Friday, December 16, 2016

ஆச்சர்யம்... டிராஃபிக்கில் சிக்கினார் தமிழக முதல்வர்!

டிராஃபிக்
பொதுவாகவே தமிழகத்தில் முதல்வர்கள் மீது மக்களுக்கு அதிக வெறுப்பு வளர முக்கிய காரணமாக இருப்பது டிராஃபிக் ஜாமை ஏற்படுத்துவதுதான். ஜெயலலிதா முதன்முறையாக தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றபோது மக்களிடையே வெறுப்பை சம்பாதித்தற்கு இதுவும் ஒரு காரணம். வீட்டில் இருந்து ஜெயலலிதா புறப்படும் போதே அனைத்து பகுதிகளிலும் டிராஃபிக்கை மூடுவது போலீசாரின் வழக்கமாக இருந்தது. அந்த சமயத்தில் பள்ளிக்குச் செல்வோர் அலுவலகம் போவோர் என பலரும் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பார்கள்.

ஜெயலலிதா மட்டுமல்ல தமிழக முதல்வர்களாக பொறுப்புக்கு வரும் யாரும் மக்களோடு மக்களாக பயணிக்கத் தயாராக இருந்தது இல்லை. தங்கள் பயணத்துக்காக உடனடியாக டிராஃபிக்கை மூடி வைப்பதுதான் வழக்கம். கருணாநிதி முதல்வராக இருந்தாலும் அதுதான் நடக்கும் ஏன் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது கூட கோவை போன்ற பெரு நகரங்களில் கமாண்டோக்கள் புடை சூழ 50 கார்கள் பின்னால் அணி வகுக்க வலம் வந்தவர்தான். அதனால்தான் தவறை உணர்ந்திருக்கிறோம் என்று கடைசி சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் கதறிய போது கூட மக்கள் காதுகொடுத்துக் கேட்கவில்லை.

அடிக்கடி கேரளத்தை நாம் உதாரணத்துக்கு சொல்வோம். தலைவர்களை மக்களாக பாருங்கள் என்பதுதான் கேரள மக்களின் பாலிசி. கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் ரயில் நிலையத்தில் கையில் குடை வைத்துக் கொண்டு சாதாரணமாக அமர்ந்திருப்பது போல புகைப்படங்கள் இணையத்தில் உலா வரும். கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி பதவியில் இருந்து விலகிய பிறகு திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்கு ஒரு விழாவுக்கு பங்கேற்க சென்றார். திரும்புகையில் ரயிலை தவற விட அரசுப் பேருந்தில் கொச்சியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பயணித்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தக் கூட, கேரள தற்போதைய முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் ஒரே விமானத்தில் பயணித்து ஒரே காரில் விமான நிலையத்தில் இருந்து ராஜாஜி ஹாலுக்கு வந்து சேர்ந்தனர்.

பொதுவாகவே தமிழகத்தைப் பொறுத்தவரை தனிநபர் வழிபாடும், துதிபாடும் குணமும் அதிகமாக இருப்பதால், தலைவர்களை தெய்வமாகத் தொண்டர்கள் பார்க்கத் தொடங்கி விடுகின்றனர். தலைவர்களை நாம்தான் உருவாக்குகிறோம் என்பதை மறந்து விடுகின்றனர். அதனால்தான் தலைவருக்காக இறத்தல் கூட பெருகிக் கொண்டே போகிறது. ஒரு தலைவர் சென்றால் இன்னொரு தலைவர் வருவார் என்ற மனநிலை இல்லாத தன்மையும் ஒரு காரணம். இதனால்தான் இந்தியாவில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருந்தாலும் நம்மால் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள முடியவில்லை. ஒருவேளை சினிமா சார்ந்த முதல்வர்களே கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு விட்டதால் மக்கள் மனநிலை அப்படி மாறிப் போயிருக்கலாம்.

இப்போது தமிழகத்தில் பன்னீர்செல்வம் என்ற டீக்கடை மனிதர் முதல்வராகியிருக்கிறார். எளிமையான மனிதர். அதிர்ந்து பேசாதவர். தனது தலைமைக்கு கடைசி வரை விசுவாசமாக இருந்தவர். அதிமுகவில் அவர் முதுகெலும்புடன் இருக்கிறார். இல்லாமலும் போகிறார். அதிமுக தலைமையை கைப்பற்றுகிறார். கைப்பற்றாமல் போகிறார். இதுவெல்லாம் நமக்கும் தேவையில்லை. அதிமுகவின் உள்கட்சி விவகாரம் அது. ஆனால், இப்போது முதல்வர் என்ற வகையில் நல்லாட்சியைத் தர வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

பன்னீர் செல்வம் நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் சென்னையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சென்னை சார்மியர் சாலையில் நேற்று முதல்வர் பன்னீர்செல்வத்தின் கான்வாய் மக்களுடன் மக்களாகவே சென்றுள்ளது. ஏற்கெனவே புயலால் டிராஃபிக் விளக்குகள் சேதமடைந்து விட, முதல்வரின் காரும் டிராஃபிக்கில் சிக்கியுள்ளது. சார்மியர்ஸ் சாலையில் சுமார் 15 நிமிடங்கள் முதல்வரின் கான்வாய் நின்றுள்ளது. பின்னர் போலீசார் முதல்வர் கான்வாய் செல்ல வழி ஏற்படுத்தித் தந்துள்ளனர். தொடர்ந்து முதல்வரின் கான்வாய் பயணத்தை தொடங்கியுள்ளது.

பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024