வங்கி அதிகாரிகளின் மோசடிகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் பொதுமக்கள் கொதித்து...
சென்னை,
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோல, வங்கி அதிகாரிகளின் மோசடிகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் பொதுமக்கள் கொதித்து எழுந்தால் இந்த நாடு தாங்குமா? என்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.
போலி ஆவணங்களுக்கு கடன்
சென்னை மயிலாப்பூரில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா என்ற வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றியவர் கிருஷ்ணதாஸ். இவர், கடந்த 2002–ம் ஆண்டு முதல் 2004–ம் ஆண்டு வரை இப்பதவியில் இருந்த போது, கோவர்தன், சுந்தர்ராஜன் உள்பட பலருக்கு, அவர்கள் நடத்தி வந்த நிறுவனங்களுக்கு கடன் கொடுத்துள்ளார்.
இந்த கடனுக்கு உத்தரவாதமாக கொடுக்கப்பட்ட சொத்து ஆவணங்கள் போலியானது ஆகும். இதுகுறித்து வந்த தகவலின் அடிப்படையில், சி.பி.ஐ. போலீசார் கடந்த 2007–ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் வங்கி மேலாளர் கிருஷ்ணதாஸ், கோவர்தன், சுந்தரராஜன், கிரிஜா, ஹரினிவாசனி, கார்த்தி, ராஜேஸ்வரி, வினோத், கார்த்திகா, பாலகுரு, சண்முகம், ராஜாராமன், முருகன், ராஜேந்திரன், முரளி, சம்பத், கிருஷ்ணன், தாமோதரன் ஆகியோர் மீது குற்றம் சுமத்தியிருந்தனர்.
பரபரப்பான தீர்ப்பு
இவர்கள் கூட்டுச்சதி செய்து, போலி ஆவணங்கள் மூலம் பெருந்தொகை கடன் பெற்று, வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. அதிகாரிகள் தாக்கல் செய்வதற்கு முன்பே, கோவர்தன், முரளி, சம்பத், கிருஷ்ணன், தாமோதரன் ஆகியோர் இறந்து விட்டனர். மீதமுள்ளவர்கள் மீது குற்றம் சுமத்தி குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு 11–வது கூடுதல் சி.பி.ஐ. செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.வெங்கடசாமி நேற்று பரபரப்பான தீர்ப்பை அளித்தார். அந்த தீர்ப்பில் நீதிபதி கே.வெங்கடசாமி கூறியிருப்பதாவது:–
முன்னேற்றத்துக்கு தடை
இந்த வழக்கில் சி.பி.ஐ. சுமத்தியுள்ள குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கடுமையான மோசடிகளுக்கு வங்கியின் மூத்த அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு, ஆதாய நோக்கில் கோடிக்கணக்கில் கடன் அளிக்கின்றனர். இப்படிப்பட்ட வங்கி அதிகாரிகளால் தான், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தடைகள் ஏற்படுகின்றன.
நம் நாட்டில் கோடிக்கணக்கான இளைஞர்கள் உயர் படிப்புகளை படித்திருந்தும், ஒரு சாதாரண சிறிய வேலை கூட கிடைக்காமல், அன்றாட ஜீவனத்திற்கு கஷ்டப்படுகின்றனர். இதற்கு உதாரணம் சொல்லவேண்டும் என்றால், கடந்த 9–ந்தேதி செய்திதாளில் வெளியான செய்தியை படித்து பார்த்தபோது, நெஞ்சை உலுக்கியது.
துப்புரவு பணியாளர் பதவி
அலகாபாத் நகராட்சியில் காலியாக உள்ள 119 துப்புரவு தொழிலாளர்கள் பணியிடங்களை நிரப்ப விளம்பரம் வெளியாகியுள்ளது. அதில் இந்தியில் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் பி.சி.ஏ., பி.டெக்., எம்.பி.ஏ. போன்ற உயர்கல்வியை முடித்தவர்கள்.
ஒரு சாதாரண துப்புரவு பணியாளர் பணிக்கு முதுநிலை பட்டதாரிகள் பலர் பேர் விண்ணப்பம் செய்திருப்பதன் மூலம், இந்த பணியாவது தங்களுக்கு கிடைத்து, அதன்மூலம் தங்களது வாழ்க்கையை கழிக்க முடியாதா? என்று பரிதவிக்கும் நிலையில் அவர்கள் உள்ளனர் என்பது தெளிவாகுகிறது.
வராக்கடன் அறிவிப்பு
இப்படிப்பட்ட சூழ்நிலையில், உயர் பதவியில் இருக்கும் வங்கி அதிகாரிகள், விதிமுறைகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு, முக்கிய புள்ளிகளுக்கும், வேண்டியவர்களுக்கும் கடன்களை வாரி இறைக்கின்றனர். பின்னர் அந்த நபர்கள் கடனை திருப்பித்தராத பட்சத்தில், அவற்றை வராக்கடனாக அறிவித்து விடுகின்றனர். ஆனால் சாதாரண கடன் வாங்கித் திருப்பித்தர முடியாத ஏழைகளை மிரட்டி, விரட்டி வங்கி அதிகாரிகள் கடனை வசூலிக்கின்றனர்.
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்படும்போது, வங்கி உயர் அதிகாரிகள் தவறு செய்கின்றனர் என்பதை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரே தன் வாதத்தில் குறிப்பிட்டுள்ளார். அது செய்தியாக பத்திரிகைகளில் அண்மையில் வெளியாகியுள்ளது. அப்படிப்பட்ட தவறு செய்யும் அதிகாரியாகத்தான் இந்த வழக்கில் முதல் எதிரி, கிருஷ்ணதாஸ் உள்ளார்.
குளியல் அறையில் பணம் பதுக்கல்
இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக அச்சடித்த ரூ.2 ஆயிரம் நோட்டுகள், வங்கிகளுக்கு வந்து பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கு பதிலாக, பெரும் புள்ளிகளின் குளியலறையிலும், சொகுசு கார்களிலும், பங்களாக்களிலும் மொத்தமாக பதுக்கி வைக்கப்படுகிறது.
ஆனால், தங்களது சேமிப்பு கணக்கில் போட்ட பணத்தை கூட முழுமையாக எடுக்க முடியாமல், ரூ.2 ஆயிரம் நோட்டுக்காக பொதுமக்கள் வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். அப்படி வரிசையில் நிற்கும் சிலருக்கு பணமும், பலருக்கு ஏமாற்றமும் கிடைக்கிறது. அதிலும், சிலர் வரிசையில் நிற்கும்போதே உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு நல்ல திட்டங்களை போட்டாலும், அதை முனைப்புடன் செயல்படுத்த வேண்டிய வங்கி அதிகாரிகளின் செயல்பாடுகள் எதிர்மறையாக இருக்கிறது.
சாது மிரண்டால்?
படித்த இளைஞர்கள் எல்லாம் சாதாரண, சிறிய வேலை கூட கிடைக்காமல் பரிதவிக்கின்றனர். ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்ற பழமொழி தமிழில் உள்ளது. இதுபோன்ற கொடுமைகள் பொறுத்துக்கொள்ள முடியாமல் மொத்தமாக பொதுமக்கள் கொதித்து எழுந்தால் இந்த நாடு தாங்குமா? என்று பயப்படக் கூடிய சூழ்நிலையை இதுபோன்ற வங்கி அதிகாரிகள் உருவாக்குகின்றனரோ? என்ற அச்ச உணர்வு ஏற்படுகிறது.
வங்கி மோசடி தொடர்பாக வழக்குகள் பதிவு செய்வதிலும், விசாரித்து முடிப்பதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் இந்த மோசடி வழக்குகளில் சிக்கும் வங்கி அதிகாரிகளுக்கு வயதாகி விடுகின்றன. அவர்கள் தங்களது வயோதிகத்தை சொல்லி கருணை காட்டவேண்டும். குறைவான தண்டனையை வழங்கவேண்டும் என்று கோர்ட்டில் முறையிடுகின்றனர்.
கருணை காட்ட முடியுமா?
மோசடி வழக்குகளை விரைவாக விசாரித்து தண்டனை வழங்கப்பட்டால் தான், தண்டனைக்கு பயந்து இதுபோன்ற மோசடிகளில் வங்கி அதிகாரிகள் ஈடுபடமாட்டார்கள். எனவே இதுபோன்ற மோசடிகளுக்கு, காலதாமதம் என்பதும் ஒரு காரணியாக அமைந்து விடுகிறது.
தற்போது இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவர்களில் சிலர் வயோதிகர்களாக உள்ளனர். இவர்களுக்கு தண்டனையில் கருணை காட்டமுடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் இவர்கள் செய்த குற்றச்செயல்களானது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடியதாக உள்ளது.
5 ஆண்டு சிறை
தொடர்ந்து வங்கி அதிகாரிகள், பெரும்புள்ளிகளுக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் கடனை கொடுத்து, நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்துகின்றனர். இதுபோன்ற கரும்புள்ளி அதிகாரிகளை கடுமையாக தண்டித்தால் தான் ஓரளவு மோசடிகளை கட்டுப்படுத்த முடியும் என்று கருதுகிறேன்.
எனவே, இந்த வழக்கில் வங்கிக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளதோ, அதை ஈடு செய்யும் விதமாக குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும் என்று முடிவு செய்கிறேன்.
போலி ஆவணங்களின் அடிப்படையில் கடன் வழங்கிய வங்கி மேலாளர் ஆர்.கிருஷ்ணதாசுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கிறேன். விசாரணைக்கு முன்பே மறைந்த கோவர்தன் நடத்தி வந்த, மெசர்ஸ் மார்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்துக்கு ரூ.58 லட்சம் அபராதம் விதிக்கிறேன்.
ரூ.2.85 கோடி இழப்பீடு
சுந்தரராஜனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.51 லட்சம் அபராதமும், ஹரினிவாசினிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.54 லட்சம் அபராதமும், கார்த்திகாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.33 லட்சம் அபராதமும், வினோத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.54 லட்சம் அபராதமும் விதிக்கிறேன்.
இந்த அபராத தொகையில் ரூ.2.85 கோடியை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, மயிலாப்பூர் கிளைக்கு இழப்பீடாக வழங்கவேண்டும்.
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட கிரிஜா உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று முடிவு செய்து வழக்கில் இருந்து விடுதலை செய்கிறேன். இவ்வாறு நீதிபதி வெங்கடசாமி தன்னுடைய தீர்ப்பில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment