Thursday, June 15, 2017

தலையங்கம்
தினசரி விலையில், பெட்ரோல்–டீசல்


ஜூன் 15, 03:00 AM

இந்தியா முழுவதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இருசக்கர வாகனம் என்பது சாதாரண தொழிலாளியின் வாழ்க்கையிலும் ஒரு அங்கமாக போய்விட்டது. எவ்வளவு ஏழ்மை நிலையில் உள்ளவர்களும்கூட தங்கள் வாழ்க்கை சக்கரத்தை ஓட்ட கண்டிப்பாக ஒரு இருசக்கர வாகனம் தேவை என்றநிலை ஏற்பட்டுள்ளது. இதுபோல, வங்கிகளில் மோட்டார் வாகனங்கள் வாங்குவதற்கு என தனியாக கடன்கள் கொடுக்கும் நிலையில், நடுத்தர வர்க்கத்தினர்கூட தினசரி பயன்பாடு இல்லையென்றாலும், அவசரத்திற்காகவோ, வாரம் ஒருமுறை அல்லது எப்போதாவதோ குடும்பத்தோடு செல்வதற்கு ஒரு கார் வாங்கிக்கொள்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. 2002–ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை 11 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துகொண்டே போகிறது. தற்போதுள்ள நிலவரப்படி, ஒவ்வொரு குடும்பத்திலும் மோட்டார் வாகனம் என்பது ஆடம்பர பொருளல்ல, அத்தியாவசிய பொருளாகிவிட்டது. இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் ஏறத்தாழ 2 கோடியாகிவிட்டது. இவ்வளவு வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கும் பெட்ரோல்–டீசல் விலை என்பது குடும்ப பட்ஜெட்டில் ஒரு முக்கிய செலவாக கருதப்படுகிறது.

தற்போதுள்ள நிலவரப்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் எவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறதோ?, அதற்கேற்பவும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்புக்கு ஏற்பவும் பெட்ரோல்–டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 1–ந்தேதியும், 16–ந்தேதியும், பெட்ரோல் பங்க்குகளில் விலை அறிவிக்கப்படுகிறது. ஆனால், சர்வதேச சந்தையில் இந்த கச்சா எண்ணெய் விலை என்பது தினசரி ஏற்ற–இறக்கத்தை காண்கிறது. பெரும்பாலான நாடுகளில் தினசரி சந்தை விலைக்கேற்ப பெட்ரோல் பங்க்குகளில் சில்லறை விற்பனையும் அதற்கேற்ற விலையில்தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவை எடுத்துக்கொண்டால், ‘இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன்’, ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரே‌ஷன்’ மற்றும் ‘இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரே‌ஷன்’ ஆகிய 3 நிறுவனங்கள் மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் என்றவகையில், அவர்களுடைய பெட்ரோல் பங்க்குகளில்தான் பெரும்பாலும் நாடுமுழுவதும் பெட்ரோல் – டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

நாளை முதல் பெட்ரோல் – டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. இதன்மூலமாக மோட்டார் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு அதிக விலை உயர்வோ, அல்லது அதிக விலைக்குறைப்போ இனி பெட்ரோல்–டீசலுக்கு இருக்காது. சில காசுகள் என்ற வகையில்தான் விலை உயர்வோ, விலைக்குறைப்போ இருக்கும். ஏற்கனவே கடந்த மே மாதம் முதல் உதய்பூர், ஜாம்ஷெட்பூர், புதுச்சேரி, சண்டிகார் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் இவ்வாறு தினசரி விலைநிர்ணயம் செயல்படுத்தப்பட்டு வெற்றிகரமான பலனைத்தந்துள்ளது. ஆனால், இந்தமுறையில் தங்களுக்கு பெரிய கஷ்டங்கள் இருப்பதாக ‘பெட்ரோல் பங்க்’ உரிமையாளர்கள் கருதுகிறார்கள். ஏனெனில், தினமும் நள்ளிரவு 11.59 மணிக்கு இந்த விலைமாற்றம் அறிவிக்கப்படும். அதிகாலை 6 மணிக்கு பெட்ரோலியம் கம்பெனிகளிடம், ‘பங்க்’ உரிமையாளர்கள் தங்களிடம் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்ற தகவலை தெரிவிக்கவேண்டும். இதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது. விலைமாற்றத்தையும், பெட்ரோல் –டீசல் போடவரும் மக்களுக்கு தெரிவிக்கும்வகையில், தினமும் மீட்டரை மாற்றியமைக்கவேண்டும் என்று பல சிரமங்களை கூறினாலும், சாதாரண மக்களுக்கு இது மிகவும் பலன் அளிக்கும். வளர்ந்துவரும் நாடுகள் அனைத்திலும் இதே முறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. எல்லாப்பொருட்களின் விற்பனையும் அந்தந்தநாளின் விலை அடிப்படையில்தான் நடக்கிறது என்றவகையிலும், இந்த முறையை நிச்சயமாக வரவேற்கவேண்டும். ஆனால், இதிலுள்ள சிரமங்களை போக்குவதற்காக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதிலும், நடைமுறைகளை எளிமைப்படுத்துவதிலும், பெட்ரோலிய நிறுவனங்கள் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். வாடிக்கையாளர்களுக்கு செல்போனில் ‘எஸ்.எம்.எஸ்.’ மூலம் தினசரி விலையை தெரிவித்தால் நல்லது.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...