Friday, December 16, 2016

ரிசர்வ் வங்கி டூ சேகர் ரெட்டி! - சி.பி.ஐ வலையில் தமிழக அமைச்சர்கள்


அரசு ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டைத் தொடர்ந்து, அவருக்கு பணத்தை மாற்றிக் கொடுத்த வகையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் சிக்குகின்றனர். 'வருமான வரித்துறையில் பிடிபட்ட சேகர் ரெட்டிக்குச் சொந்தமான பணம் மற்றும் தங்கம் உள்ளிட்டவை சி.பி.ஐயின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டன. எப்போது வேண்டுமானாலும் அதிரடி நடவடிக்கைகள் பாயலாம்' என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரத்தில்.

வேலூர், காட்பாடியைச் சேர்ந்த பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி, அவருடைய உறவினர் சீனிவாச ரெட்டி மற்றும் கீழ்பாக்கம் கார்டனைச் சேர்ந்த பிரேம் குமார் ஆகியோரது வீடுகளில் கடந்த வாரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து 170 கோடி ரூபாய் பணமும் 130 கிலோ தங்கமும் பிடிபட்டன. மூன்று நாள் நடத்தப்பட்ட சோதனையில் ரெட்டியின் காரில் இருந்து 24 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கார்டன் வட்டாரத்திற்கு நெருக்கமான ரெட்டியின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது, அ.தி.மு.க அமைச்சர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் நெருங்கிய நண்பரான பிரேம் குமார் வீட்டிலும் ரெய்டு நடந்ததையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். குறிப்பாக, 'சேகர் ரெட்டியின் பணத்தை தங்கமாக மாற்றிக் கொடுத்ததில் பிரேம் குமாரின் பங்கு மிக முக்கியமானது' என்கின்றனர் அதிகாரிகள். " புதிய இரண்டாயிரம் ரூபாய்களை மாற்ற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

ஆனால், ரெட்டியின் வீட்டில் இருந்து 34 கோடி ரூபாய்க்குப் புதிய நோட்டுக்கள் பிடிபட்டுள்ளன. அட்டைப் பெட்டிகளில் சீல் பிரிக்கப்படாமல் இருந்த புதிய ரூபாய் கட்டுக்களைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ந்து போய்விட்டனர். அரசு அச்சகத்தில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் வழக்கமாக ரிசர்வ் வங்கியின் மைய அலுவலகத்துக்கு அனுப்பப்படும். பின்னர் அந்தப் பணம் வங்கிகளுக்குப் பிரித்து வழங்கப்படும். வங்கிகளுக்குச் செல்ல வேண்டிய பணம், நேரடியாக சேகர் ரெட்டியின் வீட்டிற்குச் சென்று சேர்ந்துவிட்டது. இந்த விவகாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். அச்சகத்தில் அடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் சீரியல் எண்களையும் ரெட்டியின் வீட்டில் பிடிபட்ட ரூபாய் நோட்டுக்களின் சீரியல்களையும் சரிபார்த்து வருகின்றனர். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள வங்கி அதிகாரிகளை சி.பி.ஐ வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ரிசர்வ் வங்கியின் மைய அலுவலகங்களில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது" என்கிறார் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர்.

" ஓர் இடத்தை குறிவைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வை நடத்தினால், அங்கு கைப்பற்றப்படும் பணத்தை பி.டி எனப்படும் வருமான வரித்துறை கணக்குக்குள் கொண்டு வருவது வழக்கம். ஆனால், சேகர் ரெட்டி உள்பட மூன்று பேர் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டில் பிடிபட்ட பணம் மற்றும் தங்கத்தை பி.டி கணக்கிற்குள் கொண்டு வரவில்லை. மொத்தப் பணத்தையும் தங்கத்தையும் சி.பி.ஐ கொண்டு போய்விட்டது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ என மூன்று துறையின் அதிகாரிகளும் சேகர் ரெட்டியின் தொடர்புகளை ஆராய்ந்து வருகின்றனர். பாரிமுனையில் உள்ள மார்வாடிகள் துணையோடு கறுப்புப் பணத்தை தங்கமாக மாற்றிக் கொடுத்து வந்தார் பிரேம் குமார். மத்திய அரசின் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது அறிவிப்பிற்குப் பிறகு, தங்கமாக மாறிய பரிவர்த்தனைகளை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தினர். அதன் விளைவாகவே பிரேம் குமாரும் அவரைத் தொடர்ந்து சேகர் ரெட்டியும் வசமாக சிக்கினர். ரெட்டி கைதால் கார்டன் வட்டாரம் அதிர்ந்தாலும் சி.பி.ஐ வளையத்தில் பிரேம் சிக்கியிருப்பது ஆளும் கட்சியின் அமைச்சர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள், தங்கமாக மாறிய ரூபாய்கள் என பல தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் தகவல்களும் அடுத்தகட்ட ரெய்டுக்கு நாள் குறித்துத் தந்திருக்கிறது" என்கிறார் வருமான வரித்துறையின் புலனாய்வு அதிகாரி ஒருவர்.

தமிழக அரசின் சீனியர் அமைச்சர்கள் தொடர்போடு கடந்த ஐந்தாண்டுகளில் ரெட்டி குவித்த கோடிகள்; அதற்கான பின்னணி; ஆதாயம் அடைந்த அமைச்சர்கள் என சி.பி.ஐ செல்லும் பாதையை அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர் ஆளும்கட்சி புள்ளிகள். கொங்கு மண்டலத்தை குறிவைத்து அடுத்த ரெய்டு நடக்கலாம் என்ற பேச்சுக்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024