வண்டலூர் உயிரியல் பூங்கா காலவரையின்றி மூடல்
"வர்தா' புயலின் கோரத் தாண்டவத்தில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பலத்த சேதத்தை சந்தித்துள்ளதையடுத்து, பூங்கா காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோர புயலின் காரணமாக பூங்காவில் இருந்த 12 ஆயிரம் மரங்கள் வேராடு பெயர்ந்து விழுந்துள்ளதால், பசுமை போர்த்தி காணப்பட்ட இப்பூங்கா இன்று ஒரு புதர் போல் காட்சியளிக்கிறது.
வர்தா புயலால், வண்டலூர் உயிரியல் பூங்காவில் ரூ.20 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வண்டலூர் பூங்கா, தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்ற சிறப்பு பெற்றது. 1,265 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில்,1,500க்கும் அதிகமான விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதில் பாலூட்டி வகைகளில் 38 இனங்களும், பறவைகளில் 20 இனங்களும், ஊர்வனங்களில் 14 இனங்களும் வளர்க்கப்படுகின்றன. மேலும் இனப்பெருக்கங்களும் அதிகளவில் நடைபெறுகின்றன. தினமும் 5,000 -க்கும் மேற்பட்டோரும், விடுமுறை நாட்களில் 10,000க்கும் மேற்பட்டோரும் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இந்த பூங்கா, வர்தா புயலின் தாக்கத்தால் தற்போது முற்றிலுமாக முடங்கியுள்ளது. மேலும் பூங்கா காலவரையின்றி மூடப்படவுதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விலங்குகளின் நிலை என்ன?: வர்தா புயல் காரணமாக பூங்காவில் மரங்கள் விழுந்ததால் விலங்குகளின் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் பூங்காவில் உள்ள விலங்குகள் பாதுகாப்பாக இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், எந்தவொரு விலங்கும் பூங்காவை விட்டு தப்பிச் செல்லவில்லை என்றும் அவர்கள் உறுதியளித்தனர். வர்தா புயல் தொடங்குவதற்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் விலங்குகள் அனைத்தும் கூண்டில் அடைக்கப்பட்டன. இதில் ஊர்வனங்களும் அடங்கும். ஆனால் பறவைகள் சில பறந்துவிட்டதாக பூங்கா ஊழியர்கள் தெரிவிப்பதை அதிகாரிகள் மறுக்கின்றனர்.
விலங்குகளுக்கான உணவுகள்: பூங்காவில் உள்ள ஒவ்வொரு விலங்குக்கும் ஒவ்வொரு விதமான உணவு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் புயல் சேதத்திற்கு பின் விலங்குகளுக்கு உணவு வழங்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
புலி, சிறுத்தை மற்றும் சிங்கம் ஆகியவை 3 நாள்கள் ஆனாலும் உணவு இல்லாமல் இருக்கும். ஆனால், சிறு விலங்குகள் பெரும் அவஸ்தைக்குள்ளானதாக பராமரிப்பாளர்கள் தெரிவித்தனர். இப்போது ஓரளவு நிலைமை சீரமைக்கப்பட்டு விலங்குகளுக்கு உணவுகள் வழங்கப்படுவதாக பூங்கா சார்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
கோடையை எதிர்கொள்வதில் சிரமம்: பூங்காவில் சிறியதும், பெரியதுமாக கிட்டத்தட்ட 15 ஆயிரம் மரங்கள் சேதமடைந்துள்ளதால் இந்தாண்டு கோடை, விலங்குகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என நிர்வாகத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.
கோடை காலங்களில் விலங்குகளை குளுமையாக வைத்திருக்க வழக்கமாகவே பல்வேறு நடவடிக்கைகளை பூங்க நிர்வாகம் மேற்கொள்ளும். இதற்கு பசுமை போர்த்திய மரங்கள் பெரும் உதவி புரியும். ஆனால், வர்தாவின் கோரத் தாண்டவத்தால் இன்று புதர்போல் காட்சியளிக்கும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை கோடையில் பராமரிப்பது பெரும் சவாலாக இருக்குமென விலங்குகளை பராமரிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுவர் பூங்காவில் வீழ்ந்த 100 மரங்கள்
வர்தா புயல் தாக்கியதில், சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் நூறு மரங்கள் வேராடு சாய்ந்துள்ளன. இதன் காரணமாக பூங்கா காலவரையின்றி மூடப்பட்டு, சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வர்தா புயலால் இங்குள்ள விலங்குகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என வனப் பாதுகாவலர் கீதாஞ்சலி தெரிவித்தார்.
முதலைப் பண்ணையும் சேதம் !
கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் அருகே அமைந்துள்ள சென்னை முதலைப் பண்ணையில், 3 இந்திய முதலை வகைகள் உள்பட 18 வகையான முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இங்கு 3,000 முதலைகள் உள்ளன.
இது தவிர, இங்கு பாம்பு வகைகளும், ஆமைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பண்ணைக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மிக நீளமான 5 அனகோண்டா வகை பாம்புகள் கொண்டு வரப்பட்டன.
வர்தா புயல் காரணமாக, இங்குள்ள முதலைகளின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊர்வன தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தப் பண்ணையிலும் 80 -க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. இந்தச் சேதத்தை சரிகட்ட, தன்னார்வலர்களிடம் இருந்து இணையவழியாக ரூ.1.35 லட்சம் நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது.
Dailyhunt
No comments:
Post a Comment