Wednesday, December 21, 2016

'

சசிகலா சோனியா ஆக வேண்டாம்!

By மாலன்  |   Published on : 21st December 2016 02:07 AM 


தாயே தலைமை ஏற்க வருவாயே' என்று வருந்தி அழைத்துக் கொண்டிருந்தன சுவரொட்டிகள். இந்த அழைப்பை ஏற்பாரா? ஏற்பது தகுமா? முறையா? இது தர்மம்தானா என இரவுப் பொழுதுகளில் தொலைக்காட்சிகள் உரக்க விவாதித்துக் கொண்டிருக்கின்றன.
ஏற்றாலும் மறுத்தாலும் என்ன பெரிய மாற்றம் இங்கு நேர்ந்து விடப் போகிறது? ஆட்கள் மாறுவார்கள், அதிகாரங்கள் கை மாறும். ஆனால் அடிப்படைகள் மாறப்போவதில்லை, அதே கூழைக்கும்பிடுகள், ஜாதியையும் பணத்தையும் முன்னிறுத்திய அதே அரசியல், அதே ஆடம்பரப் பதாகைகள், ஒப்புக்கு ஓர் உட்கட்சி ஜனநாயகம்,இதுவரை இருந்த இன்ன பிற லட்சணங்களோடு பயணம் தொடரப் போகிறது என்ற எள்ளலோடு சாதாரண மக்கள் அந்தச் சுவரொட்டிகளையும் விவாதங்களையும் கடந்து போகிறார்கள்.
ஆனால் வரலாறு சிரிக்கிறது. வாய் விட்டல்ல. "இன்னும் என்னவெல்லாம் நடக்கும் என எனக்குத் தெரியாதா' என இதழ்க் கடையில் ஓர் இளநகையை ஒளித்துக் கொண்டு அது ஒதுங்கி நிற்கிறது வேடிக்கை பார்க்க.
பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் பார்த்த காட்சிகள் படங்களாக அதன் முன் விரிகின்றன. இதே போல் ஒரு டிசம்பர். ஆண்டு 1997. அரசியலுக்கு வரப்போவதில்லை என கணவர் மறைவின்போது அறிவித்திருந்த சோனியா காந்தி, ஆறு ஆண்டு மௌனத்தைக் கலைத்து, அடுத்த ஆண்டு அதாவது 1998 மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்யவிருப்பதாக அறிவிக்கிறார்.
அப்படி அறிவிக்கும்போது அவர் கட்சித் தலைவராகிவிடவில்லை. அப்போது கட்சியின் தலைவர் சீதாராம் கேசரி. கட்சி உறுப்பினர்களால் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்.
அவராகப் பதவி விலகினால் நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நான் ஏதும் புரட்சி செய்து அவரைக் கவிழ்த்து அந்தப் பதவிக்கு வர விரும்பவில்லை என்று சோனியா தன்னைத் தலைமை ஏற்கக் கோருகிறவர்களிடம் சொல்லி விடுகிறார்.
முதலில் கேசரியின் செல்லப் பிள்ளைகள் அகமது படேலும், குலாம் நபி ஆசாத்தும் மெல்ல அவரிடம் விஷயத்தைச் சொல்லி விலகிவிடுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். "அடப் போங்கப்பா அந்த அம்மா என்னைப் பதவி விலகச் சொல்லியிருக்காது. இதெல்லாம் அர்ஜுன் சிங் வேலை. நீங்கள் எல்லாம் அர்ஜுன் சிங் சொல்லித்தான் என்னிடம் வந்து பேசுகிறீர்கள் என எனக்குத் தெரியாதா' என்று சிரித்துக் கொண்டே மறுக்கிறார்.
இது வேலைக்காகாது என்றதும் சீனியர்கள் களம் இறங்குகிறார்கள். பிராணப் முகர்ஜி, ஏ.கே. அந்தோணி, ஜிதேந்திர பிரசாத் மூவரும் "கௌரவமா இறங்கிடுங்க, என்னத்துக்குப் பொல்லாப்பு' என்று கோடிகாட்டிப் பேசுகிறார்கள்.
கேசரி அசைந்து கொடுக்கவில்லை. சோனியா ஆதரவாளர்கள் புரட்சியைத் தொடங்குகிறார்கள். பிரணாப், அந்தோணி, பிரசாத் இவர்களோடு சரத் பவாரும் சேர்ந்து கொள்ள, நால்வரும் கூடிக்கூடிப் பேசுகிறார்கள்.
அதிரடியாக நடவடிக்கை எடுத்து விடலாம் என்ற ஜிதேந்திர பிரசாத், சரத் பவார் யோசனைக்கு பிரணாப் முகர்ஜியும், அந்தோணியும் இணங்கவில்லை. கொஞ்சம் அவகாசம் கொடுத்துப் பார்க்கலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள். களத்தில் இறங்கி ஆதரவு திரட்டும் பொறுப்பு அர்ஜுன் சிங்கிடமும் செயலர் வின்சென்ட் ஜார்ஜிடமும் ஒப்படைக்கப்படுகிறது
கேசரியின் ஆதரவாளர்களும் கட்சியின் பொதுச் செயலாளர் தாரிக் அன்வர் தலைமையில் களம் இறங்குகிறார்கள்.
கட்சியின் செயற்குழுவைக் (காங்கிரஸில் அதற்குப் பெயர் காரியக் கமிட்டி) கூட்டுமாறு சீனியர்கள் கேசரியை நெருக்குகிறார்கள். "அப்படி ஏதும் செய்துவிடாதீர்கள், கூட்டினால் அங்கு தீர்மானம் நிறைவேற்றி உங்களைப் பதவியிலிருந்து இறக்கிவிடுவார்கள்' என்று தாரிக் அன்வர் கோஷ்டி கேசரியை எச்சரிக்கிறது. செயற்குழுவைக் கூட்டாமல் காலம் கடத்தி வருகிறார் கேசரி. ஆனால் தள்ளிப்போட முடியாத சூழல் ஏற்படுகிறது.
1998-ஆம் ஆண்டு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைகிறது. அது குறித்து விவாதிக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகமாக, கேசரி மார்ச் 5, 1998 அன்று செயற்குழுவைக் கூட்டுகிறார். செயற்குழுவில் காங்கிரஸின் நாடாளுமன்றப் பிரிவுக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தடுக்க வேண்டும் என்ற யோசனை முன் மொழியப்படுகிறது (அப்போது அந்தப் பதவியிலும் கேசரிதான் இருந்தார்).
"நாடாளுமன்றப் பிரிவுத் தலைவராக தான் வர வேண்டும் என்பதற்காக பவார் செய்யும் சூழ்ச்சி இது, சோனியா கட்சித் தலைவராக ஆனால் அவரே நாடாளுமன்றப் பிரிவின் தலைவராகவும் ஆக முயற்சிப்பார் என்பது தெரியாமல் பவார் இதைச் செய்கிறார், ஏமாந்து போவார்' என்று தாரிக் அன்வரிடம் கேசரி சொல்கிறார். அதெப்படி முடியும், சோனியா எம்.பி. ஆக இல்லையே என்று தாரிக் குழம்புகிறார்.
ஆனால் கேசரி சொன்னதே நடந்தது. எம்.பி. ஆக இல்லாமலேயே சோனியா நாடாளுமன்றப் பிரிவின் தலைவராக ஆனார். அதற்காக கட்சியின் விதிகள் திருத்தப்பட்டன.
திரைமறைவு வேலைகளின் அழுத்தம் அதிகரித்து நெருக்கடி முற்றியபோது, சோனியாவை சந்திக்கிறார் சீதாராம் கேசரி. "நானே ராஜிநாமா செய்து விடுகிறேன்' என்ற முடிவை அவர் தெரிவித்தபோது சோனியா கேட்ட ஒரே கேள்வி: "எப்போது?'
செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, அதில் தான் ராஜிநாமா செய்யும் விருப்பத்தை அறிவிக்கிறார் கேசரி.
ஆனால் ஒரு நிபந்தனையும் விதிக்கிறார். "நான் அதிகாரபூர்வமாக எனது ராஜிநாமாவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (இதுதான் காங்கிரஸின் பொதுக்குழு) கூட்டத்தில்தான் அறிவிப்பேன்.
அவர்கள் தான் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களிடம் நான் ராஜிநாமாவைக் கொடுப்பதுதான் முறை' என்கிறார். இது காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பாராத திருப்பம். அதிர்ச்சி.
ஒன்பது நாள்களுக்குப் பின் மார்ச் 14 அன்று மறுபடியும் செயற்குழு கூடுகிறது. 11 மணிக்கு கூட்டம். கூட்டம் தொடங்க சிலமணி நேரத்திற்கு முன் பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்கள் பிரணாப் முகர்ஜி வீட்டில் கூடி இரு அறிக்கைகளில் கையெழுத்து இடுகிறார்கள்.
ஒன்று காலதாமதம் செய்யாமல், கேசரி பதவி விலக வேண்டும். இரண்டு, கேசரி விலகுவதால் காலியாகும் கட்சித் தலைவர் பதவிக்கு சோனியா வர வேண்டும்
செயற்குழு கூட்டம் தொடங்கியதும், பிரணாப் முகர்ஜி, சீதாராம் கேசரி ஆற்றிய சேவைகளுக்கு நன்றி தெரிவிக்கும் உரையைப் படிக்கிறார். "என்ன நடக்கிறது இங்கே? இப்போது எதற்கு இது?' என்கிறார் கேசரி. "காங்கிரஸ் கட்சியின் விதி எண் 19, உட்பிரிவு ஜெ படி எடுக்கப்பட்ட முடிவு' என்கிறார் பிரணாப்.
விசேஷமான தருணங்களில் செயற்குழு அதற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அப்பாலும் முடிவெடுக்கலாம். ஆனால் அந்த முடிவுகளுக்கு ஆறு மாதங்களுக்குள் பொதுக்குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்கிறது விதி.
"விதி வலிது' என விரக்தியும் கோபமுமாக கேசரி கூட்டத்திலிருந்து வெளியேறுகிறார். உள்ளே "எங்கள் புதிய தலைவர் சோனியா வாழ்க' என்று கோஷங்கள் எழுகின்றன.
இவ்வளவு அமர்க்களத்திற்கு நடுவே கட்சியின் தலைமைப் பதவிக்கு வந்த சோனியா, 2004-இல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோது பிரதமர் பதவியை ஏற்க மறுத்து விட்டார். தியாகி என்ற ஒளிவட்டம் தலைக்குப் பின் சுழன்றது.
அவர் பதவி ஏற்காததற்கான காரணங்கள் பல. அதையடுத்து எழுந்த விமர்சனங்கள் பல. அந்த விமர்சனங்களில் கவனிக்கத்தக்கது இந்தக் கேள்வி: ஆட்சியில் இருந்தால் அதன் செயல்களுக்கு பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்லாமல் அதிகாரத்தை அனுபவிக்கும் வாய்ப்பிருக்கும்போது ஏன் போய் பதவியில் உட்கார்ந்து கொண்டு அல்லல்பட வேண்டும்?
அ.தி.மு.க. காங்கிரஸ் அல்ல. ஆனால் காங்கிரஸுக்கும் அ.தி.மு.க.விற்கும், ஏன் தனி ஒருவரை நம்பி நடத்தப்படுகிற எந்தக் கட்சிக்கும், சில ஒற்றுமைகள் உண்டு.
அவற்றில் ஒன்று, ஒப்புக்கு உட்கட்சி ஜனநாயகம் என்ற நடைமுறை. கட்சி அமைப்புகளின் பதவிக்கு முறையான தேர்தல் மூலம் அல்லாமல் தலைமையின் விருப்பு வெறுப்பின் பேரில் நியமனங்கள் செய்வது.
இரண்டு, அந்தக் கட்சிகள் அடித்தளத்தில் உள்ள தங்களது அமைப்பு பலத்தாலும், தங்கள் வேட்பாளர்களின் சொந்த பணம், தனிப்பட்ட செல்வாக்கு, பலம் ஆகியவற்றாலும், மாறி மாறி வீசுகிறஅரசியல் அலைகளின் காரணத்தினாலும் தேர்தல்களில் வெற்றி பெற்றால்கூட அந்த வெற்றி, கட்சித் தலைவர் என்ற தனிநபரால் கிடைத்த வெற்றி என்ற பிரமையைக் கட்சிக்காரர்களிடம் உருவாக்குவது.
தலைவர்தான் நம்பர் ஒன், மற்றவர்கள் எல்லாம் பூஜ்ஜியங்கள். அந்த ஒன்றின் பின் அணிவகுத்தால்தான் அவர்களுக்கு மதிப்பு என்ற பிம்பத்தைக் கட்டமைத்து அவர்களைத் தன்னம்பிக்கை இழக்கச் செய்வது. அதன் மூலமாக அந்தத் தலைமைக்கு எதிராக மன எழுட்சி கொள்ளாமல் அவர்களை மழுங்கிப்போகச் செய்வது.
இது 90-கள் அல்ல. தொண்ணூறுகளின் இறுதியில் காய் நகர்த்தல்கள் மூலம் கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு சோனியா வந்தார் என்றால் தொண்ணூறுகள் தொடங்குவதற்குச் சற்றுமுன் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஜெயலலிதாவும் போராடித்தான் அடைய முடிந்தது. இன்று அந்த நிலை இரண்டு கட்சிகளிலும் இல்லை. உட்காரச் சொன்னால் மண்டியிடத் தயார் நிலையில்தான் கட்சி அமைப்பு இருக்கிறது
அன்றைய சோனியா போல், கட்சிப் பொறுப்பு ஆட்சிப் பொறுப்பு இவற்றிற்கான அழைப்புகளுக்கு பதில் அளிக்காமல் இப்போது அமைதி காத்து வருகிறார் சசிகலா.
இன்று சசிகலா சோனியா அல்ல. ஆனால் நாளை அவர் சோனியா போல, ஆட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்காமல், கட்சியின் தலைமைப் பொறுப்பின் வழி அதிகாரத்தை அடைவது, அனுபவிப்பது, தக்க வைத்துக் கொள்வது என்ற வழியைத் தேர்வு செய்வாரோ?
அப்படி ஒரு முடிவுக்கு அவர் வந்தால், அது சாமானியனுக்கு அபாயகரமானதாக இருக்கும். இரட்டை அதிகார மையங்கள் உருவாகும் என்பதல்ல கவலை. சோனியாவின் வழிகாட்டலில் மன்மோகன் சிங் ஆண்ட ஆண்டுகளில்தான் ஊழல் உச்சம் பெற்றது.
சசிகலா மக்களைச் சந்தித்து வாக்குகள் பெற்று ஆட்சிப் பொறுப்பில் அமரட்டும். ஜெயலலிதாவைப் போல கட்சித் தலைமைப் பொறுப்பிலும் தொடரட்டும்.
ஆனால், இறைவா, அவர் இன்னொரு சோனியாவாக ஆக வேண்டாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024