Tuesday, December 6, 2016

ராஜாஜி மண்டபத்தில் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டது: பொதுமக்கள் அஞ்சலி

சென்னை,


பொதுமக்கள் அஞ்சலிக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளது


முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணி அளவில் மரணம் அடைந்தார். இதையொட்டி அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதுபற்றி அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் திரளாக குவிந்தனர்.இதனிடையே ஆஸ்பத்திரியில் இருந்து ஜெயலலிதா உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஜெயலலிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.


பின்னர் ஜெயலலிதா உடல் போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. அதன்பிறகு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்திற்கு காலை 5.50 மணியளவில் போயஸ் கார்டனில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டது.


ஆயுதம் தாங்கிய போலீஸ் வாகனங்களுடன் ஜெயலலிதா உடல் எடுத்துச்செல்லப்பட்டது. ஜெயலலிதா வழக்கமாக கோட்டைக்கு செல்லும் கடற்கரை சாலை வழியாகவே அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டது. காலை 6.10 மணியளவில் அவாது உடல் ராஜாஜி அரங்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.


ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அதிகாலை முதலே பொதுமக்கள் அதிமுக தொண்டர்கள் ராஜாஜி அரங்கில் குவிந்துள்ளனர். இன்னும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ராஜாஜி அரங்கில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024