Friday, December 9, 2016

‘அந்த கடைசிப் பார்வையில் எந்த அசைவுமில்லை..!’ #ஜெயலலிதா பாதுகாவலர் பெருமாள்சாமி

பெருமாள்சாமி
vikatan.com

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இசெட் பிளஸ் பாதுகாப்பில் இருந்தவர். பத்துக்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் அதைத் தவிர மாநில போலீசார் என 36 பேர் முதல்வர் ஜெயலலிதாவை சுற்றியே எப்போதும் வலம் வருவார்கள். இவர்களை மீறி யாரும் அவரை அவ்வளவு எளிதில் நெருங்கி விட முடியாது. ஒவ்வொரு முதல்வரும், தங்களுக்கு பிடித்த பாதுகாவலர்களேயே தேர்வு செய்வார்கள். பொதுக் கூட்டம் நடந்தால் துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்கள் கூட சற்றுத் தள்ளிதான் நிற்பார்கள். மேடையை சுற்றிலும்தான் அவர்களது கண்காணிப்பு இருக்கும். ஆனால் மேடையில் முதல்வரின் இருபுறமும் சாதாரண சபாரி உடையில் கையில் ஆயுதம் ஏதுமில்லாத பாதுகாவலர்கள் இருவர் நிற்பார்கள். இவர்கள்தான் ஆந்தை போல அதீத விழிப்புடன் செயல்படுவார்கள்.

சமயத்திற்கு ஏற்ப சமயோசிதமாக அதீத புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டிது இவர்களது பொறுப்பு. முக்கியமாக தேர்தல் பிரசாரக் காலக்கட்டங்களில் தலைவர்களை பாதுகாப்பதில் இவர்களது பங்கு அளப்பறியது. நீண்ட நாள் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலராக இருந்தவர் பெருமாள்சாமி.

சில நேரங்களில் முதல்வர் கான்வாயை நிறுத்தி விட்டு, ரோட்டில் நிற்பவர்களிடம் மனு வாங்க ஆரம்பித்து விடுவார். அடுத்த விநாடி பெருமாள்சாமி மின்னல்வேகத்தில் முதல்வரின் இருக்கை அருகே ஆஜராகி விடுவார். அந்த சமயத்தில் இவரது கண்கள் ஒவ்வொருவரையும் சந்தேகக் கண்ணுடன்தான் நோக்கும். முதல்வர் முகத்தை பார்த்தே எதிரே நிற்பவர்களை அப்புறப்படுத்தி விடுவார். எந்த சமயத்திலும் எந்த இடத்திலும் பெருமாள்சாமியின் ஒரு கண் முதல்வரின் மீதும் மற்றொரு கண் எதிரில் நிற்பவர்கள் மீது இருக்கும். முதல்வரின் குறிப்பறிந்து பெருமாள்சாமி செயல்பட்டால், இவரது குறிப்பறிந்து இவருக்கு கீழ் பணியாற்றும் பாதுகாவலர்களும் செயல்படுவார்கள்.



பெருமாள்சாமி முதல்வரை பாதுகாத்த சம்பவங்களுக்கு உதராணமாக ஒன்றை சொல்லலாம். ஜெயலலிதாவுக்கு யானைகள் மீதான பாசம் அதிகம். யானைகளுக்கு மிகவும் பிடித்த சீதோஷ்ண நிலை நிலவும் முதுமலையில் கோயில் யானைகளுக்கும் முகாம் நடத்தி வெக்கையில் கிடந்த அவற்றை ஓரளவுக்கு குதூகலிக்க வைத்தவர் ஜெயலலிதா. முதுமலையில் வளர்ப்பு யானைகள் முகாமும் இருக்கிறது. அங்கு, காவிரி என்ற குட்டி யானை இருந்தது. முதுமலைக்கு ஒரு முறை சென்ற ஜெயலலிதா காவிரி யானைக்கு உணவளித்து மகிழ்ந்தார். முதல்வரை சுற்றி கூடியக் கூட்டதைப் பார்த்து மிரண்ட குட்டி யானை, தும்பிக்கையால் முதல்வரை தள்ளி விட முயன்றது. ஜெயலலிதா திணறி விட, அருகில் நின்ற பெருமாள்சாமிதான் அரணவணைத்து முதல்வரை குட்டியானையிடம் இருந்து பாதுகாத்தார்.

அத்தனை விசுவாசம் மிகுந்த பெருமாள்சாமி மற்றும் அவரது குழுவினருக்கு முதல்வரின் மறைவு சொல்ல முடியாத துயரத்தை தந்திருக்க வேண்டும். இந்தியாவின் மிகப் பெரிய மாநிலக்கட்சியின் தலைவியின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலராக விளங்கிய அவரால், அவரின் மறைவை ஜீரணிக்க முடியவில்லை. ஆனாலும் ராணுவ பயிற்சி பெற்ற இதயம். எந்த வேதனையையும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. முதல்வர் உயிருடன் இருந்தால் எப்படி யாரும் அவரை நெருங்க விடாமல் பாதுகாப்பாரோ அதைப் போலவே ஜெயலலிதா உடலுக்கும் பாதுகாவலை பெருமாள்சாமியின் டீம் வழங்கியது. அப்பலோவில் இருந்து போயஸ் கார்டன். பின்னர் அங்கிருந்து ராஜாஜி ஹால். தொடர்ந்து எம்ஜிஆர் சமாதி வரை பெருமாள்சாமிக் குழுவினர் பாதுகாப்பு வழங்கினார்.

ஜெயலலிதாவின் உடல் மண்ணுக்குள் புதைக்கப்படுவதற்கு முன்பாக, சந்தனபேழையில் வைத்து மூடப்படும் கடைசிக் கட்டத்தில் எங்கிருந்தோ ஓடி வந்தார் பெருமாள்சாமி.அந்தப் பெட்டியின் மீது கையை வைத்து கனத்த இதயத்துடன் முதல்வரின் முகத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். வழக்கமாக முதல்வரின் கண் அசைவைக் கண்டு பெருமாள் சாமி செயல்படுவார். அந்தக் கடைசிப் பார்வையில், முதல்வரின் கண்களில் எந்த அசைவுமில்லை!

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024