பெருமாளுக்கு 'பான் கார்டு:' தபால்காரர் தடுமாற்றம்
பதிவு செய்த நாள்19ஜூன்
2017
00:05
உத்திரமேரூர்: சிவன் மற்றும் பெருமாள் சுவாமிகள் பெயரில் அஞ்சல் வழியாக, 'பான்' கார்டு வந்துள்ளதால், அதை யாரிடம் அளிப்பது என, புரியாமல் அஞ்சலக ஊழியர் அலைகழிக்கப்படுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், சீதாவரத்தில், நஞ்சூண்டீஸ்வரர் கோவில், அரும்புலியூரில், ஸ்ரீவைகுண்ட பெருமாள் கோவில், பழவேரியில், கைலாசநாதர் கோவில்கள் உள்ளன. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில்களின் முகவரிக்கு, தபால் வந்துள்ளதாக அப்பகுதி அஞ்சலக ஊழியர் நேற்று கிராம வாசிகளிடம் கூறினார்.
அந்த தபால்களை யாரிடம் அளிப்பது என, குழம்பிய அவர், கிராம வாசிகளின் உதவியை நாடினார். தபால் கவரை பிரித்து பார்த்தால், அதிலிருக்கும் புகைப்படத்தை வைத்து, சம்பந்தப்பட்டவர்களிடம், அந்த அட்டைகளை கொடுத்து விடலாம் என, கிராமவாசிகள் யோசனை கூறினர்.
நல்ல யோசனையாக இருக்கிறதே என எண்ணிய தபால்காரர், தபாலை பிரித்த போது, இந்திய அரசு மற்றும் வருமானவரித்துறையின் பெயர்கள் அனைத்தும் பதிக்கப்பட்டிருந்த அந்த அட்டையில், யார் புகைப்படமும் இல்லை. இதனால், பெருமாள் மற்றும் சிவ பெருமான் பெயரில் வந்துள்ள, பான் கார்டை, யாரிடம் ஒப்படைப்பது என, தபால்காரர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்.
'பான் கார்டு' வந்தது குறித்து அரும்புலியூர் அஞ்சல் ஊழியர் கூறியதாவது:அரும்புலியூர், பழவேரி, சீத்தாவரம் கிராமங்களில் உள்ள கோவில்களுக்கு மிக தெளிவான முகவரியோடு, அந்தந்த சுவாமிகள் பெயரில் பான் கார்டு வந்துள்ளது. இதை யாரிடம் வழங்குவது என தெரியாததால், தபாலை பிரித்து புகைப்படம் இருக்கும் என பார்த்தால் அதில் யார் முகமும் இல்லை.எந்த ஆதாரம் அளித்து, யார் விண்ணப்பித்து இந்த கார்டு வந்துள்ளது என, தெரியவில்லை. கடந்த இரு தினங்களாக யாரிடம் இந்த பான் கார்டுகளை கொடுப்பது என, தெரியாமல் குழப்பமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment