ராமமோகன ராவ் வீட்டின் முன்பு ஆர்பரிக்கும் தனி ஒருவன்!
தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் நடத்தப்பட்டு வரும் சோதனை குறித்து மக்களுக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஒருவர், தலைமைச் செயலாளர் வீடு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக தலைமைச் செயலாளராக இருந்து வருபவர் ராமமோகன ராவ். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் அமர்த்தப்பட்டார். அவருக்கு அடுத்தப்படியாக ராமமோகன ராவ் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். அப்போது, புயல் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை முன்வைத்தார். முதல்வர் ஒருபக்கம் இருந்தாலும், அரசின் அனைத்து நடவடிக்கைகளிலும் ராமமோகன ராவின் கையே ஓங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை அண்ணாநகரில் உள்ள ராமமோகன ராவ் வீடு, அலுவலகம் மற்றும் அவரது மகனுக்கு தொடர்புடைய 13 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையால் தமிழக அரசு அதிகாரிகள் கலக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, ராமமோகன ராவ் வீட்டின் முன்பு ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் திடீரென போராட்டத்தில் குதித்துள்ளார். அப்போது, தலைமைச் செயலாளர் வீட்டில் என்ன சோதனை நடைபெறுகிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சோதனையின்போது காவலர்கள் ஏன் நிறுத்தப்படவில்லை என்று கேள்வி எழுப்பியவாறு இருந்து கொண்டே இருந்தார்.
மேலும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வீட்டில் சோதனை நடத்துங்கள், ஏன் அதிமுகவை மட்டும் குறி வைத்து சோதனை நடத்தி வருகிறீர்கள் என்று பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பினார். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செந்தில்குமார் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். அப்போது, அவர் தலையில் வைத்திருந்த கட்சி தொப்பியை அவர்கள் பிடுங்கிக் கொண்டதோடு மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருந்தவர்கள், தாக்குதல் நடத்தியவர்களை அங்கிருந்து அனுப்பி விட்டனர்.
ராமமோகன ராவ் வீட்டில் நடத்தப்படும் சோதனை குறித்தும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் தனி ஒருவர் கோஷங்கள் எழுப்பியவாறு நின்று கொண்டு இருப்பதால் அந்த இடமே பரபரப்புடன் காணப்படுகிறது.
No comments:
Post a Comment