில்கள் மற்றும் பிரீமியம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பிரீமியம் ரயிலில், டிக்கெட் கையிருப்பு, பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். விமான சேவையில் தான் இது போன்ற கட்டண முறை உள்ளது. ஆனால், சிறப்பு ரயில்களில் வழக்கமான கட்டணம் தான். தற்போது, கோடை விடுமுறைக்கு நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சில வழித்தடங்களில், சிறப்பு ரயில்களுக்கு கிராக்கி இருந்தால், அங்கு, 'தத்கல்' சிறப்பு ரயிலாக இயக்க, ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த வகை ரயில்களில், வழக்கமான கட்டணத்துடன், கூடுதலாக, 100 ரூபாய் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட வழித்தடத்தில், இரு மார்க்கங்களிலும் கிராக்கி இருந்தால், இரு மார்க்கங்களிலும், 'தத்கல்' கட்டணம் வசூலிக்கலாம். திரும்பும் போது கிராக்கி இல்லாவிடில், வழக்கமான கட்டணம் வசூலிக்கலாம். ரயில்வே வருவாயை அதிகரிக்க, இந்த நடைமுறையை கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்த சுற்றறிக்கையை, ரயில்வே வாரியம், மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பி உள்ளது.இதுகுறித்து, தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், இந்த நடைமுறை இதுவரை செயல்படுத்தவில்லை. பிரீமியம் சிறப்பு ரயில்களில், முழுமையாக டிக்கெட் விற்கப்படாததால், 'தத்கல்' ரயில் இயக்கம் குறைவாகவே இருக்கும். இருப்பினும், பண்டிகை நாட்களில், 'தத்கல்' சிறப்பு ரயில் இயக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment