பசுவதைக்கும், ஜல்லிக்கட்டுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்.. எதிர்ப்பாளர்களை சாடும் ஜல்லிக்கட்டு ஆர்வலர் நர்மதா
தலைப்பாகை, இடுப்பில் துண்டு, வேட்டி அணிந்து விவசாயி போன்ற தோன்றத்தில் ஜல்லிக்கட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முற்பட்ட நர்மதா போலீஸாரால் கைது செய்யப்படுகிறார். இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகிறது.
ஜல்லிக்கட்டுக்கு பலரும் பலவிதமான போராட்டத்தை நடத்தினாலும் இந்தப் பெண்ணின் போராட்டம் அதிகம் கவனம் ஈர்ப்பதாக இருந்தது.
யார் இந்த நர்மதா என்ற தேடலின்போது நிறைய தகவல்கள் நமக்குக் கிடைத்தன.
ராஜபாளையத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர் நர்மதா. சென்னையில் வளர்ந்துள்ளார், எம்.ஏ., எம்.பில். முடித்துப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். அப்பா மதுப்பழக்கத்தின் பாதிப்பால் இறந்தவர் என்பதால் மதுவுக்கு எதிரான செயற்பாட்டாளராகவும் இருக்கிறார்.
காவிரிப் பிரச்சனைக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். அம்பத்தூர் தொகுதியில் சுயேட்சையாக நின்று தேர்தலிலும் களம் கண்டிருக்கிறார். கணவர் நந்தகுமார் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இரு குழந்தைகள், குடும்பம் என கூட்டுக்குள் சுருங்கிவிடாமல், போராட்டக் களத்தில் இறங்கி சிறகு விரித்திருக்கிறார்.
இதுகுறித்து நர்மதாவிடம் நம்மிடம் கூறியதாவது:
சென்னையிலேயே பிறந்து வளர்ந்தாலும், என் பூர்வீகத்தின் மீது அலாதிப் பிரியம் எனக்கு. அதனால் அங்கு தண்ணீர்ப் பிரச்சனை ஏற்பட்டபோது, போராட ஆரம்பித்தேன். சொக்கலிங்கபுரம், மீனாட்சிபுரம் கிராமங்களில் தொடங்கிய பணி, இன்று காவிரிப் பிரச்சனைக்காகவும், ஜல்லிக்கட்டுக்காகவும் டெல்லிப் பயணம் வரை நீண்டுள்ளது.
ஜல்லிக்கட்டு மீதான போராட்டத்தை எப்படித் தொடங்கினீர்கள்?
அடிப்படையிலேயே எனக்கு இலக்கியங்கள் மீது ஈடுபாடு அதிகம். காடும், காடு சார்ந்த பகுதியுமான முல்லை நிலத்தில் ஆயர்கள் வாழ்ந்தார்கள். அவர்களிடம் ஆநிரைகள் (கால்நடைகள்) இருந்தன. அவற்றைப் பாதுகாக்க வீரம்மிக்க காளைகள் வளர்க்கப்பட்டன. அவற்றைப் பாதுகாக்கும் வலிமை கொண்ட ஆண்களை, காளைகளை அடக்கியவர்களை முல்லை நிலப் பெண்கள் மணந்தார்கள். கலித்தொகையில் இதற்கான பாடல்கள் அமையப் பெற்றுள்ளன.
சங்க இலக்கியங்களில் வெட்சிப்போர் ஆநிரைகளைக் கவர்ந்து செல்வதையும், கரந்தைப் போர் அவற்றை மீட்டு வருவதையும் பேசுகிறது. இவை அனைத்தும் ஆதித்தமிழ்க் கலாச்சாரம்.
ஜல்லிக்கட்டு நம் கலாச்சாரத்தில் பிண்ணிப் பிணைந்திருக்கிறது. ஆனால், நீதிபதிகளோ கணினியில் ஜல்லிக்கட்டை விளையாடச் சொல்கிறார்கள்.
இம்முறை ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்புள்ளதா?
நடைபெறுமா என்ற அச்சத்தை விட, நடைபெற வேண்டும் என்ற உறுதிதான் அதிகமாக இருக்கிறது. தமிழக அரசியல் கட்சிகளின் ஒற்றுமை இல்லாததால் இந்த நிலையில் இருக்கிறோம். அவர்கள் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தால் நிச்சயம் ஜல்லிக்கட்டு நடக்கும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், விளைவுகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும். தற்போது அதிமுகவில் குழப்பமான சூழ்நிலை நிலவுவதால், திமுக ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
மாநில அரசு, எந்த வகையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
தற்போது உத்தரப் பிரதேச தேர்தலில் மட்டுமே மத்திய அரசு குறியாக இருக்கிறது. அங்கு வெற்றி பெறவேண்டும் என்பதைக் கவுரவப் பிரச்சினையாகப் பார்க்கிறது. உத்தரப் பிரதேச தேர்தல் மேலுள்ள அவர்களின் கவனத்தை நம்மீது திருப்பினால் மட்டுமே இது நடக்கும்.
நான் உச்ச நீதிமன்ற தடை உத்தரவை மீறச்சொல்லவில்லை. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டமியற்றலாமே? அதை அரசு செய்ய முக்கியமான தலைவர்கள் வலியுறுத்த வேண்டும். சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டவர்கள் குரல் கொடுக்கவேண்டும்.
அதுதவிர விஷால், த்ரிஷா உள்ளிட்டோர், ஜல்லிக்கட்டுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றனர். தமிழ்ப்படங்களில் நடித்து சம்பாதித்துக்கொண்டே, தமிழ்க்கலாச்சாரத்தை எதிர்க்கும் நடிகர்களின் படங்களைப் பார்க்கக்கூடாது என்று தமிழ் மக்கள் உறுதியேற்க வேண்டும்.
மாடுகள் வளர்க்கும் ஆசை உண்டா?
(சிரிக்கிறார்... ) நான் சாணி அள்ளி, மாட்டைக் குளிப்பாட்டிவிட்டுத்தான் கல்லூரிக்கே செல்வேன். சென்னை அண்ணா நகரில் நிறைய நாட்கள் மாடு மேய்த்திருக்கிறேன்.
விவசாயிகளிடம் பேசினீர்களா?
ஆம், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆனால் நீதிமன்ற உத்தரவு காரணமாக பயப்படுகிறார்கள். ஆனாலும் சிலர் எனக்கு முழுமையாக ஆதரவு அளிக்கின்றனர்.
பீட்டா அமைப்பு குறித்து?
உள்நாட்டு உருவாக்கங்களுக்கு எதிராகச் செயல்படும் அமைப்பு அது. அசைவப் பழக்கத்தை தடை செய்யச்சொல்ல பீட்டாவால் முடியுமா? நாயை வீட்டில் கட்டிப்போட்டு, பறவைகள், கிளிகளை கூண்டில் அடைப்பதை வதைப்பதாக அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? ஏன் விவசாயிகள் மீது மட்டும் இந்த துவேஷம் என்று புரியவில்லை.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து சில ஆண்டுகள் முன்னர் வரை நாம் காளை மாடுகளை விவசாயத்துக்குப் பயன்படுத்தினோம். எனில் விவசாயிகள் பசுவதை செய்தார்கள் என்று அந்த அமைப்பு சொல்கிறதா? பசுவதைக்கும், ஜல்லிக்கட்டுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்தான் பெரிய பெரிய அமைப்புகளில், பொறுப்புகளில் இருக்கிறார்கள்.
சில சக்திகள் ஜல்லிக்கட்டை ஒழித்து, தமிழர்களின் வீர உணர்வைக் குலைக்க எண்ணுகின்றன.
அதனால்தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்க ஆசைப்பட்டேன். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி பாலமேடு வாடிவாசலுக்கு மாட்டு வண்டியில் வந்து போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தேன். அதற்கான ஏற்பாடுகளுடன் தலைப்பாகை, இடுப்பில் துண்டு, வேட்டி அணிந்துகொண்டு விவசாயி போன்ற தோன்றத்தில் கிளம்பினேன். இதற்கு முன்னால் மாட்டு வண்டி ஓட்டிப் பழக்கம் இல்லையென்றாலும் துணிந்து இறங்கினேன்.. ஆனால் அதற்குள் போலீசாருக்குத் தகவல் தெரிந்துவிட்டது. அவர்கள் என்னைக் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
அரசு வழங்கிய மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட இலவசங்களை மறுத்துவிட்டீர்களாமே?
ஆம், இலவசங்களின் மீது எனக்கு விருப்பமில்லை. அவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதியை கிராமங்களின் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தலாம் அல்லவா..
மது விற்ற காசைக் கொண்டு இலவசங்கள் அளிக்கின்றனர். என்னுடைய உறவினர்களில் பலர் இன்று குடிகாரர்களாக இருக்கின்றனர். என்னுடைய அப்பா குடிப்பழக்கத்தால்தான் அவர் உயிரை விட்டார். அந்தப் பணத்தில் இருந்து வழங்கும் இலவசங்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இன்றுவரை ஆட்டுரலில் தான் அரைத்துக் கொண்டிருக்கிறேன்.
ஜல்லிக்கட்டு விரைவில் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதுவரையில் எங்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்கிறார் வீரத் தமிழச்சி நர்மதா.
No comments:
Post a Comment