முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆகி 75 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், மிக அதிகமான பதட்டத்தை உண்டாக்கியது டிசம்பர் 4-ம் தேதிதான். 75 நாட்களில், முதல் 30 நாட்கள் மட்டும்தான் அப்போலோ பரபரப்பாக இருந்தது. அதன்பிறகு, காவிரி, ரூபாய் நோட்டுப் பிரச்னைகளால் மக்களின் மனதில் இருந்து அப்போலோ மெள்ள மறையத் தொடங்கியது. இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அப்போலோ மீண்டும் பரபரப்புச் செய்தியானது. ‘நீர்ச்சத்துக்குறைவு’ என ஜெயலலிதா அட்மிட் ஆனபோது என்ன பரபரப்பு நிலவியதோ, அதைக்காட்டிலும் பல மடங்கு பரபரப்பும் பதற்றமும் அப்போலோவைச் சூழ்ந்தன.
மாலை 5.30 மணியில் இருந்து அப்போலோ ஏரியாவில் சந்தேகத்துக்குரிய சில அறிகுறிகள் தென்படத் தொடங்கின. தமிழகத்தின் அரசுத் துறை செயலாளர்கள் அனைவரும் அப்போலோவை நோக்கி வர ஆரம்பித்தனர். சென்னையிலும் வெளியூரிலும் இருந்த அமைச்சர்கள் பதறியடித்துக்கொண்டு அப்போலோ வந்தனர். போலீஸ் உயர் அதிகாரிகள் அனைவரும் அப்போலோவை முற்றுகையிட்டனர். ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், ஒட்டுமொத்த அரசாங்கமும் அப்போலோவில் மையம் கொண்டது. இவ்வளவு பரபரப்புகள் அரங்கேறியபோதும், அங்கு என்னதான் நடக்கிறது என்பதே தெரியாமல், அப்பாவியாக இருந்தனர் அ.தி.மு.க தொண்டர்கள். அவர்களில் சிலர், கடந்த 75 நாட்களாக அங்கு காத்துக் கிடப்பவர்கள். அரசுத் தரப்பில் இருந்து எந்தத் தகவலும் இல்லை. எனவே, வழக்கம்போல் அதிகாரிகள் வருகின்றனர், அமைச்சர்கள் வருகின்றனர் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.
மாலை 6.30 மணி அளவில், மெதுவாக ஒரு தகவல் வெளியானது. `முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்’ என்பதுதான் அந்தத் தகவல். ஆனால், மாரடைப்பில் இருந்து முதலமைச்சர் மீண்டுவிட்டாரா? அல்லது விபரீதமாக ஏதாவது நடந்துவிட்டதா? என்பது பற்றி உறுதியான தகவல் எதுவும் இல்லை. அந்த நேரத்தில், அரசு இயந்திரம் அசுரத்தனமாக இயங்கிக் கொண்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை மிக மோசமாக இருக்கிறது என்ற தகவல் போனது. அதனால், தமிழகம் பரபரப்பு அடை வதற்கு முன்பே டெல்லி பரபரத்தது. டெல்லி பத்திரிகையாளர்கள் அனைவரும் சென்னையில் உள்ள பத்திரிகையாளர்களிடம் விசாரிக்கத் தொடங்கினார்கள். உள்துறை அமைச்சகம் அவசர அவசரமாக சில உத்தரவு களைப் பிறப்பித்தது. அவர்கள் மூலம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும், ராகுல் காந்திக்கும் தகவல் போனது. அதையடுத்து, “முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும்” என்று டெல்லியில் இருந்து தலைவர்களின் அறிக்கைகள் 9 மணியில் இருந்து அடுத்தடுத்து வெளியாகின. அதன் பிறகுதான், அப்போலோ மருத்துவ மனையின் அறிக்கை வெளியானது.
அப்போலோ மருத்துவமனை சார்பில் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வெளியான அந்த மருத்துவ அறிக்கை ‘இறுக்கமாக’ இருந்தது. முன்பு வெளியான அறிக்கைகளில், “முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார்; உடல்நிலை தேறிவருகிறார்” என்பது போன்ற வாசகங்கள் இருக்கும். ஆனால், 4-ம் தேதி வெளியான அறிக்கையில், அப்படி எந்த வாசகமும் இல்லை. மாறாக, ‘முதலமைச்சருக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு, அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்” என்று மட்டும் சொல்லப்பட்டு இருந்தது. இது அ.தி.மு.க தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அந்த நேரத்தில், அங்கு வந்த டி.டி.வி.தினகரன் அப்போலோவுக்குள் சென்றார். இவர், இதற்குமுன் ஒரே ஒருமுறை அப்போலோவுக்கு வந்து, உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் திரும்பிச் சென்றவர். இந்த முறை அவரைத் தடுக்க எந்த அதிகாரியும் முன்வரவில்லை.
ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் என்ற செய்தி ஊடகங்களில் வெளியான உடனே, அப்போலோ மருத்துவமனை முன்பு கொந்தளிப்பு மிகுந்த சூழல் உருவானது. அ.தி.மு.க தொண்டர்கள், மருத்துவமனையை நோக்கி சாரை சாரையாகப் படையெடுத்து வரத் தொடங்கினார்கள். பாதுகாப்புக்காக அங்கு நின்றிருந்த போலீஸ்காரர்களை ஏக வசனத்தில் திட்டிவிட்டு, இரும்புத் தடுப்புகளைத் தள்ளிவிட்டு அப்போலோ முன்பு குவிந்தனர். அங்கு, கவரேஜ் செய்து கொண்டிருந்த தொலைக்காட்சிகளின் கேமரா மேன்களையும் அவர்கள் திட்டித் தீர்த்தனர். இந்த பரபரப்பான சூழலில், ஓரமாக நடந்துவந்த டாக்டர் வெங்கடேஷ், சத்தமில்லாமல் அப்போலோவுக்குள் போனார். முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லாம் அப்போலோவுக்குள் இருந்தனர். அப்போலோவுக்கு வெளியே அ.தி.மு.க வி.ஐ.பி-க்கள் யாரும் இல்லை. அதனால், தொண்டர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
‘ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட்’ என்ற செய்தியை அறிந்ததும், ஒட்டுமொத்த தமிழக காவல்துறையும் அலர்ட் ஆனது. உளவுத் துறை உயர் அதிகாரிகளோடு, காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் இந்தக் கூட்டம் நடந்தது. பின்னர், மத்திய உள்துறையின் உதவியும் கோரப்பட்டது. மத்திய அரசு, தன் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 30 கம்பெனி போலீஸை உடனடியாக அனுப்பி வைத்தது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள போலீஸ் பிரிவுகள் அலர்ட் செய்யப்பட்டன. சென்னையில் விடுமுறையில் இருந்த காவலர்கள் அனைவரும் மறுநாள் (5-ம் தேதி) காலையில் வந்துவிட வேண்டும் என உத்தரவுகள் பறந்தன. இந்த உத்தரவுகள் எல்லாம் கன்ட்ரோல் ரூம் மூலமாகவே சென்றன.
மகாராஷ்டிராவில் இருந்த தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்ராவ், அவசர அவசரமாக சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து அப்போலோவுக்கு கவர்னர் வந்தபோது, அவருடைய காரை அ.தி.மு.க தொண்டர்கள் சூழ்ந்துகொண்டனர். அதனால், அப்போலோ முன்பு கவர்னரின் கார் சிறிதுநேரம் நின்றது. அதன்பிறகு, கூட்டத்தைக் கட்டுப்படுத்திய போலீஸ்காரர்கள், கவர்னர் காருக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தனர். அப்போலோவுக்குள் கவர்னர் நுழைந்தபோது, நள்ளிரவு 12 மணி. உள்ளே சென்ற கவர்னர், 12.15 மணிக்கு வெளியே வந்தார். கவர்னரின் கார் வெளியே வந்தபோது, அதற்குப் பின்னால், அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டியின் காரும் வந்தது. இருவருடைய கார்களையும் சூழ்ந்துகொண்ட ஊடகவியலாளர்கள், அவர்களிடம் கேள்வி கேட்க முயன்றனர். ஆனால் அவர்கள், கார்களை விட்டு வெளியே தலைகாட்டவில்லை.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அப்போலோவில் இருந்து துரத்தப்பட்ட அதே நேரத்தில், மன்னார்குடி உறவுகள் அனைத்தும் அப்போலோவில் ஒன்றுகூடின. திவாகரன், டி.டி.வி.தினகரன், பாஸ்கரன், இளவரசி, டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவக்குமார் உள்ளிட்ட மன்னார்குடி சொந்தங்கள் எல்லாம் அப்போ லோவில் இருந்தனர். ஆனால், சசிகலாவின் கணவர் நடராஜன் அப்போலோ பக்கம் வரவில்லை. அவர் பெசன்ட் நகர் வீட்டிலும் இல்லை. மாறாக, ரகசியமான இடத்தில் இருந்து சில முக்கியமான வேலைகளுக்கு காய் நகர்த்திக்கொண்டிருந்தார்.
அப்போலோ மருத்துவமனை ஏரியாவில் நிலவிய கொந்தளிப்பான சூழல், நள்ளிரவு 2 மணிக்கு மேல் சீரடைந்தது. மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டனுக்கு கிளம்பிப் போனார், சசிகலா. அவரையடுத்து டி.டி.வி.தினகரனும் வெளியே சென்றார். அதன் பிறகு, என்ன மாயமோ தெரியவில்லை, அப்போலோவில் ஏரியாவில் அமைதி திரும்பத் தொடங்கியது. அத்துடன் மழையும் சேர்ந்துகொண்டதால், அங்கிருந்து தொண்டர்கள் கலையத் தொடங்கினார்கள்.
- ஜோ.ஸ்டாலின், பிரம்மா
படங்கள்: சு.குமரேசன், பா.காளிமுத்து, ஆ.முத்துக்குமார், மீ.நிவேதன், தே.அசோக்குமார்
``என்னிடம் நேரில் சொல்லட்டும்!’’
அப்போலோவைச் சுற்றி சோகமும் கொந்தளிப்பும் இருந்த நேரத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தன் அத்தையைப் பார்க்க வந்தார். ஆனால், யார் உத்தரவிட்டார்களோ தெரியவில்லை, தீபாவை அப்போலோவின் கேட் அருகில்கூட நெருங்கவிடவில்லை. “தயவுசெய்து போய்விடுங்கள். இங்கே பிரச்னை செய்யாதீர்கள். உங்களை உள்ளேவிடக்கூடாது என்று எங்களுக்கு உத்தரவு” என்று தீபாவை போலீஸ்காரர்கள் மிரட்டினர். அதனால், பத்திரிகையாளர்களிடம் தீபா பேச முயன்றார். ஆனால், அதற்கும் போலீஸ்காரர்கள் அனுமதிக்கவில்லை. ஆனாலும், பத்திரிகையாளர்கள் விடாமல் தீபாவை துரத்திச் சென்று பேசினர். அப்போது, “என்னை உள்ளே விடக்கூடாது என்று சொல்ல அவர்கள் யார்? அவர்களை வெளியே வரச்சொல்லுங்கள். அவர்கள் என்னிடம் நேரில் சொல்லட்டும்” என்று கொந்தளித்தார். அவரிடம் பத்திரிகையாளர்கள், “மேடம், உங்களை உள்ளே விடக்கூடாது என்று சொன்னவர்கள் யார் என்று உங்களால் கணிக்க முடிகிறதா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, “என் அத்தை கூடவே இருப்பவர்கள்தான் சொல்லி இருப்பார்கள்” என்று தீபா சொன்னார். போலீஸார் கடும் கெடுபிடி காட்டவே, தீபா தன் கணவருடன் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகு மீடியாவினர் படம் எடுக்கவிடாமல் போலீஸ் தடுத்தது.
No comments:
Post a Comment