Friday, December 9, 2016

துக்ளக் அல்ல சாணக்கியன்!

துக்ளக் அல்ல சாணக்கியன்!

By ஆசிரியர்  |   Published on : 08th December 2016 01:30 AM 
அப்பல்லோ மருத்துவமனையில் "சோ' ராமசாமி அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவரை நலம் விசாரிக்க வந்தார். "சோ, நான் உயிரோடு இருக்கும்வரை உங்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது. நீங்கள் போய்விட்டால் எனக்கு ஆதரவாகவும், பக்கபலமாகவும் வேறு யாரும் இல்லாமல் போய்விடும்' என்று அவரிடம் ஜெயலலிதா கூறினாராம். அவர் விழைந்தது போலவே, ஜெயலலிதா மறைந்த அடுத்த நாள் "சோ' ராமசாமியும் காலமாகி இருக்கிறார்.
அவசரநிலைச் சட்டம் அறிவிக்கப்பட்டபோது, "துக்ளக்' இதழ் அதை எதிர்கொண்ட விதமும், ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையிலான இயக்கத்துக்கு அவர் அளித்த ஆதரவும், அகில இந்திய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. காமராஜருடன் அவருக்கு இருந்த நெருக்கம் மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. சந்திரசேகர், அத்வானி, ராமகிருஷ்ண ஹெக்டே என்று
பல தேசியத் தலைவர்களின் நட்பை அவசரநிலையும் அதைத் தொடர்ந்து அமைந்த ஜனதா ஆட்சியும் ஏற்படுத்திக் கொடுத்தன.
தமிழக அரசியலில் "சோ' ராமசாமியின் பங்கு, எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகுதான் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. 1987 முதல் 2016 வரை ஏதாவது வகையில் தமிழக அரசியலை திரைமறைவிலிருந்து வழிநடத்திச் சென்றவர் "சோ' ராமசாமி எனலாம். 1990-இல் தி.மு.க. அரசு கலைக்கப்பட்டதற்கு, "சோ' ராமசாமியின் பங்களிப்புதான் முக்கியமான காரணம்.
ஜெயலலிதா 1991-இல் ஆட்சியில் அமர்வதற்கு "சோ' ராமசாமி காரணமல்ல என்றாலும், தி.மு.க.வை எதிர்கொள்ள ஜெயலலிதாதான் சரியான சக்தி என்கிற அளவில் அந்த ஆட்சிக்கு "சோ' ராமசாமி ஆதரவளித்தார். அதேநேரத்தில், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி பல ஊழல்களில் சிக்கியபோது, அந்த ஆட்சியை அகற்றத் துணிந்து களமிறங்கியவரும் "சோ'தான். காங்கிரஸிலிருந்து மூப்பனார் பிரிந்து தமிழ் மாநிலக் காங்கிரஸைத் தொடங்கியது, அந்தக் கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் கூட்டணி ஏற்படுத்திக் கொடுத்தது, அந்தக் கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவைப் பெற்றுத் தந்தது, அதன்மூலம் 1996 தேர்தலில் அ.தி.மு.க.வைப் படுதோல்வி அடையச் செய்தது எல்லாமே "சோ' ராமசாமியின் அரசியல் வியூகத்தின் வெற்றிகள்.
1996-இல் அ.தி.மு.க.வை வீழ்த்திய "சோ' ராமசாமிதான், 1998-இல் அ.தி.மு.க. மீண்டும் உயிர்த்தெழுவதற்கும் வழி வகுத்தார். பா.ஜ.க.வுடனானஅ.தி.மு.க.வின் கூட்டணி 1998 மக்களவை தேர்தலில் பெரும் வெற்றிபெற்று, மத்திய அரசிலும் அ.தி.மு.க. பங்குபெற வழிகோலியது. அடுத்த ஆண்டிலேயே, அ.தி.மு.க. தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் வாஜ்பாயி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை இழந்தபோது, தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளின் ஆதரவை பா.ஜ.க.வுக்குப் பெற்றுக் கொடுத்து 1999 தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உதவியதும் அவரேதான்.
2001 தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு காங்கிரஸ், த.மா.கா., பா.ம.க., இடதுசாரிகள் என்று கூட்டணி ஏற்படுத்தி, தி.மு.க.வை வீழ்த்த ஆலோசனை வழங்கியவர் "சோ'. 2011 தேர்தலில், விஜயகாந்தின் தே.மு.தி.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் இணைத்தவர் "சோ'தான் என்பதையும் நாடறியும்.
இப்படி தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாக ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர் இருக்க முடிந்திருக்கிறது என்பதுதான் "சோ' ராமசாமியின் தனித்துவம். நடிகராக, நாடக ஆசிரியராக, திரைப்படக் கதாசிரியர், வசனகர்த்தாவாக, இயக்குநராக அவருக்கு இருக்கும் கலைத்துறை முகங்கள் பல. வழக்குரைஞர், அரசியல், சட்ட பொருளாதார ஆலோசகர் என்பது அவரது இன்னொரு முகம்.
12 மேடை நாடகங்கள், 10 திரைப்படக் கதை வசனங்கள் என்பதுடன் நின்றுவிடவில்லை அவரது எழுத்து. ஏறத்தாழ 100 புத்தகங்கள் எழுதி இருக்கிறார். அவரது மகாபாரதம் பேசுகிறது, வால்மீகி ராமாயணம், ஹிந்து மகா சமுத்திரம், இந்து தர்மம், அன்றைய வேதங்கள் முதல் இன்றைய விவகாரங்கள்வரை என்று இந்து மதம் குறித்து, சாமானியனும் புரிந்து கொள்ளும் வகையில் அவர் எழுதியிருக்கும் புத்தகங்கள் காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷங்கள். இவை "சோ' ராமசாமி என்கிற அதிசய மனிதனின் மேதாவிலாசத்தைப் பல தலைமுறைகள் எடுத்துரைக்கும்.
தான் கொண்ட கருத்தை, எந்தவிதத் தயக்கமோ, அச்சமோ இன்றி எடுத்துரைப்பதுதான் பத்திரிகை தர்மம் என்று கருதியவர் "சோ'. அதனால்தான் அவருடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களும்கூட, "சோ' என்ன சொல்கிறார் என்பதைப் படிக்கத் தவறவில்லை.
"துக்ளக்' பத்திரிகை ஆசிரியர் "சோ' ராமசாமியின் மறைவால் இந்தியா ஒரு பன்முகத்தன்மையுள்ள ஆளுமையை இழந்திருக்கிறது. சோ ராமசாமியின் கருத்துகளுக்கு முரண்பட்டவர்களும்கூட, அவரை வெறுத்ததில்லை. அவரது விமர்சனத்துக்கு ஆளானவர்கள்கூட அவரைத் தனிப்பட்ட முறையில் குறை கண்டதில்லை. அதற்குக் காரணம் அவரிடம் இருந்த உள்ளத் தெளிவும், உண்மைத்தன்மையும்.
அவர் தான் போற்றி வணங்கிய மகாகவி பாரதியின், "உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம்' என்கிற வார்த்தைக்கு இலக்கணமாக இருந்து மறைந்த "சோ' ராமசாமியின் மரணத்தால், தமிழகம் நல்லதொரு வழிகாட்டியை இழந்து நிற்கிறது!

No comments:

Post a Comment

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...