Tuesday, June 20, 2017

வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு குடியுரிமை படிவம் அவசியம் இல்லை

பதிவு செய்த நாள்19ஜூன்
2017
22:14




'இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் இனி, 'எம்பார்கேஷன்' எனப்படும், குடியுரிமை படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை' என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் பயணிகள், 'எம்பார்கேஷன்' அல்லது 'டிப்பார்சர் கார்டு' எனப்படும் குடியுரிமைத்துறை படிவத்தை பூர்த்தி செய்வது அவசியமாக உள்ளது. இந்த படிவத்தில், சம்பந்தப்பட்ட நபரின் பெயர், பாஸ்போர்ட் எண், பிறந்த தேதி மற்றும் வெளியூர் சென்றதற்கான காரணங்களை விளக்க வேண்டும்.இதனால், பயணிகள் விமானத்திற்கு செல்வதற்கு தாமதம் ஏற்படுகிறது. இதை கருத்தில் வைத்து, வெளியுறவுத்துறை அமைச்சகம், ஜூன், 14ல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளிநாடு செல்லும் பயணிகளின் காலதாமதத்தை குறைக்கும் வகையில், 'ஜூலை, 1 முதல், 'எம்பார்கேஷன்' எனப்படும், குடியுரிமை படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை' என, அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.இந்த அறிவிப்பு, விமான பயணிகளுக்கு மட்டும் பொருந்தும். மற்றபடி, கப்பல் மூலமாக வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு, இந்த நடைமுறை பொருந்தாது.

இது குறித்து, விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போதுள்ள நடைமுறையில், வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள், 'விசா' மற்றும் டிக்கெட் பெற, தங்களை பற்றிய விபரங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், குடியுரிமைத்துறை சோதனையில், சம்பந்தப்பட்ட நபரின் விபரங்கள் சோதனை செய்து, பதிவு செய்யப்படுகிறது. மேற்கூறிய காரணங்களே போதுமென்ற அடிப்படையில், குடியுரிமை படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லையென வெளியுறவு அமைச்சகம் அறிவித்து உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 4.1.2025 AND 5.01.2025