அம்மா...
By ஆசிரியர் | Published on : 06th December 2016 05:06 AM
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால், நிரப்ப முடியாத வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறுவது வெற்று வார்த்தைகள் அல்ல, நிஜம். தமிழக அரசியல் சரித்திரத்தில் இப்படியொரு அசைக்க முடியாத அதிகாரத்துடனும், ஆதரவுடனும் எந்தவொரு கட்சியின் தலைவரும் இருந்ததில்லை. தமிழகத்தின் கடைக்கோடி அடித்தட்டு மக்கள் வரை, தனது மக்கள் நலத் திட்டத்தால் சென்றடைந்து அவர்களால் பாசத்தோடு "அம்மா' என்று அழைக்கப்படும் நிலைக்கு தன்னை வளர்த்திக் கொள்ள அவரால் முடிந்தது என்பது வரலாற்றுப் பதிவு.
காமராஜருக்கும், எம்.ஜி.ஆருக்கும் பிறகு மக்களிடம் தனது ஆட்சி தொடர மீண்டும் தேர்தல் வெற்றியை ஈட்டியவர் ஜெயலலிதா மட்டுமே. அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கி அடுத்த 15 ஆண்டுகள் அவர் மறையும்வரைத் தலைமை தாங்கி வழி நடத்தினார் என்றால், அவருக்குப் பிறகு கடந்த 29 ஆண்டுகளாக அந்தக் கட்சியைக் கட்டிக் காத்து நடத்தி வந்த பெருமை ஜெயலலிதாவைத்தான் சாரும்.
1989, 1996, 2006 என்று மூன்று தேர்தல் தோல்விகளையும், 1991, 2001, 2011, 2016 என்று நான்கு வெற்றிகளையும் அவரது தலைமையின் கீழ் அ.தி.மு.க. எதிர்கொண்டது. ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும், அவரது அரசியல் வருங்காலம் முடிந்து விட்டதாக ஆரூடம் கூறியவர்கள், அவர் "பீனிக்ஸ்' பறவையாய் சாம்பலிலிருந்து மீண்டெழுந்து வந்ததைப் பார்த்து மிரண்டு போனதைச் சரித்திரம் பதிவு செய்திருக்கிறது. ஜெயலலிதாவின் அரசியல் கிராஃப் மிகவும் விசித்திரமானது. அவர் எதிரிகளால் மூலைக்குத் தள்ளப்படும் போதெல்லாம் சீறியெழுந்து தான் இழந்த இடத்தை மீண்டும் பிடித்திருக்கிறார்.
ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் இன்னுமொரு ஆச்சரியம் காணப்படுகிறது. அவரது அரசியல் பிரவேசத்திலிருந்து தொடங்கி, ஒவ்வொரு மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்தும் ஒரு மிகப் பெரிய பின்னடைவு இருந்தவண்ணம் இருந்து வந்திருக்கிறது.
1982-ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆரால் கட்சிக்குள் கொண்டு வரப்பட்டு அ.தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளராக அறிமுகப்படுத்தப்பட்டு, அடுத்த சில மாதங்களிலேயே அவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய அசுர வளர்ச்சி அ.தி.மு.க.விலேயே பலரையும் எதிர்ப்புக் குரல் எழுப்ப வைத்தது. இப்படியே போனால், எம்.ஜி.ஆர். அவரைத் துணை முதல்வராக அறிவிக்கக்கூடும் என்று பேசப்படும் அளவுக்கு அவரது வளர்ச்சி இருந்தது.
ஆனால், 1984-இல் எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டு அமெரிக்கா சென்றது, திரும்பி வந்த பிறகும் ஜெயலலிதாவைப் பார்க்காமல் இருந்தது என்று ஏறத்தாழக் கட்சியில் ஓரங்கட்டப்பட்ட நிலைமை. எம்.ஜி.ஆரைச் சுற்றி இருந்தவர்கள் ஜெயலலிதாவைக் கட்சியிலிருந்து விலக்கிவிட முயற்சி எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், 1987-இல் எம்.ஜி.ஆர். காலமானார். அது ஜெயலலிதாவைத் தலைவியாக்கியது. அ.தி.மு.க. பிளவுபட்டு ஜெயலலிதா அணி தனித்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாலும், ஜானகி அணி அடைந்த படுதோல்வி ஜெயலலிதாவை எம்.ஜி.ஆரின் இயற்கையான வாரிசாகத் தூக்கிப் பிடித்தது. அதே வேகத்தில், ஜெ, ஜா அணிகள் இணைப்பு, 1989 மக்களவைத் தேர்தல், காங்கிரஸýடன் கூட்டணி என்று வளர்ந்து 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. வரலாறு காணாத வெற்றியை பெற்றது.
1991 வெற்றி என்றால் 1996-இல் படுதோல்வி. தொடர்ந்து வழக்குகள். இத்துடன் முடிந்தது ஜெயலலிதாவின் சகாப்தம் என்று நினைத்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியாக 1998 மக்களவைத் தேர்தலும் 2001 சட்டப்பேரவைத் தேர்தலும் அமைந்தன. மீண்டும் முதல்வர் பதவி அவரைத் தேடி வந்தது. அந்த வெற்றியின் மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை. அவரது தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பதவி விலகினார். சிறிது இடைவெளி. மீண்டும் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகிறார். ஆனால், தொடர்ந்து 2004 மக்களவைத் தேர்தலிலும் 2006 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தோல்வி. ஏறுமுகத்தைத் தொடர்ந்து இறங்குமுகம்.
2011 சட்டப் பேரவைத் தேர்தல் ஜெயலலிதாவுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து மீண்டும் முதல்வராக்கியது. அடுக்கடுக்காக அவர் அறிவித்த இலவசத் திட்டங்கள் அவரை அனைவருக்கும் "அம்மா'வாக்கின. தொடர்ந்து, 2014 மக்களவைத் தேர்தலில் 39 இடங்களில் 37 இடங்களை அ.தி.மு.க. தனித்து நின்று வெற்றி பெற்றது. இனி ஜெயலலிதா ஓர் அசைக்க முடியாத சக்தி என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இடியெனத் தாக்கியது பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பு.
நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பும் அதைத் தொடர்ந்து சிறைவாசமும் அவரை நிலைகுலைய வைத்துவிட்டன. அந்த அதிரடித் தாக்குதலில் இருந்து ஜெயலலிதா மனதளவில் மீளவே இல்லை என்றுதான் கூற வேண்டும். அவரது உடல்நிலை இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இப்போது மரணத்தைத் தழுவி இருப்பதற்கு நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்புதான் காரணம் என்று சரித்திரம் பதிவு செய்தால் வியப்பதற்கில்லை.
பதவி விலகி, உச்சநீதிமன்ற இடைக்காலத் தடை , பெங்களூரு உயர்நீதிமன்ற விடுதலை ஆகியவற்றிற்குப் பிறகு அவர் மீண்டும் முதல்வராகப் பதவி ஏறினார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தனிப் பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியையும் அமைத்து சாதனையும் புரிந்தார். அவரது ராசி மீண்டும் வேலை செய்தது. இந்த முறை உடல்நிலையை பாதித்து முடக்கி அவரது வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டிருக்கிறது.
வெற்றி தோல்வி என்று மாறி மாறிப் பயணித்து, மக்களின் இதய சிம்மாசானத்தில் ஏறி அமர்ந்து விட்டவர் ஜெயலலிதா. அவரது ஆட்சியைப் பற்றி எத்தனையோ குறைகளைக் கூறலாம். ஆனால் ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையையும், அவரது ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட சட்டம், ஒழுங்கு முறையும், வாரி வழங்கப்பட்ட சமூக நலத் திட்டங்களும், இலவசங்களும், எல்லாவற்றிற்கும் மேலாக பெண்மைக்குத் தரப்பட்ட மரியாதையும் பாதுகாப்பும் தமிழகம் உள்ள வரை நினைவுகூரப்படும்.
உலக சரித்திரத்தில் முதன்முதலாக ஒரு நடிகை நாடாள முடியும், தங்கத் தாரகை தலைவியாக அரசியல் இயக்கத்தை வழிநடத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் ஜெயலலிதா. சரித்திரம் படைத்த உலகப் பெண்மணிகளின் பட்டியலில் இஸ்ரேலின் கோல்டா மேயர், இங்கிலாந்தின் மார்கரெட் தாட்சர், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோருடன் ஜெயலலிதாவும் இடம் பெறுவார் - அவர் பிரதமராக ஆக முடியவில்லை என்றாலும் கூட!
""மக்களால் நான்; மக்களுக்காக நான்'' என்கிற அவரது கூற்றுக்கு ஏற்ப வாழ்ந்து மறைந்திருக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் ஈடுசெய்ய முடியாத இழப்பால் தமிழகம் தத்தளித்து நிற்கிறது. "தினமணி' அந்த மீளாச் சோகத்தில் பங்கு கொள்கிறது!
வெகு சிலர் மட்டுமே மறைந்தும் நினைவுகூரப்படுவர். அவர்களில் நிச்சயமாக ஜெயலலிதாவும் ஒருவர்!
No comments:
Post a Comment