Friday, December 9, 2016

234 நாட்களில் ஒரு ஸ்டேடியம்... ஜெயலலிதாவால் மட்டுமே இது சாத்தியம்!


மறைந்த முதல்வர் ஜெயலலிதா விளையாட்டுப் பிரியர். விளையாட்டுத் துறைக்கு அவர் எப்போதும் ஸ்பெஷல் கவனம் செலுத்தி வந்தார். அவர் புண்ணியத்தில்தான் தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையில் உள்கட்டமைப்பு ஓஹோவென இருந்தது. நேரு ஸ்டேடியம் அதற்கு ஒரு சான்று.

முதல் முறையாக ஜெயலலிதா முதல்வராக அரியணை ஏறியதும், 1993ல் கார்ப்பரேஷன் பூங்கா இருந்த இடத்தில் நேரு ஸ்டேடியத்தை கட்டினார். நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். ரூ. 44 கோடி மதிப்பிலான அந்த ஸ்டேடியம் வெறும் 234 நாட்களில் கட்டப்பட்டது. ஜெயலலிதாவின் உந்துதலால் மட்டுமே இது சாத்தியமானது. வேகமாக கட்டினாலும், சர்வதேச தரத்திலும் அமைந்தது கூடுதல் பெருமை. இதற்கான எல்லா பெருமையும் அவரையே சாரும்.

சென்னையில் சர்வதேச தரத்தில் ஒரு ஸ்டேடியம் அமைய வேண்டும் என்ற, தமிழ்நாடு கால்பந்து சங்க முன்னாள் செயலர் சி.ஆர்.விஸ்வநாதன் கனவு நனவானது அப்போதுதான். புதிதாக கட்டப்பட்ட இந்த மைதானத்தில்தான் நேரு கோல்டு கப் கால்பந்து தொடர் நடந்தது.

அதன்பின், ஜெயலலிதாவின் ஆட்சியில், கடந்த 2013ல் சின்தெடிக் டிராக், ஃபுட்பால் டர்ஃப், ஃப்ளட் லைட், வார்ம் அப் கிரவுண்ட் என மொத்தம் ரூ. 33 கோடி செலவில் நேரு மைதானம் புதுப்பிக்கப்பட்டது. அன்று முதல் நேரு மைதானத்தில் இரவு - பகல் என எப்போது வேண்டுமானாலும் போட்டிகளை நடத்தலாம், பயிற்சி செய்யலாம் என்ற சூழல் உருவானது. இப்போது ஐ.எஸ்.எல். போட்டிகள் நேரு மைதானத்தில் ஜெகஜ்ஜோதியாக நடந்து வருகிறது.

பல்நோக்கு காரணங்களுக்காக கட்டப்பட்ட சென்னை நேரு மைதானம் இந்தியாவில் உள்ள சிறந்த மைதானங்களில் ஒன்று. விளையாட்டு தவிர்த்து, கலை நிகழ்ச்சிகளும் அவ்வப்போது நடப்பது உண்டு. தவிர, வாலிபால், டேபிள் டென்னிஸ், பேஸ்கட் பால் ஆடுவதற்கேற்ப, 8 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கவல்ல உள் விளையாட்டு அரங்கை அமைத்த பெருமையும் ஜெயலலிதாவையே சாரும். பல்வேறு மாவட்டங்களில் விளையாட்டு அரங்கங்கள், ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அமைத்தது என, அவர் ஏற்படுத்தித் தந்த உள் கட்டமைப்பு வசதிகள் ஏராளம்.

சென்னையில் 1995ல் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதற்கு முழு முதல் காரணம் ஜெயலலிதா. கிட்டத்தட்ட சென்னையில் நடந்த பெரிய சர்வதேச அளவிலான முதல் போட்டி இதுவே. அப்போதுதான் ஹாக்கி ஃபைனலில் இந்தியா - பாகிஸ்தான் மோதின. இந்தியாவின் தன்ராஜ் பிள்ளை, பாகிஸ்தானின் ஷபாஸ் அகமது இருவரும் உச்சத்தில் இருந்த சமயம் அது. எனவே அந்த போட்டியும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.



சென்னையில் 2013ல் வேர்ல்ட் செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. உள்ளூரில் விளையாடியது ஆனந்துக்கு நெருக்கடியை கொடுத்தது என்றாலும், அந்த தொடரை இங்கு கொண்டு வந்ததும், அதற்கு 30 கோடி செலவு செய்ததும், பாராட்ட வேண்டிய விஷயம். சமீபத்தில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப்பில், சாம்பியன் ஆன நார்வேயின் கார்ல்சனுக்கு, அந்தளவு பரிசுத் தொகை கிடைக்கவில்லை என்பது கவனிக்க வேண்டியது.

கடந்த 2012ல் வேர்ல்ட் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.2 கோடி கொடுத்து கெளரவித்தார் ஜெயலலிதா. இதற்கு விமர்சனம் எழுந்தபோது, ‛ஒலிம்பிக்கில் வெல்லும் தங்கத்தை விட இந்த சாதனை பெரிது. அதனால் ஒலிம்பிக் தங்கத்துக்கு நிகரான பரிசு வழங்கப்படுகிறது’ என காரணம் சொன்னார். அதோடு, செஸ்ஸை பள்ளி அளவில் மேம்படுத்த ஆனந்திடம் அறிவுறுத்தியிருந்தார்.

ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கான பரிசுத் தொகையை அதிகரித்தது ஜெயலலிதாவின் பெருமை பேசும். ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ. 2 கோடி, காமன்வெல்த், ஏசியன் கேம்ஸில் தங்கம் வென்றால் ரூ.50 லட்சம் என, அள்ளி வழங்கினார். அதை விட, நேஷனல் கேம்ஸில் முதலிடம் பிடித்தால் ரூ.5 லட்சம் என அறிவித்தது பாராட்ட வேண்டிய விஷயம்.

இன்ஜினனீரிங் கல்லூரிகளில் விளையாட்டுத் துறைக்கான இட ஒதுக்கீட்டை 100ல் இருந்து 500 ஆக உயர்த்தியதும் அவரது சாதனையே. ஒரு கட்டத்தில் சென்னையில் இருந்து வெளியேறுவதாக இருந்த ஏ.டி.பி. டென்னிஸ் தொடரை, இங்கிருந்து வெளியேற விடாமல் தடுத்து, ஸ்பான்சர் அளித்ததற்கும் ஜெயலலிதாவே காரணம் என்கின்றனர் டென்னிஸ் பிரியர்கள்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்பவர்களைக் கண்டறித்து, ஆண்டுதோறும் ஐந்து வீரர்களுக்கு ரூ. 25 லட்சம் செலவில், போதிய வசதி வாய்ப்புகளை செய்து தருவதற்காக, உருவாக்கப்பட்ட எலைட் பேனல்’ திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால், அதில் பயன்பெற்ற யாரும் ஒலிம்பிக் செல்லவில்லை என்பது வேறு விஷயம்.

சி.எம்.டிராபி. இதுதான் விளையாட்டுத் துறைக்கு ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களில் அல்டிமேட். ஏதோ ஒரு கணத்தில் அவர் கற்பனையில் உதித்த ‘முதல் அமைச்சர் கோப்பை’ உண்மையிலேயே நல்ல விஷயம். முதலிடம் பிடித்தால் ஒரு லட்சம், குழு விளையாட்டு எனில் அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம், மாவட்ட அளவில் வென்றவர்களுக்கும் ஆயிரக் கணக்கில் பரிசு என, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு பரிசு கொடுத்ததில்லை. பாராட்டுக்குரிய விஷயம். ஆனால், இதை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முறையாக நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.



சில குறைகளும் உண்டு. 2014ல் செஸ் ஒலிம்பியாட்டில் 2014 வெண்கலம் வென்ற வீரர்களுக்கு ஒரு பைசா கூட தரவில்லை. வாழ்த்து கூட சொல்லவில்லை. ரியோ ஒலிம்பிக்கில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற வீரர்களுக்கும் வாழ்த்து இல்லை. ஏசியன் கேம்ஸ், காமன்வெல்த் கேம்ஸில் ஜெயித்தவர்களுக்கு உடனே வழங்குவது போல, நேஷனல் கேம்ஸில் ஜெயித்தவர்களுக்கு உடனடியாக பரிசுத் தொகை வழங்குவதில்லை. 2014ல் ஜெயித்தவர்களுக்கு இன்னமும் பணம் கிடைத்தபாடில்லை.

ஜெயலலிதாவை எளிதில் அணுக முடியாத காரணத்தினால், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள அண்டர் -17 வேர்ல்ட் ஃபுட்பால் கப் சென்னையில் இருந்து நழுவி விட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மெம்பர் செகரட்டரியை மாற்றிக் கொண்டே இருப்பதும், விளையாட்டுத் துறை அமைச்சருக்கு அதிகாரமே இல்லாமல் இருப்பதும் அவர் மீதான குறைகள்.

இலங்கைக்கு விளையாட சென்ற இரண்டு வாலிபால் வீரர்களை திரும்ப வரவழைத்தது, ஒரு ஸ்டேடியம் ஆஃபீசரை சஸ்பெண்ட் செய்தது, நேரு மைதானத்தில் உள்ள வாலிபால் அலுவலகத்துக்கு சீ்ல் வைத்தது எல்லாம், அவருக்கு நெகட்டிவ் மார்க் பெற்றுத் தந்தன.

ஆனாலும், நேரு மைதானம் அவர் பெருமையை நின்று பேசும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024