Tuesday, December 20, 2016



சந்தேகம் சரியா 14: மாரடைப்பைத் தடுக்குமா `ஸ்டாடின்’ மாத்திரை?)

டாக்டர் கு. கணேசன்

எனக்கு வயது 50. என் அப்பாவுக்கு மாரடைப்பு வந்து `பை பாஸ்’ ஆபரேஷன் நடைபெற்றது. மாரடைப்பு பரம்பரையாக வரும் என்று படித்திருக்கிறேன். அதனால் எனக்கும் மாரடைப்பு வந்துவிடுமோ எனப் பயப்படுகிறேன். ‘ஸ்டாடின்’ மாத்திரை சாப்பிட்டால், மாரடைப்பு வராது எனக் கேள்விப்பட்டேன். இது சரியா?

இது சரியல்ல!

மாரடைப்பு வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இது பரம்பரை வழியிலும் வருகிறது என்பது உண்மை. குடும்பத்தில் யாருக்காவது இந்தப் பிரச்சினை இருந்திருக்குமானால், அவர்களுடைய வாரிசுகளுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஆண் 55 வயதுக்குக் குறைவாகவும், பெண் 65 வயதுக்குக் குறைவாகவும் இருந்து மாரடைப்பு வந்திருக்குமானால், அவர்களுடைய வாரிசுகளுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். இது பொதுவான கருத்து.

பரம்பரை மட்டுமல்ல

உங்கள் அப்பாவுக்கு மாரடைப்பு வந்திருக்கிறது என்பதை மட்டும் வைத்துக்கொண்டு உங்களுக்கும் மாரடைப்பு வரும் என்று முடிவு செய்யக் கூடாது. பொதுவாக, ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிகக் கொலஸ்ட்ரால், புகைப் பழக்கம், உடல் பருமன், உடல் உழைப்பும் உடற்பயிற்சியும் இல்லாத சோம்பல் வாழ்க்கை, பரம்பரை ஆகிய காரணிகள் மாரடைப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.

இவற்றில் ஏதாவது இரண்டு காரணி கள் உங்களுக்கு இருக்குமானால், உடனடியாக இதய நிபுணரிடம் சென்று, இதய நோய் தொடர்பான முழு உடல் பரிசோதனையைச் செய்துகொள்ளுங்கள். அதில் உங்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு தெரிந்தால், டாக்டர் ஆலோசனைப்படி ஸ்டாடின் மாத்திரையை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டாடின் மாத்திரை மாரடைப்பை வர விடாமல் தடுக்கும் நல்லதொரு மருந்துதான். ஆனால், சரியான காரணம் இல்லாமலும் தேவையில்லாமலும், டாக்டர் பரிந்துரைக்காமலும் அதை எடுத்துக் கொள்ளக் கூடாது.

மாத்திரை போதாது

மாரடைப்புக் காரணமாகும் எல்.டி.எல். கொலஸ்ட்ராலை ஸ்டாடின் மாத்திரை 35 சதவீதம் மட்டுமே குறைக்கிறது. கொலஸ்ட்ரால் இரண்டு வழிகளில் ரத்தத்தில் அதிகரிக்கிறது.

கல்லீரல் HMG CoA Reductase எனும் என்சைமின் துணையோடு சுயமாகக் கொலஸ்ட்ராலைத் தயாரித்து ரத்தத்துக்கு அனுப்புவது ஒரு வழி. நாம் சாப்பிடும் உணவிலிருந்து ரத்தத்துக்கு நேரடியாகக் கொலஸ்ட்ரால் கிடைப்பது மற்றொரு வழி. ஸ்டாடின் மாத்திரை HMG CoA Reductase எனும் என்சைமைச் செயலிழக்கச் செய்வதால், கல்லீரலில் கொலஸ்ட்ரால் உற்பத்தியாவது தடுக்கப்படுகிறது; ரத்தக் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. அதே நேரம், உணவிலி ருந்து கிடைக்கும் கொலஸ்ட்ரால் ரத்தத்தில் இருக்கத்தான் செய்யும். எனவே, ரத்த கொலஸ்ட்ராலைக் குறைக்க ஸ்டாடின் மாத்திரை மட்டுமே போதாது. ஸ்டாடின் மாத்திரையோடு உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சிகளும் தேவை.

கட்டுப்பாடு அவசியம்

எல்.டி.எல். கொலஸ்ட்ராலை நேரடியாக அதிகரிக்கும் செரிவுற்ற கொழுப்பு (Saturated fats) உணவுகளான பாமாயில், நெய், வெண்ணெய், வனஸ்பதி, பால் பொருட்கள், இறைச்சி, தேங்காய் எண்ணெய், பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இதயத்துக்கு ஆபத்து தருகிற டிரான்ஸ் கொழுப்பை அதிகரிக்கும் நொறுக்கு தீனிகளை நெருங்கக் கூடாது. துரித உணவையும் மென்பானங்களையும் ஓரங்கட்ட வேண்டும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மிகுந்த மீன் உணவைச் சாப்பிட வேண்டும். வெள்ளைப் பூண்டு சாப்பிட வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவை ரத்தத்தில் எல்.டி.எல். கொலஸ்ட்ராலைக் குறைத்து, ஹெச்.டி.எல். கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்து மாரடைப்பைத் தடுக்கும்.

இவை தவிர, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடல் எடையைக் கட்டுப்படுத்த வேண்டும். நீரிழிவு நோயை நெருங்கவிடக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது. மன அழுத்தம் ஆகாது. இப்படிப் பல விஷயங்களில் கவனம் செலுத்தினால்தான் மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியுமே தவிர, ஸ்டாடின் மாத்திரையை மட்டும் நம்புவது நல்லதல்ல!

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024