16 ஆண்டு சிறைவாசத்திலிருந்து விடுதலை : கொலை வழக்கில் கைதானவருக்கு கிடைத்தது நிம்மதி
பதிவு செய்த நாள்: ஜூன் 15,2017 00:05
புதுடில்லி: மைத்துனியை கொலை செய்த வழக்கில், 16 ஆண்டு சிறைவாசம் அனுபவித்தவரை, விடுதலை செய்ய, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மாமனார் வீடு : மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. கட்சிரோலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மடாநய்யா. இவர், மனைவி மற்றும் குழந்தைகளுடன், தன் மாமனார் வீட்டில் வசித்து வந்தார். இவரது மைத்துனி, கணவன் இறந்ததையடுத்து, தந்தை வீட்டில் வசிக்க வந்தார். அப்போது மடாநய்யாவுக்கு, மைத்துனியுடன் நெருக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், 2001ல் ஏற்பட்ட தகராறில், மைத்துனியை, மடாநய்யாதாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மைத்துனி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். மடாநய்யாவை போலீசார் கைது செய்தனர். கட்சிரோலி கோர்ட், மடாநய்யாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது; இதை, மும்பை ஐகோர்ட்டும் உறுதி செய்தது.
இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில், மடாநய்யா, மேல்முறையீடு செய்தார். மனுவில், 'மைத்துனியை, என் மனைவியைப் போல் தான் கருதினேன். தகராறில், அவளை அடித்தது உண்மை தான். ஆனால், எனக்கு கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் இல்லை' என, கூறியிருந்தார்.
வாக்குமூலம் இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அசோக் பூஷண், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, அளித்த தீர்ப்பில் கூறியதாவது: கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் இல்லை என, மனுதாரர் கூறியதை, இந்த கோர்ட் ஏற்கிறது. மனைவி கொடுத்த வாக்குமூலத்தை வைத்தே, குற்றவாளிக்கு, விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, மும்பை ஐகோர்ட்டும் உறுதி செய்துள்ளது. மனைவி, கணவனை வேண்டுமென்றே, வழக்கில் சிக்க வைக்க வும், வாக்குமூலம் கொடுத்திருக்க வாய்ப்பு உள்ளது.
அதிக ஆண்டு : கொலை நோக்கம் இல்லாத கொலை குற்றத்துக்கு, அதிகபட்சமாக, 10 ஆண்டு சிறை தண்டனை தான் விதிக்கப்படும். அதை விட அதிக ஆண்டுகள், சிறை தண்டனையை மனுதாரர் அனுபவித்துள்ளார். அதனால், அவரை உடன் விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
No comments:
Post a Comment