ஜெயா இல்லாத சசி இனி என்ன செய்வார்?
By கார்த்திகா வாசுதேவன் | Published on : 06th December 2016 04:17 PM
80 களில் ஜெயலலிதா அ.தி.மு.க வுக்கு தமிழகம் முழுதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் தான் முதன்முறையாக சசிகலாவின் அறிமுகம் கிடைக்கிறது. மைலாப்பூரில் ஒரு சாதாரண வீடியோ கவரேஜ்& லெண்டிங் லைப்ரரி வைத்திருந்த சசிகலா நடராஜனுக்கு அந்த தேர்தல் பயணம் முழுக்க ஜெயலலிதாவின் உடனிருந்து அவரது பிரச்சாரப் பேச்சுகளை கவரேஜ் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. இப்படித்தான் ஆரம்பமானது இவர்களது நட்பு. பின்னர் அது விருட்சமாக வளர்ந்து சின்னம்மா இல்லாமல் ‘அம்மா’ இல்லை எனும் நிலையை வெகு சீக்கிரத்திலேயே அடைந்தது.
ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கையில் நடிகர் சிவக்குமார் தெரிவித்ததைப் போல ‘பெற்ற தாய் இல்லை, தகப்பனார் இல்லை, உடன் பிறந்த அண்ணன் இல்லை, தனக்கான ஆதரவென்று எம்.ஜி.ஆர் அளித்த அரசியல் அறிமுகத்தைத் தவிர வேறு எந்த விதமான உதவிகளும், உறுதுணைகளும் இன்றி தன்னை மட்டுமே நம்பி தனியொரு பெண்ணாக அரசியலில் ஜெயலலிதா சாதித்தது மிக அதிகம்.’
அப்படி சாதித்தவரின் நம்பிக்கைக்குரியவராவதும் அப்படி ஒன்றும் எளிதான காரியமில்லை. சசிகலா நட்பான அந்த தேர்தல் பிரச்சார விடியோ கவரேஜ்களில் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக ஜெயலலிதாவை உருவகப்படுத்தக் கூடிய வகையிலான அத்தனை சாத்தியங்களையும் ‘சசிகலா அண்ட் கோ’ செய்திருந்தது. ஜெயலலிதாவே கூறியதைப் போல ‘தனது தாயின் இடத்தை எடுத்துக் கொண்டவராகவே’ சசிகலா ஜெயலலிதாவால் குறிப்பிடப்பட்டார். ஜெயலலிதா தான் இழந்து விட்டதாக நினைத்த தாயின் கவனிப்பையும், அரவணைப்பையும் சசிகலா மூலமாகப் பெற்றதாக நம்பினார். சசிகலா ஜெயலலிதாவின் வாழ்வில் நுழைய அவரது அம்மா சந்தியாவின் மறைவு ஓரு முக்கிய காரணமானதை விட ஜெயலலிதாவுக்கு அதற்கு முன் அத்யந்த நட்புகள் என எதுவும் இல்லாமல் போன வெற்றிடமும் பெருங்காரணமாக இருந்தது எனலாம்.
திரையுலகுக்கு வந்த சில வருடங்களில் நடிகை ஷீலா ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக சில காலம் அடையாளம் காணப்பட்டார். பின்பு இந்த நட்பிற்கு ஆயுள் குறைந்து ஜெயலலிதாவின் வாழ்விலிருந்து அவர் முற்றாக மறைந்து போனார். எழுத்தாளர் சிவசங்கரி, நடன இயக்குனர் ரகுராம் எனச் சிலரை தன்னது நட்பு வட்டத்தில் எப்போதும் வைத்திருந்தார் ஜெயலலிதா. ஆனாலும் எந்த ஒரு நட்புக்கும் சசிகலாவுக்கு கிடைத்த இந்த மாபெரும் அங்கீகாரமோ, அதிகாரமோ கிடைக்கவில்லை. எல்லோருமே ஒரு கால கட்டத்தில் ஜெயலலிதாவின் வாழ்விலிருந்து தூரமாகிக் கொண்டே சென்றார்கள். இவர்களில் அறிமுகமான நாட்கள் தொட்டு ஜெயலலிதாவின் அனைத்து வெற்றிகளிலும், தோல்விகளிலும் அவரை விட்டு நீங்காத துணையாக இருந்தவர் சசிகலா மட்டுமே!
ஒருமுறை எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் குறிப்பிட்டதாக ஒரு செய்தி வாசிக்க நேர்ந்தது; ராஜம் கிருஷ்ணன் தமிழில் அன்றும் இன்றும் என்றும் மறக்க இயலாத இலக்கிய ஆளுமை, அவர் சந்தியாவின் நெருங்கிய தோழியாகவும் இருந்தார். ஒரு முறை ராஜம் கிருஷ்ணனை சந்திக்கப் போன சந்தியா சில மணி நேரங்களில் கடிகாரத்தைப் பார்த்து பரபரப்படைந்து ‘அடடா! இத்தனை நேரமாகி விட்டதே... அம்மு ஷூட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு வந்துடுவாளே, அவ வரும் போது நான் வீட்ல இல்லைன்னா கோவிச்சுப்பாளே! அவ வீட்டுக்கு வரும் போது நான் வீட்ல இருக்கணும்’ என்று உடனடியாக விடை பெற்றுச் சென்றதாக குறிப்பிட்டிருந்தார். இது ஒரு அம்மாவுக்கு மகளின் மீதிருந்த பாசம் என்பதைத் தாண்டி ஜெயலலிதா தன் அம்மாவை எத்தனை தூரம் சார்ந்திருந்தார் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
அப்பேர்ப்பட்ட அம்மாவின் இழப்பின் பின் அவரது இடத்தைத் தான் ஜெயலலிதா சசிகலாவுக்கு தந்திருந்தார். இப்படித்தான் வேதா இல்லமாக இருந்து போயஸ் கார்டனாக மாறிய ஜெயலலிதாவின் மாளிகையில் சசிகலா கால் வைத்தார். முதலில் தம்பதி சமேதராக உள்ளே வந்தார்கள். பிறகு தன்ன்னை டாமினேட் செய்யப் பார்க்கிறார் என்று குற்றம் சாட்டி நடராஜன் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டார். ஆனால் சசிகலா தனது உடன்பிறவா அக்காவான ஜெயலலிதாவை விட்டு அகலவில்லை. கணவன் வெளியேற்றப் பட்டபோதும் ஜெயலலிதாவுடனேயே சசிகலாவை நீடிக்க செய்தது எதுவோ அதுவே ஜெயலலிதாவையும் சசிகலாவை விட்டுப் பிரியாதிருக்கச் செய்திருந்தது.
96 ஆம் வருட இறுதியில் ஜெயலலிதா பல ஊழல் வழக்குகளில் சிக்கி அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவரது நலம் விரும்பிகள் பலரும். ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலமே சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் அதிகார துஷ் பிரயோகத்தால் அஸ்தமனமாகி விடும், எனவே உடனே அவரை போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றுங்கள் என அறிவுறுத்தினார்கள். அப்போது தனது பத்திரிகைப் பேட்டி ஒன்றின் மூலம் ஜெயலலிதா அளித்த பதில்;
‘எனக்கு அப்பா இல்லை, அம்மா இல்லை, அண்ணன் இல்லை, உறவினர்கள் இருக்கலாம். ஆனால் அவர்களில் யாரும்ம் அவரவர் சொந்தக் குடும்பங்களை விட்டு விட்டு என்னுடன் வந்து தங்கி என்னையும் எனது வாழ்வையும் கவனிக்கத் தயாராக இல்லை. சசிகலா ஒருவர் மட்டுமே தன் குடும்பம் , தனது கணவர் என எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து என்னுடனேயே தங்கி எனக்கொரு உடன்பிறவா சகோதரியாக என் மீது அக்கறை காட்டினார். உண்மையாகச் சொல்லப் போனால் என்னுடன் இருப்பதனால் மட்டுமே தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட ஒரு பெண் அவர். அவர் எனது அரசியல் விவகாரங்களில் தலையிடுவதே இல்லை.’ என்பதே. சசிகலா அரசியல் விவகாரங்களில் தலையிட்டாரா? இல்லையா? என்பதில் அவரவர்க்கு ஆயிரமாயிரம் விமரிசனங்கள் இருக்கலாம். ஆனால் அவர் ஜெயலலிதாவின் மறுக்க முடியாத உறவுப் பட்டியலில் இருந்தார் என்பதற்கு யாருக்கும் எந்த விதமான விமரிசனங்களும் இருக்க வாய்ப்பே இல்லை.
இறுதியாக ஒரு வார்த்தை...
ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சி நேர்காணலில் ஜெயலலிதா தெரிவித்ததைப் போல ’ஒரு வேளை தனக்குத் திருமணம் ஆகியிருந்தால் அப்போதைய 70 களின் வழக்கபபடி தானும் ஒரு அரசாங்க அதிகாரியாக உயர் பொறுப்பில் இருந்து கொண்டு நான்கு குழந்தைகளுக்கு அம்மாவாக தன் கடமையைச் செய்து கொண்டிருந்திருக்கக் கூடும். என்று சொன்னதற்கிணங்க, அப்படி ஏதாவது நடந்திருந்தால் நமக்கு இப்போதைய இந்த இரும்புப் பெண்மணி கிடைத்திருக்க மாட்டார்.
இதுவரை ஜெயலலிதாவுடனான சசிகலாவை, ஜெயலலிதாவின் நிழலாக இருந்த சசிகலாவைத் தான் நாம் பார்த்திருக்கிறோம்.. ஆனால் இனி ஜெயா இல்லாத சசி என்ன செய்வார்?
No comments:
Post a Comment